இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து  இன்று வெளியாகியிருக்கும்  திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். 


 


                                   


 



கதையின் கரு: 


‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை வந்தியத்தேவன் கதாபாத்திரம் வழியாக, நமக்கு கடத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். போரில் தனது வெற்றிக்கு தோளோடு தோள் நின்ற வந்தியத்தேவனை, கடம்பூர் மாளிக்கைக்குள் நடக்கும் சதியை தெரிந்து வருமாறு அனுப்புகிறார் ஆதித்ய கரிகாலன்.


அவரது கட்டளையை ஏற்ற வந்தியத்தேவன் தனது குதிரையான செம்பனை அழைத்து கொண்டு, அங்கு நடக்கும் சதியை லாவகமாக அறிந்து கொண்டதோடு, அதனை பல தடைகளை தாண்டி சுந்தரச்சோழனான பிரகாஷ்ராஜிடம் கொண்டு சேர்க்கிறார்.


இதற்கிடையே நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராய் அரங்கேற்றிய அந்த சதியை தெரிந்து கொண்ட குந்தவை (த்ரிஷா) இலங்கையில் இருக்கும் அருண்மொழி வர்மனை அழைத்து வரச்சொல்லி வந்தியத்தேவனை அங்கு அனுப்புகிறார். இறுதியில் வந்தியத்தேவன் அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு அழைத்து வந்தானா இல்லையா... நந்தினி திட்டமிட்ட சதி என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 


கதாபாத்திரங்கள் எப்படி? 


பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற தனது 70 வருட கனவை, மிக நன்றாகவே திரையில் காட்சிப்படுத்திருக்கிறார் மணிரத்னம். படத்தின் அச்சாணி வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறார் நடிகர் கார்த்தி. 




பல இடங்களில் வந்தியத்தேவனாகவே நம்மை மகிழ்விக்கும் கார்த்தியின் நடிப்பில், நாம் முன்பு பல படங்களில் பார்த்த அவரது மேனரிசங்கள் வருவது சற்று ஏமாற்றமாக இருந்தது. நந்தினியாக ஐஸ்வர்யாராய். அவருக்கே வார்த்தெடுக்கப்பட்டது போன்ற கதாபாத்திரமாக நந்தினி கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அவரது பேரழகும், வஞ்சம் நிறைந்த கண்களும் கடக்கும் காட்சிகள் அத்தனையும் சிலிர்ப்பு. 


ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம், அவருக்கே உரித்தான பாணியில் கதாபாத்திரத்தின் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் ‘சோழா சோழா’ பாடலில், “ரெமோ”  சிம்பிளை கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. 


குந்தவையாக த்ரிஷா.. அழகும், ஆட்சியை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற எத்தனிப்பு நிறைந்த அந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.. பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இன்னபிற கதாபாத்திரங்களாக வரும் பெரிய பழுவேட்டையரையர், சின்ன பழுவேட்டையரையர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கவனத்தை ஈர்த்து இருக்கின்றன.


ரியல் ஹீரோ யார்?


படம் உருவாக்கத்தில் மணிரத்னம், ஜெயமோகன், ரவி வர்மன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பல ஹீரோக்கள் இருந்தாலும்,  உண்மையில் நம்மை தஞ்சை தேசத்திற்குள் கொண்டு செல்வது கலை இயக்குநர் தோட்டா தரணியின் வேலைதான். அரண்மனை,கப்பல், போர்க்களம் என அவ்வளவு வேலைப்பாடுகள். அனைத்தையும்  துரோணாச்சாரியாராக இருந்து சிறப்பாக செய்திருக்கிறார். 




அடுத்த பலம் ஏ.ஆர்.ரஹ்மான்.. பாடல்கள் அனைத்திலும் அவர் பெரும் உழைப்பை கொடுத்திருப்பது திரையில் தெரிகிறது. ஆனால்  ‘சோழா சோழா’  ‘ராட்சஸ  மாமனே’ பாடல்களில் இசைக்கேற்ற காட்சிகளை இன்னும் அழகாக பொருத்தியிருக்கலாம். 


ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் நன்றாகவும், சில இடங்களில் அந்நியமாகவும் தெரிகிறது. இறுதியாக மணிரத்னம்.. உண்மையில் இப்படி ஒரு அனுபவத்தை, இந்த வயதில் கொடுத்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்திற்கு முதலில் பாராட்டுகள். போர் சம்பந்தமான காட்சிகளில் கதையை சொல்ல ஆரம்பிக்கும் மணி, அவருக்கே உரித்தான ஸ்டைலில் இறுதி வரை கதையை நகர்த்தி இருக்கிறார். 


ஐஸ்வர்யாராய் அறிமுக காட்சிகள், விக்ரம் ஐஸ்வர்யராய் சந்திக்கும் இடம், அரண்மனை காட்சிகளை கையாண்டிருப்பது, பாடல்கள், இறுதியில் கடலில் நடக்கும் போர் என எல்லாவற்றிலும் மாஸ்டர் மணிரத்னத்தின் டச் இருந்தது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு அபாரத்திலும் அபாரம். கதாபாத்திரங்களின உணர்ச்சிகளை அழகாக கடத்திய மணி திரைக்கதையில் ஹை கொடுக்கும் காட்சிகளை கொண்ட்டாட்டமாக கையாள்வதை மிஸ் செய்ததும், அதிகமான வசனங்களால் கதை சொல்ல முயன்றதும் படத்தின் பலவீனம்.