Chengalpattu new bus stand Update: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு புறநகர் பேருந்து அமைக்கும் பணிகள் 70% நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளரும் செங்கல்பட்டு மாவட்டம் Chengalpattu District
சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும், தற்போது அதன் வளர்ச்சி வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வெளி மாவட்ட மக்களின் குடியேற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகரித்து வருகிறது. மறுபுறம் செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு பேருந்து நிலையம் - Chengalpattu Bus Stand
செங்கல்பட்டு மாவட்ட தலைநகராக இருக்கக்கூடிய செங்கல்பட்டில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன.
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் - Chengalpattu New Bus Stand
செங்கல்பட்டு நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள், தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இறுதியாக செங்கல்பட்டு நகருக்கு வெளியே ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது.
இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைய உள்ளது . தரைத்தளம், முதல் மற்றும் 2-ஆம் தளத்துடன் கூடிய முனையம் அமைப்பதற்கான கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது . 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் சிறப்பம்சங்கள் என்ன ? Key features of Chengalpattu New Bus Stand
தரைதளத்தில் மொத்தம் 35 கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளில் சராசரி அளவு 150 சதுர அடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்புமிடம் 936 சதுர மீட்டர் அளவிற்கு அமைய உள்ளது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதேபோன்று 554 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. வாகனம் நிறுத்துமிடத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதிகளும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது? Chengalpattu new Bus Stand Opening Date
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் பணிகள் தற்போது 70% நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் இன்று அமைச்சர் சேகர்பாபு பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையம் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், டிசம்பர் மாதத்திற்கு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.