திடீரென வந்த புகை.. பாதியில் நின்ற முதலமைச்சர் சென்ற ரயில்.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு..
"செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் அருகே முதலமைச்சர் சென்று கொண்டிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்ற சோழன் விரைவு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. விவசாய நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டமே ரயில் நிறுத்தத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அரசு நிகழ்ச்சிகள், 'ஓர் அணியில் தமிழ்நாடு' என்ற திமுகவின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, மற்றும் ரோட் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார்.
சமீபகாலமாக ரயில் பயணத்தை விரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மயிலாடுதுறையில் இருந்து சோழன் விரைவு ரயில் மூலம் சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாய நிலத்தில் இருந்து வந்த புகை
விசாரணையில், ரயில்வே இருப்புப் பாதை அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்து புகை மூட்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த புகை தண்டவாளப் பகுதிக்கு பரவியதால், ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ரயிலை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
புகை சூழ்நிலை சீரானவுடன் ரயில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் பயணித்த ரயில் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகை மூட்டம் கட்டுக்குள் வந்த பிறகு, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















