Karuppu Movie Review : கருப்புசாமி என்ன பாவம் பண்ணாரு...சூர்யாவின் கருப்பு திரைப்பட விமர்சனம்
Karuppu Review in Tamil : ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
R J Balaji
Suriya , Trisha , RJ Balaji , indran , anagha maya ravi
பல்வேறு சவால்களை கடந்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது சூர்யாவின் கருப்பு திரைப்படம். எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது கருப்பு. ஆனால் தனது கதையை தானே சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவர் போல இயக்குநர் ஆர் ஜே பாலாஜி கருப்புசாமியை இஷ்டத்திற்கு சர்கஸ் காட்ட வைத்திருக்கிறார். இது சூர்யா நாயகனாக நடித்த படம் என்று சொல்வதை விட ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடித்து சூர்யா கேமியோ ரோலில் நடித்தபடம் என்று சொல்லலாம்
கருப்பு படத்தின் கதை
கேரளாவில் இருந்து தனது மகளின் (அனகா ரவி ) சிகிச்சைக்காக பணம் திரட்ட நகையை எடுத்துக் கொண்டு சென்னை வருகிறார் இந்திரன். அப்போது திருடர்கள் அவரது நகையை திருடிப்போகிறார்கள். திருட்டுப் போன நகையை காவல் துறையினர் மீட்டாலும் அது தன்னுடைய நகை தான் என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் . மறுபக்கம் நீதிமன்றத்தையும். தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்யும் வில்லன் பேபி கண்ணனாக வருகிறார் ஆர் ஜே பாலாஜி. பேபி கண்ணனுடன் சேர்ந்து கொண்டு நீதிபதியும் இந்திரனை அவரது நகையை பெறவிடாமல் இழுத்தடிக்கிறார்கள். இது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத வழக்கறிஞராக த்ரிஷா நடித்துள்ளார். நீதிமன்றம் கைவிட்ட நிலையில் கருப்புசாமியிடம் இந்திரன் வேண்டிக்கொள்கிறார். அவருக்கு உதவி செய்ய மனித ரூபத்தில் வருகிறார் கருப்புசாமி (சூர்யா). கருப்புசாமி இந்திரனின் நகையை மீட்டுக்கொடுத்தாரா . அதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன ? என தொடர்கிறது கருப்பு படத்தின் கதை.
கருப்பு விமர்சனம்
கடவுள்களை மையப்படுத்தி இரண்டு விதமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். முதல் வகையில் அம்மன் , தாலிகாத்த காலி அம்மன் , பொட்டு அம்மன் போன்ற படங்களை குறிப்பிடலாம். இந்த படங்களில் எதார்த்தத்தை விட பெரும்பாலும் ஃபேண்டஸி அம்சங்களே அதிகம் . அதே நேரம் இந்தியில் அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் , அறை எண் 305 இல் கடவுள் போன்ற படங்கள் இன்னொரு ரகம். இந்த படங்களில் கடவுள் நேரடியாக வந்தாலும் அவர்கள் மனிதர்களோடு மனிதர்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவார்கள். இந்த வகை படங்களில் டிராமா அதிகம் இருக்கும். கருப்பு படத்தை இந்த இரண்டு லிஸ்டிலும் சேக்க முடியாது. ஏனால் இதில் லாஜிக் இல்லாத ஃபேண்டஸி அம்சமும் சுமார் தான் , டிராமாவும் சுமார் தான்.
சுவாரஸ்யமான ஒன்லைன் , உணர்ச்சிகரமான தொடக்கம் , தந்திரமான வில்லன் , மாஸ் ஹீரோ என்ட்ரி என ஒரு வழக்கமான கமர்சியல் திரைப்படத்திற்கான எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால் மெய்சிலிர்க்க வேண்டிய மாஸ் தருணங்களை எல்லாம் பேப்பர் பாய் போல் போகிற போக்கில் எறிந்து விட்டு போகிறார் இயக்குநர். முதல் பாதியில் ஒரு கதை தொடங்கி அது பாதியில் நின்று இரண்டாம் பாதி திசை தெரியாமல் எங்கெங்கோ சுற்றி திரிகிறது. பராசக்தி படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் உயிர் தியாகம் செய்துகொண்டிருக்கையில் சிவகார்த்திகேயன் ஶ்ரீலீலாவுடன் ரத்னமாலா பாட்டுக்கு ஆடுவது போல் படத்தின் மைய கதாபாத்திரம் இறந்தபோன இடத்தில் ஆக்ஷன் ப்ளாக் வைத்து இடைவேளை விட்டு பாட்டுடன் தொடங்குகிறார்கள். குட் பேட் அக்லி படத்திற்கு சவால் விடும் வகையில் ஜெய் பீம் , போக்கிரி , லியோ , சிங்கம் , எல் கே ஜி , என்.ஜி.கே என ஏகப்பட்ட படங்களின் ரெஃபரன்ஸ் வேறு. வில்லனாக நடித்துள்ள ஆர் ஜே பாலாஜியின் கதாபாத்திரத்தை விட சூர்யாவின் ஸ்கிரின் டைம் குறைவே. சூர்யாவின் காட்சிகள் எந்த வித கோர்வையும் இல்லாமல் காட்சிக்கு காட்சி பவர் ரேஞ்சர்ஸ் மாதிரி அவரது ஆடைகள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் மாறுகின்றன. லொக்கேஷன் மாறுகிறது. ஆனால் கதை எங்குமே நகராமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
கருப்புசாமியாக வரும் சூர்யா தோற்றத்திலும் நடிப்பில் மெய் சிலிர்க்க வைக்கிறார். இந்திரன் மற்றும் அனகா ரவி இரு மலையாள நடிகர்களும் முதல் பாதியை தங்களது நடிப்பால் தாங்குகிறார்கள். படத்துடன் கொஞ்சமாவது ஒட்டுதல் ஏற்படுவதற்கு அவர்களின் நடிப்பே காரணம். வில்லனாக ஆர் ஜே பாலாஜியின் நடிப்பு சிறப்பு. நீதிபதியாக வரும் நட்டி , மன்சூர் அலிகான் , ஸ்வாசிகா அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவு செய்துள்ளார்கள்.
சாய் அப்யங்கரின் இசை மாஸ் தருணங்களை சிறப்பான திரை அனுபவமாக மாற்றுகிறது . ஆனால் நின்றால் , நடந்தால் , கருப்புசாமி சிலையை காட்டினால் ரீரெக்கார்டிங்கில் அடிக்கடி குலவையிடாமல் இருந்திருக்கலாம். கதையில் பரபரப்பு இல்லையென்றாலும் கேமராவை சுற்றி சுற்றி பரபரப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. வழக்கம்போல் நிறங்களை அவர் காட்சிபடுத்தியிருக்கும் விதம் சிறப்பு.
ஆக மொத்தம் ஆக்ஷன் படமாகவும் இல்லாமல் ஃபேண்டஸி படமாகவும் இல்லாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என திண்டாடுகிறது கருப்பு . சிறப்பாக சமைத்து தரப்படும் என்று சொல்லி கருகவிட்டுவிட்டார்கள். கருப்பு படக்குழுவிடம் ஒரு கேள்வி. கருப்புசாமி என்ன பாவம் பண்ணுச்சு சார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















