வில் ஸ்மித் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் கிங் ரிச்சர்ட். தற்போது இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற சகோதரிகள் மற்றும் டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தையின் வாழ்க்கயை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். கிங் ரிச்சர்ட் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
கிங் ரிச்சர்ட் (King Richard)
டென்னிஸ் விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளாக கருதப்படுபவர்கள் செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ். வேறு எந்த ஒரு டென்னிஸ் வீரரைக் காட்டிலும் அதிக முறை மொத்தம் 23 முறை கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ளார் செரீனா. அதேபோல் செரீனா மற்றும் வீனஸ் இருவரும் இணைந்து மூன்று முறை ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுள்ளார்கள். இந்த இரு சகோதரிகள் இவ்வளவு உயரத்திற்கு செல்வார்கள் என்று அவர்கள் குழந்தையாக இருந்தபோது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அவர்கள் இருவரின் பெற்றோர்களைத் தவிர.
கிங் ரிச்சர்ட் படத்தின் முதல் காட்சியே இதுதான். டென்னிஸ் மீது ஆர்வம் வந்ததும் தனது வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் தனக்கு இன்னும் இரண்டு மகள் வேண்டும் என்றும் அவர்களை டென்னிஸ் வீரர்களாக்க வேண்டும் என்றேன் எனக் கூறியதாக ரிச்சர்ட் வில்லியம்ஸ் தெரிவிக்கிறார். தனக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே தனது குழந்தைகள் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களாக ஆவார்கள் என்று அவர் நம்பினார். அவர் அப்படி நம்பியது பலருக்கு பைத்தியக்காரத்தனம் என்று தோன்றியிருக்கலாம் . ஆனால் அவருடன் சேர்ந்து அவரது மனைவி பிராண்டியும் இதை நம்பினார்.
பிறப்பதற்கு முன்பாகவே தனது மகள்களில் இருவர் டென்னிஸ் வீரர்களாக வேண்டும் என்பதே ரிச்சர்ட் வில்லியம்ஸின் லட்சியமாக இருக்கிறது. அதற்கேற்றபடி தனது குடும்ப சூழல் எப்படியானதாக இருந்த போதிலும் அவர்களுக்கு கடுமையாக சிறிய வயது முதலே பயிற்சி அளிக்கிறார். தங்களது மகள்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக பக்கத்து வீட்டுக்காரர்களால் குற்றம் சாட்டப் படுகிறார். இரவு வேலை செய்துவிட்டு பகல் முழுவதும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். எப்படியாவது அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாளர் கிடைத்துவிட வேண்டும் என்று விடாப்பிடியாக முயற்சிக்கிறார். இந்த அலைச்சலில் ஒருபோதும் தனது நம்பிக்கையையும் தன் மகள்களின் நம்பிக்கையையும் அவர் தளரவிடுவதில்லை.
ஒருவழியாக தனது ரிச்சர்டின் மகள்களுக்கு பயிற்சி அளிக்க ஒருவர் முன் வருகிறார். ஆனால் அவர் செரீனா மற்றும் வீனஸுக்கு இடையில் வீனஸுக்கு மட்டுமே தன்னால் பயிற்சி அளிக்க முடியும் என்கிறார். அவர் வீனஸுக்கு பயிற்சி அளிக்க அதை கேமராவில் பதிவு செய்து அதைகொண்டு செரீனாவுக்கு விட்டில் பயிற்சி அளிக்கிறார் அவர்களின் அன்னை. இப்படி பல்வேறு சவால்களை கடந்து கடைசியில் ஒருவழியாக இரு மகள்களும் ஜூனியர்களுக்கான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பத்திரிகையாளர்களிடம் கவனம் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஸ்பான்சர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிங் ரிச்சர்ட் தனது மகள்களை போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து நிறுத்துகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் அவர்கள் பயிற்சி மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வந்த வாய்ப்புகளை எல்லாம் தந்தை மறுதலிப்பது யாருக்கும் புரிவதில்லை.
தனது மகள்களை டென்னிஸ் வீராங்கனைகளாக்க போராடியது மட்டும் இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் தனக்கு இருந்த பயத்தினால் அவர்களின் வழியில் தடையாகவும் ரிச்சர்ட் இருந்தார் என்பதை கிங் ரிச்சர்ட் படத்தின் பேசுபொருளாக இருக்கிறது. பலரால் விமர்சிக்கப்பட்டு அவர் இப்படி செய்வதற்கான காரணம், தன்னுடைய முடிவை அவர் மாற்றிக்கொண்டதற்கு காரணமாக இருப்பது எது என்பதே மீதிக் கதை.
முன்னமே சொன்னது போல் இப்படம் செரீனா வில்லியம்ஸின் வாழ்க்கையை முதன்மையாக வைத்து எடுக்கப் பட்டது இல்லை. மாறாக ரிச்சர்ட் வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸை முதன்மை கதாபாத்திரங்களாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் தனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் தனது அக்காவிற்கு கிடைப்பதை செரீனா வில்லியம்ஸ் மகிழ்ச்சியோடு எடுத்துக் கொள்வது , தனக்கான பாதையை தானே அமைத்துக் கொள்வது என அவரது குணாம்சம்சங்கள் படம் முழுவதும் வெளிப்படுகின்றன.
சுயசரிதை படமாவதில் இருக்கும் பெரிய சவால் என்றால் அவற்றுக்கு ஒரு எல்லை இருக்கும். நிஜக்கதை என்பதால் அதில் கற்பனைகளுக்கு ஓரளவிற்கு மேல் இடம் கொடுக்க முடியாது. இதன் காரணத்தால் படமாக்கப் படும் பெரும்பாலான சுயசரிதைகள் பார்க்க ஒரே மாதிரியான தொடக்கம் முடிவுகளை கொண்டிருக்கின்றன.
ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித் வழக்கம்போல் உணர்ச்சிகரமான ஒரு கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். ஒரு சில காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார். அதே நேரம் ரிச்சர் வில்லியம்ஸின் மனைவி பிராண்டியாக நடித்துள்ள அவுன்ஜானு எல்லிஸ்-டெய்லர் ( Aunjanue Ellis-Taylor) சிறப்பாக நடித்துள்ளார். ஒவ்வொரு கட்டத்திலும் தனது கணவனுக்கு துணையாக நிற்கும் பிராண்டி ஒரு கட்டத்தில் அவருக்கு தனது தவறை உணர்த்த அவரை காயப்படுத்தும் இடத்திற்கும் செல்கிறார். இந்த காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவர். வீனஸாக நடித்த சானிய சிட்னி செரீனாவாக நடித்த டெமி சிங்கில்டன் ஆகிய இருவரும் நடிப்பிலும் சரி, டென்னிஸ் விளையாடும் காட்சிகளிலும் சரி தங்களது சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருப்பின தலைவர் மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல் 'எங்களது குழந்தைகள் அவர்களின் நிறத்தால் அல்ல அவர்களில் பண்புகளால் அறியப்பட வேண்டும்' என்பதே இப்படத்தின் கதாநாயகனாக இருக்கும் ரிச்சர்ட் வில்லியம்ஸின் நோக்கமாக இருக்கிறது. அதை கிங் ரிச்சர்ட் படம் சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.