`மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 - பாகம் 1’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே வெளியாகியிருந்த முதல் நான்கு பாகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தொடங்கிய போது, ’மணி ஹெய்ஸ்ட் சீசன் 4’ வெளியாகிருந்தது. அப்போது அதனை அதிகம் பேர் கண்டுகளித்தனர். தற்போது அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது சீசனின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இதில் 5 எபிசோட்கள் உள்ளன.
பேங்க் ஆஃப் ஸ்பெயினில் தங்கத்தை உருக்கிக் கொள்ளையடிக்கச் சென்ற ப்ரொபசரின் கூட்டாளிகளுள் முக்கியமான நபரான நைரோபியின் மறைவு, காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்த ப்ரொபசரின் காதலி லிஸ்பான் கொள்ளை நடக்கும் வங்கிக்குள் நுழைதல், பேங்க் ஆஃப் ஸ்பெயின் கொள்ளை வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்து, பிறகு உயரதிகாரிகளால் கைவிடப்பட்ட அலிசியா ப்ரொபசரின் இடத்தைக் கண்டுபிடிப்பது, அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டுவது என மிக மிக முக்கியமான ஒரு தருணத்தில் முடிவடைந்தது `மணி ஹெய்ஸ்ட்’ நான்காவது சீசன். இந்தத் தருணங்களில் தொடர்ச்சியை இந்த சீசனில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சீசன், மணி ஹெய்ஸ்ட் தொடரின் முடிவின் தொடக்கம்.
நைரோபியின் மரணத்திற்குப் பிறகு, கொள்ளையடிப்பவர்களுக்குத் வழிகாட்டுகிறார்கள் டோக்கியோவும், லிஸ்பானும். ப்ரொபசரின் இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அலிசியாவால் கொடுமைப்படுத்தப்படுகிறார். லிஸ்பானை வங்கியில் இறக்கிவிட்ட ஹெலிகாப்டர் ஓட்டுநர் மார்செய்ல் மற்றொரு கூட்டாளியுடன் தப்பித்து, ப்ரொபசரை வந்தடைகிறார். அவர்கள் இருவரையும் அலிசியா சமாளித்து, கொள்ளையடிப்பவர்களின் தலைமையை காலி செய்கிறார். இப்படியான தருணத்தில், வங்கிக்குள் ராணுவம் நுழைகிறது. மறுபக்கம், கடத்தப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை ஆர்டுரோ தூண்டிவிட்டு, டென்வருடன் மோதுகிறான். குழப்பமான சூழலில், ப்ரொபெசர் அலிசியாவிடம் இருந்து தப்பித்தாரா, ராணுவத்தைக் கொள்ளையர்கள் சமாளித்தார்களா, இந்த ஹெய்ஸ்ட் வெற்றி பெறுமா என்ற விடைகளுக்கான தொடக்கமாக அமைந்திருக்கிறது இந்த சீசன்.
இந்தக் கதை பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கையில், ப்ளாஷ்பேக் கதை ஒன்றில் பெர்லின் தனது மகன் ரபேலுக்குக் கொள்ளையடிக்க கற்றுக் கொடுப்பதாக மென்மையான கதையைக் காட்டியிருக்கிறார்கள். அடுத்து வெளிவரவிருக்கும் ஐந்தாம் சீசனின் இரண்டாம் பாகத்தில், இரண்டு கதைகளும் இணையும் புள்ளியில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மணி ஹெய்ஸ்ட் தொடரின் மிக முக்கிய ப்ளஸ் அம்சமே ப்ரொபசரின் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் தான். எப்படிப்பட்ட பின்னடைவு ஏற்படும் போதும், ப்ரொபசர் அதில் இருந்து மீண்டு வருவதற்கான மேற்கொள்ளும் உத்திகளுக்கு ரசிகர்கள் அதிகம். இந்தப் பாகத்தில், அதனை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அலிசியாவால் ப்ரொபசர் கண்டுபிடிக்கப்பட, அதில் இருந்து தப்பிக்க முயன்றுகொண்டிருக்கிறார். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள் தலைவன் இல்லாத குழுவாக, நிதானமாக சிந்திக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட, மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கிறது கொள்ளையடிக்கும் குழு.
டென்வருக்கும், மணிலாவுக்கும் இடையிலான பால்ய கால உறவு, டோக்கியோவின் கடந்த காலம், ஸ்டாக்ஹோமின் குற்றவுணர்வு எனக் கொள்ளையடிப்பவர்களின் உணர்வுகளை அட்டகாசமாகத் திரைக்கதையில் சேர்த்திருக்கின்றனர். எனினும், அனைவருக்கும் பிடித்த கூட்டாளியான நைரோபியின் மரணத்தின் போது எழுந்த ஆக்ரோஷமும், கோபமும் இதில் மிகவும் குறைந்து காணப்பட்டது. நைரோபியின் நெருங்கிய நண்பனான ஹெல்சின்கியின் கோபம் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பது திரைக்கதையின் பிரச்னை. அலிசியாவை அரசு கைவிட, ப்ரொபசரின் எதிரிகளின் தரப்பில் பலமான எதிரி என்று யாரும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இதுவும் ஒரு மைனஸாக மாறியுள்ளது.
தொடக்கத்தில் மாற்றம், முன்னேற்றம் என்று மக்களிடம் அறைகூவல் விடுத்த ப்ரொபசர் இந்த பாகத்தில் அரசால் கைவிடப்பட்ட தனிநபரான காவல் அதிகாரிக்குத் `தன் வழியில்’ உதவுகிறார். ராணுவத்தையே எதிர்கொள்ளவும், நடைபெறும் ஹெய்ஸ்டைப் போர் என்று அறிவிக்கவும் முந்தைய பாகத்தில் தைரியம் காட்டிய ப்ரொபசர் இந்தப் பாகத்தில் தன் கூட்டாளிகளுடன் மோத, சொற்ப வீரர்களை மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கிறார். இவர்களும் மனித உரிமை மீறல்களில் மட்டுமே ஈடுபட்டவர்கள்.
ராபின்ஹூட் பாணியில், பணமற்ற மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ‘பெல்லா சாவ்’ என்ற இத்தாலிய பாசிச எதிர்ப்புப் பாடல் பாடி, உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதார சிஸ்டத்தின் பிரச்னையையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்க்குரலாகவும் தன்னை முன்னிறுத்திய `மணி ஹெய்ஸ்ட்’ தற்போது அதன் வில்லன்கள் அனைவரும் `சட்டப்படி கெட்டவர்கள்’ என்ற தனி நபர் எதிர்ப்பில் முடிந்திருக்கிறது. ஸ்பெயின் உளவுத்துறை அதிகாரி டமாயோ போலியான ஆதாரங்களைச் செய்பவர்; சட்டத்தை மீறிய நடவடிக்கைகளை எடுப்பவர். வங்கிக்குள் நுழைந்திருக்கும் ராணுவ அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தி, ராணுவத்தால் தண்டனை அளிக்கப்பட்டவர்கள். ஆக, மொத்த கதையும் தனி நபர் எதிர்ப்பாக, இந்த சீசனில் கதைப் போக்கை மாற்றியுள்ளனர் `மணி ஹெய்ஸ்ட்’ திரைக்குழுவினர்.
இவற்றைத் தாண்டி, வழக்கம் போல் அனைவரும் எதிர்பார்க்கும் ஆக்ஷனுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது இந்தத் தொடர். பெர்லின் தன் மகனுடன் நிகழ்த்தும் ஹெய்ஸ்ட் தொடங்கி, டோக்கியோவின் மனமாற்றம் வரை அழகான காட்சிகளும் இதில் இருக்கின்றன. எனினும், தற்போது கொள்ளையடிக்கும் குழுவினர்களுள் மிக முக்கியமான மற்றொரு நபர் இறப்பதோடு, இந்தப் பாகம் முடிவடைகிறது. அடுத்த பாகத்தில், ஹெய்ஸ்ட் வெற்றிகரமாக முடிவடைந்ததா, அதன்பிறகு அனைவரும் என்னவானார்கள், அலிசியாவின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன, ப்ரொபசர் அடுத்த நிகழ்த்தப் போகும் மேஜிக்கிற்கும், பெர்லின் - ரபேல் கதைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற வினாக்களுக்கு அடுத்து வெளிவரும் பாகத்தில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
`மணி ஹெய்ஸ்ட்’ ரசிகர்கள் இந்தப் பாகத்தின் விறுவிறுப்பைக் கொண்டாடுவதோடு, அடுத்த 3 மாதங்களுக்குப் புதிய தியரிக்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். `மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் முடிவான ஐந்தாம் சீசனின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 3 அன்று வெளியாகிறது.