நகைகளை விற்று மின் இணைப்பு பெற்ற மூதாட்டி:


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் என்ற மூதாட்டி. இவர் மாற்றுத்திறனாளீ. இவர் குடிசை வீட்டில் இருந்து வந்ததால் இவருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.


புதிய வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு வேண்டி சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் மின் வாரிய அலுவலர்கள் உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் மின்கம்பம்கள் அமைக்க வேண்டும், மேலும் மின் வயர் இழுக்க வேண்டும். அதற்கு 58,500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே தான் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் விற்று மின் இணைப்புக்காக பணத்தை கொடுத்துள்ளார்.


கண்டுகொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்:


இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூதாட்டி பொன்னம்மாள் வீடு கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் அருகே மின் கம்பத்தினை நட்டுள்ளனர். மேலும் மின் கம்பம் சாயாமல் இருப்பதற்காக அருகே மற்றொரு மின்கம்பத்தை வைத்துள்ளனர். அந்த கம்பம் பொன்னம்மாள் வீடு கட்ட உள்ள இடத்திற்குள் நடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மின் வயர்கள் அனைத்தும் வீட்டின் மேலே செல்வதால் பொன்னம்மாள் அச்சத்தில் உள்ளார்.


நடவடிக்கை எடுக்கப்படுமா?


இதனால் வேறு வழியின்றி பொன்னம்மாள் வீடு கட்டும் பணியை தொடங்கி தற்போது வீடு முழுமையாக கட்டி பால்காய்ச்சி முடித்துள்ளார். ஆனால் மின் ஊழியர்கள் நட்ட துணை கம்பம் பொன்னம்மாள் வீட்டின் உள்ளே கிச்சன் நடுவே உள்ளது. இதனால் புதிதாக கட்டிய வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். அரசு உதவியில் மாற்றுத்திறனாளி ஒருவர் கட்டியுள்ள வீட்டிற்குள் மின்கம்பம் உள்ளதை கண்டும் காணாமலும் இருந்து வரும் அதிகாரிகளால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.