Natchathiram Nagargirathu Review: காதல் பற்றிய வேவ்வேறு பார்வை கொண்ட நபர்கள் அடங்கிய ஒரு நாடகக்குழு, காதல் நாடகம் ஒன்றை அரங்கேற்ற திட்டமிடுகிறது. இந்த குழுவில் பிரேக் - அப் ஆன காதல் ஜோடிகளான துஷாரா விஜயன், காளிதாஸ், ஆதிக்க சாதி என பார்க்கப்படும் குடும்ப பின்னணி கொண்ட கலையரசன், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை என பலர் அடங்கியிருக்கிறார்கள். இவர்களிடையே சிக்கும் அந்த நாடகம் இறுதியில் அரங்கேற்றப்பட்டதா? பிரேக்- அப் ஆன ஜோடியின் நிலை என்ன? கலையரசனுக்கு தெளிவு பிறந்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்களை அரசியல் விவாதமாக மாற்றினால் அதுவே பா. ரஞ்சித்தின்  ‘நட்சத்திரம் நகர்கிறது’.


 


                                                       


துஷாரா விஜயனுக்கு அவரது கேரியரில் மிக முக்கியமான கதாபாத்திரமாக ரெனே இருக்கும். அவ்வளவு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் அவரது கதாபாத்திர நகர்வை பார்க்கும் போது பா.ரஞ்சித்தின் பயோகிராபி ஃபீல் வருகிறது. இனியனாக வரும் காளிதாஸ் தற்கால இளைஞனின் பிரதிபலிப்பு. இனியனனின் குழப்ப மனநிலையையும், குற்ற உணர்வையும் திரையில் காளிதாஸ் வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்திரத்திற்கு அவர் செய்திருக்கும் நியாயம். 




அர்ஜூனாக வரும் கலையரசனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அவர் கேட்கும் பல கேள்விகள், நீண்ட காலமாக குறிப்பிட்ட பிரிவினரை பலர் கேட்க வேண்டும் என நினைத்த கேள்விகள். அடக்கி அடக்கி பார்த்து ஒருகட்டத்தில் பொங்கி எழும் கலையரசன் தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறார். இவர்களுடன் வரும் சேகர், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. 




பா.ரஞ்சித்தின் கேரியரில் நிச்சயம் இது வித்தியாசமான முயற்சி. முந்தைய படங்களில் குறியீடுகளாகவும், வசனங்களாலும் தலித் அரசியலை பேசிய ரஞ்சித், இந்தப்படத்தில் அதனை மிகவும் ஓப்பனாக அடித்து பேசியிருக்கிறார். தைரியத்திற்கு பாராட்டுகள். காதல் பற்றிய சமூகத்தின் வெவ்வேறு விதமான பார்வை கொண்ட நபர்களை வைத்து காதலை விவாதித்திருப்பது, கலையரசனின் கேள்விகளுக்கு வந்து விழும் பதில்கள், சாதி எனும் பின்னலில் சமூகம் படும் பட்டுக்கொண்டிருக்கும் பாடு என பல இடங்களில் பா.ரஞ்சித்தின் முத்திரை.




 


பல இடங்களில் கதாபாத்திரங்களுள் நடக்கும் விவாதங்கள், டிஸ்கஸன்ஸ் மிகவும் முக்கியம் அமைச்சரே என்பதை ஆடியன்ஸூக்கு உணர்த்தும். ஆனால் அவற்றை பல முழுக்க நிரப்பி இருப்பதுதான் படத்தின் பலவீனம். மற்றொரு பலவீனம் தியேட்டர் ப்ளே சம்பந்தமான காட்சிகள். அந்தக்காட்சிகளும், அதில் இடம்பெறும் விவாதங்களும் ஆவணப்படம் பார்ப்பதொரு ஃபீலை கொடுக்கிறது.. இதுபோன்ற காட்சிகளில் ஆடியன்ஸ் படத்தை விட்டு விலகுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இறுதியில் ஷபீர் கதாபாத்திரம் நடத்தும் ட்ராமா தனித்து நிற்கிறது. படத்தின் ஆர்ட் வொர்க் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. ஆரம்பக் காட்சியில் வரும் அறை தொடங்கி, தியேட்டர் ப்ளே நடக்கும் செட், புத்தர் பெயிண்ட் என பல இடங்களில் ஆர்ட் டைரக்டரின் ஜெயரகுவின் முத்திரை. தென்மாவின் இசை இன்னும் கொஞ்சம் கதைக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம்.