கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே லெமூரியா பீச்சில் கடல் அலையில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மருத்துவர்கள்:
திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.
ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு:
நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்து எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருக சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கடலில் பெரும் அலைகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை:
தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதையும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ கிராமங்களுக்கு கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கடற்கரையோர மீனவ மக்கள் பாதுகாப்பாக, விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீட்புபணிகளை ஆய்வு மேற்கொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், கன்னியாகுமரி லெமூர் கடற்கரையின் முன்வாசல் மூடி இருந்ததால் மாற்றுப்பாதையில் சென்று குளித்துள்ளனர். மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். குமரி மாவட்ட கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்படும் என்றார்.