செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4 ஆண்டுகளாக எரியாத மின்விளக்குகள் மற்றும் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை அடிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அருகே பொதுமக்கள் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் காமராஜர் சிலை அருகே இன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்தும், பரனூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும் இந்தக் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
கண்டன போராட்டம் ஏன் ?
பலமுறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அளித்தும், பல்வேறு நூதன முறைகளில் எதிர்ப்புகள் தெரிவித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைப் பராமரிப்புப் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாமல், கட்டணம் வசூலித்து "கட்டணக் கொள்ளை" நடத்தும் பரனூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், சமூக நல அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் ஒரு லிட்டர் கலந்துகொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியமாக இருப்பதாக கூறி எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் செய்தி தொடர்பாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மறைமலைநகர் முன்னாள் நகரத் தலைவர் கோபி கண்ணன், திமுக, அதிமுக, பாமக, விசிக, தேமுதிக, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.