இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் , மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ஜோ திரைப்படம் இன்று திரையரங்கத்தில் வெளியாகி இருக்கிறது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து மாத்தியு அருள் நந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். சித்து குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பல்வேறு தரப்புகளிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்ற ஜோ திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


கதை


படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற வகையில் கதாநாயகன் ஜோவின் (ரியோ) வாழ்க்கையைச் சுற்றி நடப்பதுதான் ஜோ படத்தின் கதை. தன்னுடைய திருமணத்தின் முந்தின நாள் இரவு நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கும் ஜோவுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தும்படி ஜோவிடம் கேட்கிறார் மணப்பெண்  (பாவ்யா த்ரிகா).  கதை அப்படியே ஜோவின் கடந்த கால கல்லூரி  நாட்களுக்கு செல்கிறது. தன்னுடன் படிக்கும் சுசித்ராவை ( மாளவிகா மனோஜ்) பார்த்த நொடியில் இருந்தே காதலிக்கிறார் ஜோ . (எல்லா காதல் படத்திலும் வரும் வழக்கமான காட்சியாக இருக்கிறதில்லையா) . ஜோ சுசித்ராவிடம் தன்னுடைய காதலை சொல்வதும் , அவர்களுக்கு இடையிலான காதல் எப்படியானதாக இருக்கிறது என்பதே முதல் பாதி. 


படத்தின் தொடக்கத்தில் காட்டப்பட்டதுபோல் ஜோவின் இந்த காதல் முடிந்ததால் தான் வேறொரு கல்யாணத்திற்கே சம்மதித்திருக்க முடியும் இல்லையா? ஜோவின் இந்த கல்லூரி காதல் என்னவாகிறது என்பதுடன் முதல் பாதி முடிகிறது.


இரண்டாம் பாதியில்


திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்ன அதே பெண்ணிற்கு ஜோ தாலி கட்டுகிறார். அதுதான் ட்விஸ்ட் . அதை ஜோ ஏன் செய்தார். ஜோவின் கடந்த காலமும் அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் கடந்த காலமும் எப்படி சம்மந்தப்பட்டிருக்கின்றன. தங்களது கடந்தகாலத்தில் இருந்து அவர்கள் மீண்டு வருகிறார்களா? என்பதே இரண்டாம் பாதி.


என்ன ப்ளஸ்


ஒரு பொதுவான புள்ளியில் இணைக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு கதைகளை இந்தப் படத்தில் பார்க்கலாம். ஏற்கனவே நாம் பார்த்த காதல் படங்களில் இருக்கும் பல அம்சங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், தான் உருவாக்கி இருக்கும் உலகத்திற்குள் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஒன்ற வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன் ராம். குறிப்பாக படத்தின் முதல் பாதி காதலர்களுக்கு இடையிலான ஊசலாட்டங்களை , அன்பை, பரிவை, வெகுளித்தனத்தை மிக அழகான காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 


அதே நேரத்தில் இரண்டாம் பாதியில் வரும் சார்லீ  மற்றும்  கோச்சார்யா என்கிற கதாபாத்திரங்கள் முதல் பாதியில் இருந்த நகைச்சுவையையும் உணர்ச்சிகளையும் நிலைக்க வைக்கிறார்கள்.


மைனஸ்


ஒரு பாசிட்டிவான கதையை சொல்லி முடித்து வைக்க வேண்டும் நினைத்ததாலோ என்னவோ முதல் பாதியில் பார்வையாளர்கள் படத்தில் ஒன்றியது போல் இரண்டாவது பாதியில் ஒரு ஹாப்பி எண்டிங்கை மற்றும் வேடிக்கைப் பார்த்துச் செல்கிறார்கள். ரசிக்கும்படியான எளிமையான நுணுக்கங்களை கதாபாத்திரங்களுக்கு உருவாக்கிய இயக்குநர் கதை நிகழும் உலகத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக கட்டமைத்திருக்கலாம். காதல் கதைகளில் எந்த அளவிற்கு அக உணர்ச்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையோ அதே அளவிற்கு புற சூழல்களும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. உதாரணத்திற்கு தொடக்கம் முதல் ஜோ எந்த மாதிரியான ஒரு பின்னணியைச் சேர்ந்தவன் , என்ன படிக்கிறான், அல்லது இந்த கதை நிகழும் இடங்கள் பெரிதாக பொருட்படுத்தப்பட வில்லை. அதனால் தான் சுசித்ராவின் சொந்த ஊரான கேரளாவில் நடக்கும் காட்சிகள் இன்னும் நெருக்கமானதாக மாறுகின்றன.


சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றாலும் வழக்கமான தமிழ் சினிமாக்களில் பின்பற்றப்படும் சில காட்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். காதல் தோல்வியில் ஆண்கள் குடிக்கும் வழக்கம் உடையவர்கள்தான். ஆனால் ஒரு பாட்டு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க குடிப்பது என்பது இயக்குநரின் தேர்வு இல்லையா?


நோட் செய்ய வேண்டியவை




ஜோவாக நடித்த ரியோவின் மிகப்பெரிய பலம் என்றால் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் தன்னுடைய சிக்னேச்சரை உருவாக்கும் முயற்சி அவரிடம் இருப்பதே. ஒரு ராம் காம் படத்தில் வரும் ஹீரொ தன்னை எப்போது ஃபோட்டோஜெனிக்காக வைத்திப்பது எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அழகாக தெரிய வேண்டும் என்கிற தோரணை ஆகியவை தான் கமர்ஷியல் படங்களில் பெரும்பாலான நடிகர்கள் செய்வது. ஆனால் ரியோ தன்னுடைய   நடிப்பை ஒரு ஃப்ரேமுக்காக மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. கதைப் போக்கில் இயல்பான முகபாவனைகளை வெளிப்படுத்துகிறார். சுசித்திராவாக நடித்த மாளவிகா மனோஜ் மிக ஹாசியமான ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார்.  நகைச்சுவைக் காட்சிகளின் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள் . குறிப்பாக அன்புதாசன் அழுத்தமான கதாபாத்திரங்களை செய்யக் கூடியவராக தெரிகிறார்


முடிச்சுக்கலாம்


இரண்டு காட்சிகளில் இரண்டு பெண்கள் ஜோவை பொது இடங்களில் கட்டிப் பிடிக்கிறார்கள். ஒரு பொது இடத்தில் தன்னை ஒரு பெண் கட்டிப்பிடிக்கும்போது ஒரு ஆண் தயக்கப்படும் அழகான காட்சியை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். மிக ஆத்மார்த்தமான கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் ஹரிஹரன் கொஞ்சம் தமிழ் சினிமா கட்டமைத்திருக்கும் பிம்பங்களின் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருந்தால் ஜோ திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பாக வந்திருக்கலாம்