தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பரபரப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. வாக்காளர்களைக் கவர ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துவருகின்றனர். கட்சியின் தலைவர்களைக் கடந்து அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் மக்களிடம் ஏன் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
இதனிடையே, குறிப்பாக நாமக்கல் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் கே.பி.பி.பாஸ்கர், ஏன் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகக் கூறிய கருத்து அதீத கவனத்தை ஈர்த்துள்ளது. கே.பி.பி.பாஸ்கர் போட்டியிட இருப்பது இரட்டை இலைச் சின்னத்தில். இந்நிலையில் “மனசாட்சி இருந்தால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்., ஒருவேளை இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை எனில் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது, நன்றி கெட்டவர்கள் நாமக்கல் மாவட்டத்தினர் என்ற பெயர்தான் கிடைக்கும்” என்று சாபம் விடும் தொனியில் அவர் பேசியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருக்கும் கே.பி.பி.பாஸ்கர், தொகுதி வளர்ச்சிக்கு செய்தவை, அதிமுக அரசின் சாதனைகள் இவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாக்கு கேட்காமல், சாபம் விடும் தொனியில் பேசியிருப்பது தவறு என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.