இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் முடங்கிய மக்களுக்கு பெரிய அளவில் நிம்மதியை கொடுத்தது இணைய தொடர்கள்தான். இந்த வெப் தொடர்கள் சினிமா ரசிகர்களின் ரசனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. அந்த வகையில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் உருவான 'டைம் என்ன பாஸ்' வெப் சீரிஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சுப்புவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் டைம் ட்ராவல் என்ற கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இந்த வெப் சீரிஸ்.




கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி OTT தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் பிரபல நடிகர் பரத். ஐ.டி கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டு அபார்ட்மெண்ட் வாழ்க்கையை வாழும் நாயகனின் ஹைடெக் வாழ்க்கையில். காலம்செய்த வில்லத்தனத்தால் நான்கு வெவ்வேறு காலகட்டத்தில் இருந்து நான்கு வெவ்வேறு மனிதர்கள் அவர் வீட்டில் குடிபுக, அடுத்த ஓராண்டு அந்த வீட்டில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களின் தொகுப்பே இந்த 'டைம் என்ன பாஸ்'. 




வில்லத்தமான காலமாக குரல்வழியே இணைந்துள்ளார் பிரபல நடிகர் பார்த்திபன். அவர்செய்த வில்லத்தனத்தில் தனிமையில் இனிமைகாணும் ஹீரோ பரத் வாழ்க்கையில் குறுக்கிட கிபி 12-ஆம் நூற்றாண்டில் இருந்து கிள்ளிவளவனாக ரோபா சங்கர், 1970-களில் இருந்து சயின்டிஸ்ட் பாரதியாக பிரியா பவானி சங்கர், 1800-களில் இருந்து ஹன்னாஹ் கிளார்க்காக சஞ்சனா சாரதி இறுதியாக எதிர்காலத்திருந்து பக்கியாக பிரபல நடிகர் கருணாகரன் பாத்ரூம் வழியே வந்துசேர்கின்றனர். 


சயின்டிஸ்ட் பாரதி அவருடைய காலகட்டத்தில் நடத்திய டைம் ட்ராவல் ப்ராஜெக்ட் ஒன்றில் சிக்கல் ஏற்படவே, வெவ்வேறு காலத்தில் இருந்து பாரதி உள்பட 4 பேர் 2020-ஆம் ஆண்டிற்கு தவறுதலாக வந்து சிக்கிக்கொள்கின்றனர். வந்தவர்கள் மீண்டும் தங்களுடைய காலத்திற்கு செல்லாதவாறு ஒரு தவறை செய்துவிடுகிறார் பரத். செய்த தவறுக்கு தண்டனையாக அடுத்த ஓராண்டு நான்கு வித்தியாசமான மனிதர்களுடன் தன்னுடைய நேரத்தை அவர் கழிக்கும் விதத்தை 10 வித்தியாசமான பாகங்களை கொண்டு நகைச்சுவையுடன் கொடுத்துள்ளார் இயக்குநர் சுப்பு. 




 பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கும் கதை என்றபோதும் காட்சியமைப்பில் சற்றும் சோர்வில்லாமல் நகர்த்திய ஒளிப்பதிவாளர் முரளிக்கு ஒரு சபாஷ். பின்னணி இசையும் குறிப்பாக டைட்டில் பாடலும் Madley Blues இசையில் முணுமுணுக்க வைக்கிறது. சங்ககாலத்திருந்து வந்து, இந்த காலத்திற்கு தன்னை மாற்றிக்கொள்ளும் வேடத்தில் மிகக்கச்சிதமாக நடித்துள்ளார் ரோபோ ஷங்கர். எதிர்காலத்தில் இருந்து வரும் பக்கியான கருணாகரன் அறிவியலில் பின்தங்கியிருக்கும் 2020-ஆம் ஆண்டினை ஆச்சர்யத்தோடு பார்த்து, அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விடைதேடி தனது வாட்சிடம் கேட்கிறார். சயின்டிஸ்ட் பாரதியோ தனது காதலன் கண்ணன் நினைவலையில் மூழ்கி மீண்டும் தனது காலத்திற்கு செல்ல வழிதேடி வருகின்றார் (அந்த கண்ணன் யாரென்பதில் சூப்பர் ட்விஸ்ட்). இறுதியாக சூப்பர் சிங்கராகும் கனவோடு வலம் வருகிறார் சஞ்சனா சாரதி. 


மேலும் இந்த கூட்டத்தை வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கும் வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் அலெக்சாண்டர், ஹன்னாஹ்வின் காதலாக அசோக் செல்வன், அபார்ட்மெண்ட் உரிமையாளராக மமதி மற்றும் பாட்டுப்போட்டி ஜட்ஜாகவும் காந்தியாகவும் அசத்தியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். ஓராண்டில் இந்த கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சுவாரசியமான விஷயங்கள். தலைமுறை வேறுபட்டால் வரும் குழப்பங்கள் என்று பல சுவாரசியமான விஷயங்களை நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர்.            


10 பாகங்களை கொண்ட இந்த வெப் தொடர், OTT தளத்தில் தமிழில் வெளியான வெகுசில சயின்ஸ் பிக்ஷன் வெப் தொடர்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.