ஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்து பள்ளிக் கால வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் படித்திருப்போம். இந்திய சுதந்திர வரலாற்றில் 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் பகுதியில் அப்பாவி மக்கள் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு மறக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி பெரிதாக எந்தத் திரைப்படமும் இல்லாத நிலையில், அதனையொட்டிய திரைப்படமாகவும், ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையர் என்ற பிரிட்டிஷ்காரரைப் பஞ்சாபைச் சேர்ந்த உத்தம் சிங் லண்டன் சென்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொன்றது வரலாற்றுப் பக்கங்களில் இருந்து கவனமாக நீக்கப்பட்ட ஒன்று. அந்த மாவீரனின் கதையாக உருவாகியிருக்கிறது `சர்தார் உத்தம்’.


பகத் சிங், சுகதேவ், ராஜகுரு முதலான பொதுவுடைமைப் போராளிகளின் குழுவில் இருந்து இயங்கும் உத்தம் சிங் மூவரின் தூக்குத் தண்டனைக்குப் பிறகு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை ஆனவுடன் லண்டன் கிளம்பும் உத்தம் சிங், அங்கிருந்து சில தோழர்களின் உதவியோடு இந்திய விடுதலைக்காக இயக்கம் ஒன்றை உருவாக்க முயல்கிறார். 



தோழமை அமைப்புகளுடனும், சோவியத் ரஷ்யாவுடனும் இந்தியாவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதோடு அவருக்கு ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குக் காரணமான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையரைக் கொலை செய்து உலகத்திற்குத் தங்கள் போராட்டம் குறித்து வெளிப்படுத்த வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது. ஜாலியன்வாலா பாக் அவ்வளவு கொடூரமான நிகழ்வா? உத்தம் சிங்கிற்கும் ஜாலியன்வாலா பாக்கிற்கும் என்ன தொடர்பு முதலானவற்றை வரலாற்றின் அடிப்படையில் பேசுகிறது இந்தப் படம். 


இயக்குநர் ஷூஜித் சிர்கார், திரைக்கதை ஆசிரியர்கள் சுபேந்து பட்டாச்சார்யா, ரிதேஷ் ஷா ஆகியோர் தங்கள் சிறந்த உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். நான் லீனியர் பாணியிலான இந்தத் திரைக்கதையில் தேச பக்தி என்ற பெயரில் வெறுப்பை வளர்க்காமலும், உணர்ச்சியைத் தூண்டாமலும் உணர்வுகளை நேர்மையாகக் கடத்தியிருக்கிறது `சர்தார் உத்தம்’. 


லண்டனில் உத்தம் சிங்கின் வாழ்க்கை, அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகள், பகத் சிங்கிற்கும், அவருக்கும் இடையிலான அந்த உறவு என அனைத்து சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க, இவை அனைத்திற்கும் உச்சமாக இறுதி 40 நிமிடங்களில் ஜாலியன்வாலா பாக் படுகொலை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் போராட்டக் குணம், பிரிட்டிஷ் அரசின் கடுமையான ஒடுக்குமுறை உளவியல், கையறுநிலையில் தப்பிக்க இயலாமல் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியாகும் மக்கள், மக்களின் பிணக் குவியலில் உத்தம் சிங் தன் இளமையைத் தொலைப்பது என உருக்கமான காட்சிப் பதிவாக பஞ்சாப் மக்களுக்கு நிகழ்ந்த வரலாற்றுக் கோரத்தைப் படமாக்கியுள்ளார் ஷூஜித் சிர்கார்.



விக்கி கௌஷல் மிகச் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக நிரூபித்துள்ளார். பகத் சிங் குறித்து கேள்வியெழுப்பும் பிரிட்டிஷ் அதிகாரியிடம், `உங்கள் 23 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று விக்கி கேட்கும் அந்தக் காட்சி மனதில் இருந்து அகலாமல் நிற்கிறது. சிறுவயது உத்தம் சிங்காகவும், லண்டன் நீதிமன்றத்தில் தன் விடுதலையைப் பறைசாற்றும் உத்தம் சிங்காகவும் சிலிர்க்க வைத்திருக்கும் விக்கி கௌஷல் இந்த ஆண்டின் பல விருதுகளை அள்ளப் போவது நிச்சயம். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், பனிடா சந்து ரசிக்க வைக்கிறார். பகத் சிங்காக நடித்துள்ள அமோல் பராஷர் நிஜ பகத் சிங்கை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.


அவிக் முகோபத்யாயின் ஒளிப்பதிவு பஞ்சாபின் குளிர்க்காலத்தையும், சோவியத்தின் பனிக் காலத்தையும், இரண்டாம் உலகப் போர் காலத்து லண்டனின் சூழலையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது. இதுவரை வெளிவந்த பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது `சர்தார் உத்தம்’.


பயோபிக் திரைப்படங்களில் மற்ற திரைப்படங்கள் அனைத்தையும் விட ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது `சர்தார் உத்தம்’. நிச்சயம் பல விருதுகளை வெல்லும் என இந்தப் படம் எதிர்பார்க்கப்படுவதோடு, முக்கியமான வரலாற்றுப் பாடத்தையும் பதிவு செய்திருக்கிறது. 


`சர்தார் உத்தம்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.