Vendhu Thanindhathu Kaadu Review in Tamil: இயக்குநர் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘வெந்து தணிந்தது காடு’. இவர்களது கூட்டணியில் வெளியான  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும்  ‘அச்சம் என்பது மடமையடா’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் இந்தப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஓரளவே பூர்த்தி செய்திருக்கிறது ‘வெந்து தணிந்தது காடு’. 


                           


 


கதையின் கரு:


தென் தமிழகத்தில் இருந்து குடும்ப வறுமை காரணமாக மும்பைக்கு வரும் ஒரு இளைஞனை சூழ்நிலை எப்படி கேங்கஸ்டராக மாற்றுகிறது என்பதே  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதை. படத்தின் ஒட்டுமொத்த ஆணிவேரையும் தனது நடிப்பால் தாங்கி நிற்கிறார் சிலம்பரசன். 




படத்தில் அவருக்கு பஞ்சத்தில் அடிப்பட்ட கிராமத்து இளைஞன், தலைவனை பாதுகாக்கும் பாடி கார்டு, கேங்கஸ்டர் என மூன்று பரிணாமங்கள். மூன்று பரிணாமங்களுக்கும் சிம்பு கொடுத்திருக்கும் உடல் மொழி, வேரியேஷன், நடிப்பு உள்ளிட்டவை சிலம்பரசன் என்பவன் எப்படியான நடிகன் என்பதை மீண்டும் தமிழ்சினிமாவிற்கு சொல்லி இருக்கிறது.


அடுத்ததாக ராதிகா, வழக்கம் போல தென் தமிழக தாயாக மிரட்டி இருக்கிறார். கதாநாயகி சித்தி இத்நானி நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும், அவரது டப்பிங் நெருடலை ஏற்படுத்துகிறது. ஜாஃபரின் கதாபாத்திரம்  ‘விக்ரமை’ படத்தை நியாபகப்படுத்துகிறது.  




பாவக்கதைகள் சீரிஸூக்கு பிறகு மீண்டும் கெளதம் மேனனின் கேமாரா கிராமத்திற்கு சென்றிருக்கிறது. முள்காடுகளையும், தாயின் அன்பையும் தென் தமிழகத்தின் அனலோடு காட்சிப்படுத்திருக்கிறார்.


பின்னர் முழுக்க முழுக்க மும்பையில்தான் கதை நகர்கிறது. ‘வேட்டையாடு விளையாடு’ ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களில் கையாண்ட தனது வழக்கமான ஆக்சனை கைவிட்டு, ரியலிஸ்டிக்கான ஆக்சனை, ரியல் எமோஷனுடன் இதில் கொடுக்க முயன்று இருக்கிறார் கெளதம் 




அது அவருக்கு ஓரளவு கைகொடுக்கவும் செய்திருக்கிறது. ஆனால் படத்தின் முதல்பாதியில் இதுதான் கதை என ஆடியன்ஸூக்கு தெரிந்த பின்னரும், கதைக்கு உள்ளே செல்லாமல் நீட்டிக்கொண்டே சென்றது ஆடியன்ஸை நெழிய வைத்தது. ஆக்சன் காட்சிகளை தத்ரூபமாக காட்டுகிறேன் என்று சொல்லி கேமராவை அநியாயத்திற்கு க்ளோசப்பில் கொண்டு சென்றிருப்பது அந்த காட்சியையே ரசிக்க முடியாமல் செய்து விட்டது.


இராண்டாம் பாதியில் தலைவனை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் சில ஆக்சன் காட்சிகள், இதற்கிடையே வரும் காதல், கல்யாணம் உள்ளிட்டவை ஏமாற்றதையே அளித்தன. இறுதியாக மாணிக் பாட்ஷாவாக வரும் சிம்புவிற்கு திரைமுழுக்க கைத்தட்டல்கள். இந்த மெதுவான திரைக்கதையை நமக்கு பிடிக்க வைத்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பாடல்களை விட  ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது.