Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. 3 தடவ திரும்பி பார்க்கலாமா? போத்திகிட்டு தூங்கலாமா? - வாவ் ரிவ்யூ உங்களுக்காக...!

Naai Sekar Returns Review in Tamil: கிட்டத்தட்ட 5 வருட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் திரைப்படம்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். 

கிட்டத்தட்ட 5 வருட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் திரைப்படம்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.   ‘தலைநகரம்’ ‘ மருதமலை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சுராஜ் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

கதையின் கரு: 

வருடக்கணக்கில் குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதி ஒன்று குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்கின்றனர். அந்த சமயம் அங்கு ஒரு சித்தர் வர, அவரின் வயிற்றுப்பசியை அந்த தம்பதி ஆற்றுகிறது. இதனால் மனம் குளிர்ந்து போன அந்த சித்தர், அந்த தம்பதிக்கு நாய் ஒன்றை கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம், அவர்களுக்கு ஒரு பக்கம் குழந்தையாக நாய்சேகர் (வடிவேலு) பிறக்க, இன்னொரு பக்கம் செல்வம், புகழ் எல்லாம் வந்து கொட்டுகிறது. 


இதனிடையே அந்த வீட்டில் வேலைக்காரனாக சேரும் ராவ் ரமேஷ் அந்த நாயை பற்றி தெரிந்து கொண்டு, அதனை திருடிக்கொண்டு சென்று விடுகிறார். அதனால் அவர் கோடிஸ்வரனாகி விட, நாய்சேகரின் குடும்பம் வறுமையின் அதளபாதளத்திற்கு சென்று விடுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்த நாயை மீண்டும் கைப்பற்ற நாய்சேகர் தனது குழுவை அழைத்துக்கொண்டு செல்கிறார். இறுதியில் அந்த நாயை அவர்  மீட்டாரா? இல்லையா என்பதே மீதிக்கதை. 

வடிவேலு கடந்த 5 வருடங்களாக திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரது மீம்களும், அவர் பேசிய வசனங்களும் சமூகவலைதளங்களில் அவரது இருப்பை நியாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவரது இழந்த மார்க்கெட்டை, தயாரிப்பாளர்கள் மத்தியில் தூக்கி நிறுத்தியது அவை என்றே சொல்லலாம். இந்த நிலையில்தான்  ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் மூலமாக அவர் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருந்தது. இதுமட்டுமல்லாமல் பங்கேற்ற நேர்காணல்களிலும் படம் அப்படி இருக்கும், இப்படி இருக்குமென எதிர்பார்ப்பை கிளப்ப, உச்சக்கட்ட எதிர்பார்ப்போடே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர். 

ஆனால் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்றால், பூர்த்தி செய்யவில்லை என்பதே அதற்கான பதில். படம் ஆரம்பித்து, முதல் பாதி முடியும் வரையிலான காமெடிகள் எவையும் ஒர்க் அவுட் ஆகவில்லை. வெறுமெனே காட்சிகள் நகர்ந்து செல்கின்றன. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், வடிவேலுவின் கம்பேக் என்ற பெயரில் முந்தைய படங்களில் அவர் பேசி பிரபலமான வசனங்களை அந்தக்காட்சிகளுக்குள்ளே நுழைத்திருக்கிறார்கள்.  அவை ஒரு இடத்தில் கூட கனகச்சிதமாக பொருந்த வில்லை. 

வடிவேலு நடிப்பில் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், பழைய படங்களில் வரும் அதே டெம்ப்ளேட் பாணியிலேயே அவர் நடித்திருந்தது.. நம்மை புதிதாக ஏதும் இல்லையா? என்ற கேள்வியை கேட்க வைக்கிறது. வடிவேலுவை தாண்டி படத்தில் பல காமெடியன்கள் இருந்தாலும், நம் மனதில் நிற்பது என்னவோ.. ஆனந்த் ராஜூம், கிங்ஸ்லியும்தான். கிங்ஸ்லியும் நடிப்பிலும் பெரிதான எந்த மாற்றமும் இல்லை. பிரசாந்தின் நடிப்பு சிரிக்க  வைத்தது. 

இராண்டாம் பாதி நாயை எப்படி மீட்கிறார்கள் என்ற ப்ளாட்டில் செல்வதால் படம் கொஞ்சம் என்கேஜ் ஆகிறது. குறிப்பாக இராண்டாம் பாதியில் ஆனந்தராஜ் இடம் பெறும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. பிக்பாஸ் ஷிவானி எல்லா படங்களில் வருவது போல கிளாமர் என்ற வெற்று ஊறுகாய்க்கே இதிலும் பயன்பட்டு இருக்கிறார்.

சுராஜ் இயக்கத்தில் வெளியான  ‘தலைநகரம்’  ‘மருதமலை’ உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடிகள் முத்திரை பதித்தவை. அப்படியிருக்கையில் அவரும்,வடிவேலும் இணையும் படம் எப்படி அமைய வேண்டும். முதல் காட்சியே முத்தின கத்திரிக்கையாய் கொடுத்திருந்தார் சுராஜ். சில காட்சிகளை தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகளில் சுவாரசியம் என்பதே இல்லை.

கதாபாத்திரங்களுக்கான காமெடி முக்கியத்துவத்தையும் அவர் சரியாக கொடுக்க வில்லை. சந்தோஷ் நாரயணனின் இசை ஓகே என்றாலும், அவரின் பழைய படங்களில் இருந்த முத்திரை இதில் இல்லாதது ஏமாற்றம். வடிவேலு மிகப்பெரிய காமெடி ஜாம்பாவன் என்றாலும், அவர் நின்று விளையாடுவதற்கும் சரியான களம் வேண்டும். அந்த சரியான களத்தை சுராஜ் அமைத்து கொடுக்க வில்லை என்பதே இங்கே துருத்தி நிற்கும் உண்மை. சுயபரிசோதனை செய்யுங்கள் வடிவேலு. 

 

 

 

 

 

 

 

 

Sponsored Links by Taboola