தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதுராந்தகம் ஏரியில், சுற்றுச்சூழல் பூங்கா, படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், சுற்றுலாவை மேம்படுத்த, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் உள்ள ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர்.
ஐந்து மதகுகளில் இருந்து வெளியேறும் நீர், கால்வாய் வழியாக 30 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. மொத்தம் 7,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் मடுவு ஆகியவற்றிலிருந்து வரும் நீர், மதுராந்தகம் ஏரியின் முக்கிய நீராதாரம் ஆகும். மாவட்டத்தின் முக்கிய ஏரியான மதுராந்தகம் ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதையடுத்து, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஏரியை தூர்வாரும் பணி 2022ல் தொடங்கியது.
உபரி நீர் மேலாண்மை மற்றும் ஏரி சீரமைப்புப் பணிகள்
தூர்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் கலங்கல்களை கதவணைகளுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. மேலும் கட்டுமானப் பணிகளுக்காக கூடுதலாக, 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 172 கோடி ரூபாயில் மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டது. இப்பணி நடந்த மூன்று ஆண்டுகளில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள், போதிய தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர்.
எனினும் ஏரியை தூர்வாரி சீரமைத்ததால், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது 80 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டது. தற்போது ஏரியில் 50 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையின் போது, மதுராந்தகம் ஏரியில் முழு அளவு தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்காட்சி மையம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள்
இந்நிலையில், விவசாயத்திற்கு பெருமளவில் கைகொடுத்துள்ள நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாகவும் மதுராந்தகம் ஏரி உள்ளது. அதனால், ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றி மேம்படுத்த, அரசு திட்டமிட்டது. இதனால், மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை இணைந்து, சுற்றுச்சூழல் பூங்கா, படகு சவாரி மற்றும் குழந்தைகள் விளையாட்டுத் திடல், செயற்கை நீர் ஊற்று, நடைபாதை, இருக்கை வசதி, உணவுக் கூடம், வாகன நிறுத்தமிடம் என, பொழுதுபோக்கு மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி மையமும் அமைக்கப்பட உள்ளது.
