கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் போட்டியிடுகிறார். வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.


திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ், ஜனநாயக சமூக கட்சியின் சார்பில் வெங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் அதிக செல்வாக்கைப் பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் குஞ்சாலி குட்டி உடன் மோதவிருக்கிறார். கல்வியறிவு அதிகம்பெற்ற மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இதுவரை மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் தான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததாக அனன்யா குமாரி தெரிவித்தார்.


கேரளாவின் எர்ணாக்குளத்தில் அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை தொகுத்து வழங்கியவர் அனன்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை என தன்னை உணர்ந்தபிறகு, சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட அனன்யா திருநங்கை மேக்கப் கலைஞரான ரெஞ்சு ரெஞ்சிமாரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். ’தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன் எங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டுவதை விடவும், நாங்களே குரல் எழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி, சாதி, மதம் போன்றவற்றைக் கடந்து சிந்திக்கும் கேரள மக்கள் என்னையும் மனதார ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்’ எனக் கூறினார்.