வருண் தவான் ஜான்வி கபூர் நடித்திருக்கும் பவால் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. சலித்துப்போன பாலிவுட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் சில புதிய முயற்சிகளை செய்திருக்கிறது பவால்.
கதை
தனது சிறு வயதில் இருந்தே ஒரு மிடில் கிளாஸ் பிரதிநிதியாகவே வளர்ந்திருக்கிறார் படத்தின் கதாநாயகனான அஜய் (வருண் தவான்). எந்த ஒரு விஷயத்திலும் சிறந்தவனாகவும் இல்லாமல், முட்டாளாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் தனது வாழ்க்கையை நினைத்து கோபம் கொள்பவனாக இருக்கிறார். இதன் காரணத்தினால் தன்னை சுற்றியிருப்பவர்களிடம் தன்னைப் பற்றிய உயர்வான ஒரு சமூக பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்கிறார்.
எல்லா திருட்டுத்தனங்களையும் செய்வதோடு மட்டுமல்லாமல் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் ஒரு வேலையை செய்துவருகிறார். தன்னுடைய இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக ஒரு அழகான படித்த பெண்ணான நிஷாவைத் (ஜான்வி கபூர்) திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் இதில் பிரச்சனை அஜய் திருமணம் செய்துகொள்ளும் நிஷாவுக்கு எபிலெப்ஸி என்று சொல்லப்படும் வலிப்பு நோய் இருக்கிறது.
தனது மனைவியின் இந்த நிலை, தான் உருவாக்கி வைத்திருக்கும் சமூக அந்தஸ்திற்கு பாதகமாக அமைந்துவிடும் என்கிற பயத்தில் மகிழ்ச்சியற்ற ஒரு திருமண வாழ்க்கையை வாழ்கிறார். தனது திருமண வாழ்க்கையை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் ஜான்வி கணவனின் உண்மையான குணத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த நிலை மாறும் என்கிற ஒரு நம்பிக்கையினால் இந்த உறவை முடித்துக்கொள்ள சொல்லி தனது பெற்றோர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் தொடர்கிறார்.
பிரச்னை தொடங்குகிறது
இப்படியான நிலையில் தனது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அவனை அடித்து விடுகிறார் அஜய். தான் அடித்த மாணவன் அதிகாரத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரின் மகன் என்று பின் தெரிந்துகொள்கிறார். தனது வேலையையும் தனது அந்தஸ்தை பாதுகாத்துக்கொள்ள ஒரு திட்டம் போடுகிறார் அஜய். மாணவர்களின் பாடப்பிரிவில் இடம்பெற்றிருக்கும் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நேரடியாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பதின் மூலமாக இழந்த தன் பிம்பத்தை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள திட்டமிடுகிறார். இந்தப் பயணத்திற்கான பணத்தை தனது பெற்றோர்களிடம் இருந்து பெறுவதற்காக தனது மனைவியையும் இந்தப் பயணத்தில் அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தில் இவர்கள் இருவருக்குமான உறவு எப்படி மேம்படுகிறது. தனது சமூக அந்தஸ்தை தவிர தனது உறவுகளின் முக்கியத்துவத்தை அஜய் உணர்வதே மீதிக் கதை.
என்ன புதிது
முதல் பாதி வழக்கமான ஒரு படமாக தோன்றினாலும் படத்தின் இரண்டாம் பகுதி புதிய வகையான ஒரு அணுகுமுறையை கையாள்கிறது. மிகப்பெரிய போர் நிகழ்ந்த இடங்களுக்கு சென்று அங்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை தெரிந்துகொள்ளும் அஜய் தனது வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் தான் மகிழ்ச்சியற்று இருப்பதை உணர்கிறான். தனது மனைவியில் உடல்ரீதியிலான குறைபாட்டை தவிர்த்து அவரது குணாம்சங்களை அதிகம் தெரிந்துகொள்கிறார்.
தன்னைப் பற்றி தான் வெளியில் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தைவிட தன்னிடம் இருப்பதை வைத்தே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அவர் உணரும் தருணங்கள், படத்தில் வரலாற்று காட்சிகளை மறு உருவாக்கம் செய்யப்பட்டு படத்தின் காட்டப்படுபவது, பார்வையாளர்களுக்கு கதாபாத்திரத்தின் மனமாற்றம் வெறும் ஒரு மிகையான உணர்ச்சியாக இல்லாமல் நம்பகத்தன்மையானதாக மாறுகிறது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியாக தனது மிகப்பெரிய அச்சத்தை அஜய் எதிர்கொள்கிறார். அதில் எந்த பூச்சும் இல்லாமல் உண்மையை உணர்வாக்கியிருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி.
நடிப்பு எப்படி?
வருண் தவான் தனது கதாபாத்திரத்தில் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். அவரது வழக்கமான நடிப்பு இருந்தாலும் மிக உணர்வுப்பூர்வமான இடங்களில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியும் இருக்கிறார். அவ்வப்போது அவருக்குள் இருந்து ஒரு குட்டி சல்மான் கானும் எட்டிப்பார்க்கவும் செய்கிறார். கொஞ்சம் பேசும், கொஞ்சமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் ஜான்வி கபூருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் மிகையில்லாமல் நடித்திருக்கிறார். ஜான்வி கபூரின் கண்கள் எப்போதும் எதையோ பேசத் துடிக்கும் ஒரு பதற்றத்தை நம்மிடம் காட்டிக்கொண்டே இருப்பது அழகு.
என்ன குறை?
படத்தின் கதை அதனுடைய உணர்வை கதையின் போக்கில் நமக்கு உணர்த்திவிடுகிறது இருந்து கடைசியில் எங்கு பார்வையாளர்களுக்கு எமோஷம் குறைந்துவிடுமோ என்கிற பதட்டத்தில் கொஞ்சம் டிராமாவை அதிகம் சேர்த்துவிட்டிருக்கிறார்கள் படத்தின் எழுத்தாளர்கள்.
வழக்கமான ஒரு கதையை எடுத்து அதை வழக்கமாக எடுத்துவிடக்கூடாது என்று முடிவு செய்து அதை வழக்கமாக எடுக்காமல் சற்று வித்தியாசமாக எடுத்து கடைசியில் எங்கு வழக்கமாக இல்லாமல் போய்விடுவதால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் கொஞ்சம் வழக்கமான விஷயங்களை சேர்த்ததை தவிர்த்திருக்கலாம். மற்றபடி அனைவருக்கும் பிடிக்கும்படியான நல்ல படமாக பாவல் அமைந்துள்ளது.