35 ஆண்டு பழமையான பெப்சி ஆலையில், பணியாற்றி வந்த ஊழியர்கள் திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டதாக கூறி ஊழியர்கள் உள்ளிறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

பணி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி-கோ இந்தியா (வருண் பேவரேஜ்) தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது.

ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட, தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைக்குள்ளேயே அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிநீக்கத்தால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக ஊழியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.  

Continues below advertisement

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கி பல ஆயிரம் கோடிகள் இலாபம் ஈட்டிய நிறுவனம், தற்போது புதிய தொழிற்சாலையைத் துவக்கி உற்பத்தியைத் தொடர்வதாகவும், அதே சமயம் பழைய தொழிற்சாலையை மூடுவதாகவும் அறிவித்துள்ளது.

ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

இதன் விளைவாக, நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த இந்தத் தொழிலாளர்களை மொத்தமாக சட்டவிரோதமாகப் பணி நீக்கம் செய்துள்ளது. முதலாளித்துவத்தின் இந்தச் செயல், தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் திடீரென வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவில் நிற்கதியாய் நிறுத்தியுள்ளது. 

தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். நீண்டகாலமாகப் பணியாற்றிய ஊழியர்களை எவ்வித ஈவிரக்கமும் இன்றி நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் சட்டவிரோத அராஜக செயல் என தெரிவித்தனர். 

ஊழியர்கள் கூறுவது என்ன ?

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன் என்பவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணியாற்றி வருகிறேன். திடீரென எங்களை வேலைய விட்டு நீக்கி இருக்கின்றனர். இதுகுறித்து முறையாக பதில் எதுவும் கொடுக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் முதிர் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து தொழிலாளர் துறையிலும் புகார் அளித்த பிறகு நிர்வாக தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் முறையாக வருவதில்லை. வேலைநீக்கம் செய்யப்பட்டது தான் என தெரிவிக்கின்றனர். எனது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.