Society of the Snow Review in Tamil: சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ என்கிற ஸ்பானியத் திரைப்படம் வெளியாகி பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட விமான விபத்தைப் பற்றி  பாப்லோ வியர்ஸி ஒரு புத்தகம் எழுதினார். இந்த புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம்தான் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (Society of the Snow) . ஜே.ஏ. பயோனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒரு பேராபத்தில் சிக்கும் மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான வேட்கையை உணர்வுப்பூர்வமான சித்தித்துள்ளது இப்படம்.
  





இந்தப் படம் R சான்றிதழ் பெற்றுள்ளது. குழந்தைகள் இந்தப் படத்தை தங்களது பெற்றோரின் கண்கானிப்பில் பார்ப்பது அவசியம். 


சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ


தென் அமெரிக்காவில் இருக்கும் உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு அணி மற்றும் அவர்களின் உறவினர் நண்பர்கள் என மொத்தம்  45 நபர்கள் ஒரு  விமானம் வழியாக சிலி (chile) செல்கிறார்கள். பல்லாயிரம் மைல்களுக்கு வெறும் பனியால் மட்டுமே சூழ்ந்த மலைத்தொடர்களை கடந்துசெல்லும் போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் விபத்திற்குள்ளாகி இரண்டு பாகங்களாக உடைந்து சிதறுகிறது. சுற்றி ஒரு சிறு உயிரசைவும் இல்லாத பனிப்பள்ளத்தாக்கின்  நடுவில் விமானம் விழுகிறது. விபத்தில் சிலர் உயிரிழந்துவிட மீதமுள்ளவர்களில் சிலர் காயங்களுடன் உயிர்தப்புகிறார்கள்.  திசை தெரியாத இந்த பனிப்பரப்பில்  உறையவைக்கும்  குளிரில், உணவில்லாமல் , வலியில் தாங்கள் மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில் அவர்கள் ஒவ்வொரு நாளும்  காத்திருக்கிறார்கள். இந்த பனிப்பிரதேசத்தில் இருந்து அவர்கள் எப்படி வெளியேறினார்கள்  என்பதே படத்தின் கதை.




இந்த 45 பேரில் ஒருவராக இருந்த நூமா என்கிற ஒரு கல்லூரி மாணவரின்  குரலில் நமக்கு கதை  சொல்லப்படுகிறது.  சர்வைவல் த்ரில்லர் என்கிற சினிமா வகைமைக்குள் நிறையப் படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.  லைஃப் ஆஃப் பை  பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்த ஒரு படம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் கடைசியில் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்பது மையக்கதையாக இருக்கும். ஆனால் இந்த எதிர்பாராத திருப்பத்திற்கு பிறகு வாழ்க்கை எல்லாரையும் போல் அவர்களுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா என்பது தான் முக்கியமான கேள்வி. இப்படியான சூழ்நிலையில் ஒரு மனிதனின் தன்னறம் , அன்பு , காதல் , சக மனிதன் மீதான கரிசனம் , இறைவன் மீதான நம்பிக்கை என எல்லா விழுமியங்களும் தடமழிந்து போனப்பின் மீண்டும் வாழ்க்கையை அவர்களுக்கு பழைய மாதிரி எப்படி இருக்க முடியும். இந்த உணர்ச்சியை ஆதாரமாக வைத்தே சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படத்தின் கதை நமக்கு சொல்லப் படுகிறது.


பனியில் மாட்டிக்கொண்ட இந்த மனிதர்களை தேடும் முயற்சிகள் கைவிடப் படுகின்றன. அவர்களில் ஒவ்வொருத்தராக இறந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் எஞ்சியிருப்பவர்கள் பசியில் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்திற்கு மேல் உயிர்பிழைக்க தங்களது இறந்த நண்பர்களின் மாமிசத்தை சாப்பிடும் நிலைக்கும் செல்கிறார்கள்.  


சுமார் 72 நாட்களுக்குப் பிறகு இந்த 45 நபர்களில்  16 பேர் மீட்கப்படுகிறார்கள். அவர்களைச் சுற்றி பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் கூட்டம் சூழ்கிறது. வீடு திரும்பியவர்களை அணைத்துக் கொண்டு ஒரு அம்மா “ இது ஒரு அற்புதம்” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் தப்பி வந்தவர்களுக்கு இது அற்புதமாக தெரிவதில்லை. அவர்கள் அனைவரின் மனதில் ஒரே கேள்வி தான் இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் என்ன அர்த்தம். உயிரிழந்த தங்களது நண்பர்கள், இப்பொது பிழைத்திருக்கும் தங்களுக்கும் என்ன வித்தியாசம் ? 




மற்ற சர்வைவல் படங்களில் இருந்து சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ வித்தியாசப்படும் மற்றொரு  இடம் , எப்படியான ஒரு பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும்,  அவனது கடவுள் அவனது மக்கள் , அவனது நம்பிக்கைகள் எல்லாம் அவனை கைவிட்டாலும் உயிர்வாழ வேண்டும் என்கிற தாகம் ஏன் அவனுக்குள் எஞ்சி இருக்கிறது என்கிற ஆதாரமான கேள்விகளை இந்தப் படம் நெடுகிலும் தொடர்ச்சியாக கதாபாத்திரங்களில் உரையாடல் வழியாக எழுப்பப்படுகின்றன. 




விமானம் விபத்திற்குள்ளாகும்  காட்சிகளின்  துல்லியம், பனிப்பள்ளத்தாக்கையும் அதன் விஸ்தீரணத்தை காடுவதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கும் வைட் ஷாட்ஸ் மற்றும்  ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகத்தில் படர்ந்திருக்கும் இருண்மை வழியாக  நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அனுபவத்தை கடத்துகிறது சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ. க்ளைமேக்ஸில் வரும் பின்னணி இசை இழப்புக்கும் மீட்பிற்கும் இடையிலான உணர்ச்சியை பிரதிபலிக்கிறது .  நிறைய புதுமுகங்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களது மனவோட்டங்களை துல்லியமாக பிரதிபலிக்கிறார்கள். வெடித்த உதடுகள், வெளிரிய முகங்கள் என ஒப்பனைக் கலைஞர்களுக்கு பாராட்டுகள்.   ஒளிப்பதிவிற்கு ஒரு தனித்துவம் கைகூடியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றி பனிமலைகள் சூழந்திருக்க எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறம் , அதில் அதிகாலை சூரியனின்  வெளிச்சம் மெல்ல படர்கிறது. அடுத்த நொடி உயிர் பிழைப்போமா என்று தெரியாத நிலையில் இருக்கும் ஒருவன் இந்த காட்சியின் அழகைப் பார்த்து ரசிக்கிறான். ஆனால் துரதிஷ்டவசமாக தான் இறக்கப்போவதை நினைத்து வருத்தப் படுகிறான். அந்த நபரின் அதே உணர்ச்சியை பார்வையாளர்களாகிய நாமும் உணர்கிறோம் . ஒவ்வொரு முறை சூரிய ஒளி கதாபாத்திரங்களின் முகத்தில் படரும் போது ஒரு வெம்மையை பார்வையாளர்கள் உணரமுடிவது ஒளிப்பதிவாளரின் வெற்றி.




சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படம்  நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.