நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள `ஸ்குவிட் கேம்’ என்ற கொரியன் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அனைத்து ட்ரெண்டிங் பட்டியல்களிலும் `ஸ்குவிட் கேம்’ இடம்பெற்றுள்ளது. வழக்கமான கொரியன் த்ரில்லர் படங்களைப் போல அதீத வன்முறைக் காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தாலும், அட்டகாசமான கதையாலும், தேர்ந்த நடிகர்கள், அவர்களுக்கான கதாபாத்திரங்கள், திரைக்கதை எனப் பல சிறப்பம்சங்களால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது `ஸ்குவிட் கேம்’ தொடர்.
குழந்தைகளாக நாம் விளையாடிய விளையாட்டுகளைப் பெரியவர்களான பிறகும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் வென்றால் நாம் கனவிலும் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் பணப்பரிசு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், `அவுட்’ என்றால் இதில் உண்மையிலேயே `அவுட்’ செய்து விடுவார்கள்; அதாவது கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சமூட்டும் ட்விஸ்டும் கொடுக்கப்படுகிறது. பணத்திற்காக உயிரைப் பணயம் வைத்து விளையாடுவோமா, இல்லை உயிர் தான் முக்கியம் என்று நழுவி விடுவோமா என்ற நிஜ `சர்வைவர்’ கேம் ஷோவாக உருவாகியுள்ளது `ஸ்குவிட் கேம்’ தொடர்.
சூதாட்டத்திற்கு அடிமையான கிஹுன், நல்ல கல்வி பெற்ற போதும், ஈட்டிய பணத்தை முதலீடுகளில் தொலைத்த வங்கி அதிகாரி சாங்வூ, வடகொரியாவில் இருந்து தப்பி வந்த பெண் சேபியோக், பாகிஸ்தானில் இருந்து கொரியாவுக்குப் பிழைக்க வந்த அப்துல் அலி, வயதான முதியவர், மூத்த தாதாக்களுடன் மோதலில் முறைத்துக் கொண்ட ரவுடி ஒருவன் எனச் சுமார் 456 பேரை வைத்து 7 விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது ரகசியக் குழு ஒன்று. அந்தக் குழுவினுள் ரகசியமாக காவல்துறை அதிகாரி நுழைந்துவிடுகிறார். ஒருபக்கம், போட்டியில் பங்கேற்போரின் மனநிலை, மறுபக்கம் ரகசியமாக நுழைந்த காவல்துறை அதிகாரி கண்டுபிடிக்கும் அதிர்ச்சிகரத் திருப்பங்கள் எனத் தொடக்கம் முதல் வேகம் எடுத்து அட்டகாசமாக வெளிவந்துள்ளது `ஸ்குவிய் கேம்’.
வெளி உலகில் கடன் சுமை தாங்காமல், அங்கு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதைவிட, இங்கு உயிரைப் பணயம் வைத்து வெற்றி பெறலாம் என்ற போட்டியாளர்களின் புற வாழ்வின் மனநிலை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரு நிறுவனங்களில் பணிநீக்கத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள், வங்கி முதலீடுகளால் ஒரே இரவில் பெரும் கடன்காரர்களாக மாறியவர்கள், சர்வாதிகார நாட்டில் இருந்து தப்பி வந்தும் பிரிந்து வந்த உறவுகளை எண்ணி வாழ்க்கையை நகர்த்தும் மனிதர்கள், வெளிநாட்டில் இருந்து விசா இல்லாமல் தொழில் தேடி குடியேறியவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், உயிர் ஒன்றைக் காப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சமரசங்களும், அதனால் அனுபவிக்கும் குற்றவுணர்வுகளும் எனத் தொடர்ந்து மனித உறவுகளையும், தோல்வியடைந்த சமூகக் கட்டமைப்புகளையும் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது இந்தத் தொடர். மனிதர்களைக் குழந்தைகளின் விளையாட்டுகளை விளையாடச் செய்வதாகவும், அவற்றைப் பெரும் பணக்காரர்கள் ரசிப்பதாகவும் காட்டியிருப்பது, போட்டியாளர்கள் மீது விதிக்கப்படும் கடுமையான விதிகள், போட்டியாளர்களுக்கு இடையில் போட்டி நடத்தும் ரகசியக் குழு உருவாக்கும் மோதல்கள், ரகசியக் குழுவில் இருக்கும் காவலர்களிடையிலான அழுத்தம் எனத் தற்போதைய முதலாளித்துவச் சமூகத்தைக் குறியீடாக மாற்றி, அதனையும் விமர்சித்துள்ளது `ஸ்குவிட் கேம்’.
கொரியன் சீரிஸ்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், `ஸ்குவிட் கேம்’ தொடர் பலரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக வெளிவந்து, பல பட்டியல்களில் `நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முடிவில், இரண்டாவது சீசனுக்கான ஏற்பாடும் காட்டப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்டோர், த்ரில்லர் கதைகளையும், கொரியன் வன்முறைப் படங்களையும் விரும்புவோர் `ஸ்குவிட் கேம்’ தொடரைக் காணலாம். 9 எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது .