சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் கலையரசன், போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவான கருத்து தொடர்பாக காவல்துறையினரால் அதிகாலையில் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரங்களை சரிபார்க்காமல் காவல்துறையின் இந்த நடவடிக்கை பரந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் கலையரசனை தவறாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அரசுக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம்? இழப்பீடு கோர முடியுமா போன்ற விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்

Continues below advertisement

அக்டோபர் 28-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே. காமாட்சிக்கு எதிராக அவதூறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி தன்னை அழைத்துச் சென்றதாக கலையரசன் டிஜிபியிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். தனது செல்பேசியைப் பெற்றுக்கொண்டு, வாடகைக் காரில் பம்மல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையின் நகலைக் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காட்டப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், அதில் தனது புகைப்படம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் விளக்கியுள்ளார். பின்னர் காலை 7.45 மணியளவில் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்.

தவறை ஒப்புக்கொண்ட அரசு

இந்தச் சம்பவத்தில் காவல்துறை தவறு செய்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒப்புக்கொண்டதுடன், கலையரசனிடம் மன்னிப்பும் கோரியதாக அக்டோபர் 29-ம் தேதி செய்தி வெளியானது. தவறான அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரை அழைத்துச் சென்று விசாரிப்பதற்கு முன்பு, அந்த நபருக்கும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்தச் சரிபார்ப்பு எந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

Continues below advertisement

அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா?

இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதற்கு இந்திய அரசியலமைப்பும், குற்றவியல் நடைமுறைச் சட்டங்களும் வழிவகுக்கின்றன. அரசியலமைப்பின் 21-வது பிரிவு ஒவ்வொருவருக்கும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. சட்டம் வகுத்துள்ள நடைமுறையைப் பின்பற்றாமல் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. 22-வது பிரிவின்படி, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; கைது செய்யப்பட்டவர் விரும்பும் வழக்கறிஞரை அணுகும் உரிமையும் அவருக்கு உண்டு.

பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம்

தற்போது நடைமுறையில் உள்ள பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 35-வது பிரிவு, காவல்துறை எந்தச் சூழலில் வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்யலாம் என்பதை வரையறுக்கிறது. ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றங்களில், கைது அவசியமா என்பதை அதிகாரி பரிசீலிக்க வேண்டும். கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனில், அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். 36-வது பிரிவு கைது செய்யும் அதிகாரியின் அடையாளம், கைது ஆவணம், உறவினர் அல்லது நண்பருக்குத் தகவல் தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. 47-வது பிரிவு கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிறது.

அரசிடம் இழப்பீடு கோரலாம்

கலையரசன் போன்ற ஒருவர் முறையான கைது நடவடிக்கையின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தாலும், அவரது சுதந்திரம் சட்டவிரோதமாகக் கட்டுப்படுத்தப்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆராய முடியும். இதற்காக அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரலாம்.

டி.கே.பாசு வழக்கு 

இதற்கு உச்சநீதிமன்றத்தின் டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு (1996) வழக்கு முக்கியமான முன்னுதாரணமாக உள்ளது. கைது செய்யும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இந்தத் தீர்ப்பு வகுத்துள்ளது. அவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதேபோல், ருதுல் சா எதிர் பீகார் மாநிலம் (1983) வழக்கில், சட்டவிரோதமாகச் சிறையில் வைக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சட்டத்தைத் தெரிந்தே மீறி ஒருவருக்குத் தீங்கு விளைவித்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழும் நடவடிக்கை கோர முடியும். இதற்காக பாதிக்கப்பட்டவர் டிஜிபியிடம் அளித்த புகாருடன், அழைத்துச் சென்ற நேரம், காவலர்களின் விவரம், செல்பேசி பறிமுதல் செய்யப்பட்ட சூழல், காவல் நிலையத்தில் நடந்தவை உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அரசு தவறு நடந்ததாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருப்பது ஒரு நடவடிக்கை மட்டுமே. அது தானாகவே இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவாகாது. ஆனால், சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோருவதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோருவதற்கும் சட்டத்தில் வழிகள் உள்ளன.