சமந்தா வருன் தவான் இணைந்து நடித்துள்ள வெப் சீரீஸ் சிட்டடெல். இந்தியில் தி ஃபேமிலி மேன் , கன்ஸ் அண்ட் குலாப்ஸ் உள்ளிட்ட தொடர்களை இயக்கிய ராஜ் & டிகே இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளார்கள்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த தொடர் சமந்தாவிற்கு கம்பேக் ஆக அமைந்ததா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.


சிட்டடெல் விமர்சனம்




இமாச்சல பிரதேசத்தில் தனது மகளுடன் வசித்து வருகிறார் ஹனீ( சமந்தா) . திடீரென்று ஒரு நாள் ஹனீயை தேடி ஒரு கேங்ஸ்டர் கும்பல் வருகிறது. இந்த கும்பலுடன் சண்டை போட்டு தனது மகளை காப்பாற்றிக் கொண்டு தப்பியோடுகிறார் சமந்தா. கதை பின்னோக்கி நகர்கிறது.


பெரிய ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்த  ஹனிக்கு ( சமந்தா) குழந்தை திருமணம் நடைபெறுகிறது. ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகைகளைப் பார்த்து ஈர்க்கப்படும் ஹனி தனது வீட்டை விட்டு மும்பைக்கு நடிகையாகும் கனவில் ஓடி வருகிறார். அங்கு படங்களில் ஸ்டண்ட் மேனாக நடிக்கும் பனீ ( வருண் தவான்) உடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. வெளியில் ஸ்டண்ட் மேனாக இருக்கும் பனீ ஒரு ரகசிய ஏஜண்டாகவும் இருந்து வருகிறாத். பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைமையில் நிற்கிறார் ஹனி. அப்போது தான் ஸ்டண்ட் மேன் பனீயின் கேங்கில் அவருக்கு ஏஜண்டாக சேர வாய்ப்பு கிடைக்கிறது. 


பனீ எந்த மாதிரியான ஒரு எஜேண்ட். அவன் நல்லவனா கெட்டவனா என்பது தெரியாமல் தனது நெருக்கடியால் அவனுக்காக வேலை செய்கிறார் சமந்தா. சமந்தா மற்றும் வருன் இடையிலான நட்பு காதலாக மாறுகிறது. கருத்து வேறுபாடு காரணங்களால் தான் வேலை செய்யும் அணிக்கே எதிராக நிற்கிறார் சமந்தா. சமந்தா ஏன் தனது அணியை எதிர்த்து நிற்கிறார். யார் இந்த கேங்ஸ்டர் கும்பல் ? தற்போது சமந்தாவை இவர்கள் ஏன் கொலை செய்ய நினைக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.


சிட்டடெல் விமர்சனம்




ஏற்கனவே இதே கதையின் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது என்றாலும் ராஜ் & டி கே இந்த கதையை தங்களது ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கும் சமந்தாவிற்கு இது ரொம்பவும் புதிதான ஒரு கதாபாத்திரம் என்று சொல்லலாம். தனது மகளைக் காப்பாற்ற வில்லன்களுடன் சண்டை போடும் ஒரு செம ஸ்டைலான கேங்ஸ்டராக சமந்தா அசத்தியிருக்கிறார். சிட்டடெல் தொடரின் மிகப்பெரிய பலம் என்றால் அதில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதமே. 


ஆனால் பலவீனம் என்றால் எல்லாவற்றையும் மேலோட்டமாக மட்டுமே தொட்டுச் செல்லும் அதன் திரைக்கதை. சமந்தாவின் கேரக்டரை வலுப்படுத்த ஒரு நல்ல பேக்ஸ்டோரி இருந்தாலும் அதில் எந்த உணர்ச்சியையும் சேர்க்காம வெறுமனே தகவல்களாக சொல்லிச் செல்கிறார்கள். சமந்தா வேலை செய்யும் இந்த கேங்ஸ்டர் கும்பல் என்ன நோக்கத்தோடு செய்ல்படுகிறார்கள் என்பதில் கடைசி வரை தெளிவே இல்லை. உலகத்தையே கட்டுக்குள் வைக்கக் கூடிய ஒரு கருவி அதனை கைபற்ற நினைக்கும் கும்பல் என்கிற மிஷன் இம்பாசிபள் கதை டெம்பிளேட்டை அப்படியே தூக்கி சொருகியிருக்கிறார்கள். 


வருன் தவான் ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் ஆனால் அவரது ரியாக்‌ஷன்களை பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சிம்ரன் தொடர் முழுவதும் வரும் பெரிய கதாபாத்திரத்தில் வந்து போகிறார். இந்த கதாபாத்திரத்திரம் கடைசிவரை பார்வையாளர்களுடன் ஒட்டுவதே இல்லை. சில காட்சிகள் வரும் தலைவாசல் விஜய் இந்த தொடரில் ஒரு அரிய வைரம் போல் மின்னுகிறார்.


சமந்தா ரசிகர்களுக்கு கூடுதல் தகவல் என்னவென்றால் முதல் முறையாக ஆன்ஸ்கிரீனில் ஒரு நீண்ட முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார் சாம். சிட்டடேல் ஒட்டுமொத்தமாக ஒரு சுமாரான தொடர் ஆனால் சமந்தா இந்த சீரிஸ் மூலம் தன்னை ஒரு செமையான ஆக்‌ஷன் நடிகையாக நிரூபித்திருக்கிறார்.