RRR Review Tamil: 1920 - களில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தை மைய கருவாக வைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்கையை தழுவி உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.(RRR) ( ரத்தம், ரணம், ரெளத்திரம்). பாகுபலி எனும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் இந்தப்படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவியது. பல கட்ட தள்ளிவைப்புகளுக்கு பிறகு, படம் இன்று வெளியாகியிருக்கிறது.


படத்தின் கரு 


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பழங்குடி இன பெண்ணின் மகளாக வரும் மல்லி, பாட்டுப்பாடிக்கொண்டே கையில் வண்ணம் தீட்டிவிட, மல்லி இனி எனக்கு என கையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்று விடுகிறார் ராணி. மல்லியை மீட்க குழுவின் காப்பானாக பீம் ( ஜூனியர் என்.டி.ஆர்) திட்டம் தீட்டி ஆங்கிலேயர்களை நெருங்க, இந்த விஷயம் அவர்களின் காதுகளுக்கு செல்கிறது. இதனையடுத்து பீமை பிடிப்பதற்கான பொறுப்பு, பிரிட்டிஷ் போலீஸ் படையில் சிறப்பு அதிகாரியாக மாறத்துடிக்கும் ராமராஜூ கைகளுக்கு  செல்கிறது. இவர் ஒரு பக்கம் பீமை பிடிக்க கட்டம் கட்ட, சம்பவம் ஒன்றால் ராமராஜூக்கும் பீமுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு என்னானது?, இருவரும் அவரவர் எடுத்துக்கொண்ட பாதையில் வெற்றி அடைந்தார்களா? மல்லி மீட்கப்பட்டாளா? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் மீதிக்கதை.. 


கதாப்பாத்திர வடிவமைப்பு எப்படி?


போலீஸ் அதிகாரியாக ராம்சரண்(Ramcharan). பழங்குடி இன காப்பானாக ஜூனியர் என்.டி.ஆர். சிக்ஸ்பேக்ஸ் உடற்கட்டுடன் வரும் இருவரும் அபாரமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக ராம்சரண், போலீஸுக்கே உரித்தான எடுப்புடனும் மிடுக்குடனும் வரும் அவர் அதகளம் செய்கிறார். சண்டை காட்சிகளாகட்டும், குற்ற உணர்வில் கூனி குறும் காட்சிகளாட்டும் எல்லாவற்றிலும் சிக்ஸர்தான். 


ஜூனியர் என்.டி. ஆரும் ஒன்றும் சளைத்தவர் இல்லை. சாதுவாக ராம்சரணை  ‘பையா பையா’ என அழைப்பதாகட்டும், மல்லிகாவிடம் பாசத்தில் உருகுவதாகட்டும், நேர்மையின் நெஞ்சுறுதியை காட்சிக்கு காட்சி பார்வையாளர்களுக்கு கடத்துவதாகட்டும் என அனைத்திலும் துவம்சம் செய்து விடுகிறார். இவர்கள் தவிர அஜய் தேவ்கனுக்கு கனமான கதாபாத்திரம். கொஞ்சம் நேரம் வந்தாலும் நெஞ்சில் நின்று விடுகிறார். ஆல்யா பட் எனும் திறமையான நடிகைக்கு, அவருக்கு ஏற்ற தீனியை கொடுக்காத இடத்தில் ராஜமெளலி சற்று ஏமாற்றிவிட்டார். சமுத்திரகனிக்கும் அதே ரகம்தான்.


ராஜமெளலியின் ட்ரேடு மார்க்


பாகுபலி பட வெற்றியை தொடர்ந்து எழுந்த மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு எனும் ப்ரஷ்ஷருக்கு மத்தியில் இப்படி ஒரு படத்தை கொடுத்ததிற்கு முதலில் ராஜமெளலிக்கு பாராட்டுகள். கதாபாத்திர வடிவமைப்பு, கற்பனை என்றாலும் ஆடியன்ஸ் ஒத்துக்கொள்ளும் வகையில் காட்சிகளை அமைப்பது. கதையின் எமோஷனுடன் பார்வையாளர்களை கனக்ட் செய்வது, கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது அவர்களின் சுற்றியுள்ள ப்ராபர்ட்டிகளை வைத்து மொமண்டுகளை கிரேயட் செய்வது என அனைத்திலும் ராஜமெளலி மீண்டும் ஒரு முறை தனது முத்திரையை அழுத்தமாக பதித்து இருக்கிறார். இந்தப்படத்தில் ராம்சரணுக்கு நெருப்பையும், என்.டி.ஆருக்கு நீரையும் தீம்மாக வைத்து கதையை கடத்திய விதம் அற்புதம். 


பேலன்ஸ் மிஸ்ஸிங்


பாகுபலி படத்தை இந்தப்படத்தோடு கம்பேர் செய்யக்கூடாது என்றாலும், ஒரு விஷயத்தில் இங்கு கம்பேரிசன் அவசியமாகிறது. பாகுபலி படத்திலும் இதே போல இரண்டு கதாநாயகர்கள். ஆனால் இந்த இரண்டு நாயகர்களுக்கான பேலன்ஸ் கனகச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் ராம்சரணின் கதாபாத்திரமும், அந்தப்பாத்திரத்திற்காக உருவாக்கப்பட்ட சில சீன்களும், ஜூனியர் என்.டி.ஆருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸ் விட கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ராஜமெளலின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. 


மரகதமணி இசையில் நாட்டு குத்து பாடல் மட்டும்  துள்ளல். பின்னணி இசை படத்தோட ஒன்றினாலும், இதை விட  இன்னும் சிறப்பான பின்னணி இசையை கொடுத்திருக்கலாம். பாகுபலி வெற்றியின் குறிப்பிட்ட சதவீதம், மதன் கார்க்கி எழுதிய வசனங்களுக்கு செல்லும். ஆனால் இந்தப்படத்தில் பேர் சொல்லும் அளவிற்கான வசனங்களை அவர் தராமல் போனது ஏமாற்றம்.