சேனி லைவ்வில் வெளியான விக்டிம் படத்தின் மூன்றாவது எபிசோடு மிர்ரேஜ். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் ப்ரியா பவானி சங்கருக்கு, ஒரு விடுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மிரட்டும் இரவில், அதை விட மிரட்டும் படியாக இருக்கும் அந்த விடுதிக்கு செல்லும் ப்ரியா பவானி சங்கர், அங்கு ஒரே ஆளாக விடுதியை நிர்வகிக்கும் நட்டியை பார்த்ததும் பயம் கொள்கிறார்.
6 மாதம் உபயோகித்தில் இல்லாமல் இருந்த அந்த விடுதியில் தனி ஆளாக தங்கும் ப்ரியா, அன்றிரவு விடுதி மேலாளர் நட்டியின் செயல்களால் மோசமான சூழலை சந்திக்கிறார். தற்கொலை செய்ததாக கூறப்படும் மனைவி, குழந்தைகளுடன் இரவில் உணவு உண்ணும் நட்டி, தன்னையும் அவர்களிடம் அடையாளப்படுத்த முயற்சிப்பதும், பின்னர் தன்னை கொலை செய்ய வருவதும், அதன் பின், அவரே கழுத்து அறித்துக் கொள்ள, அரண்டு போய் ப்ரியா அலறுவதுமாய் ஒரு இரவில், ஓராயிரம் த்ரில்லர்.
என்ன ஆனார் ப்ரியா பவானி சங்கர்? நட்டியின் செயல்கள் உண்மையா? அமானுஸ்யமா? சைக்கோ தனமா? த்ரில்லரா? என பல கேள்விகளோடு பயணித்து, இறுதியில் பயங்கரமான ட்விஸ்ட் வைத்து முடித்துள்ளார்கள். நினைத்தபடி இல்லாமல், புது மாதிரியான சஸ்பென்ஸ்.
ப்ரியா பவானி சங்கர், முதன்முறையாக நன்கு நடித்திருக்கிறார். அல்லது, நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்று கூறலாம். அவ்வளவு பெரிய விடுதியை நிர்வகிக்கும் நட்டி, லுங்கியும், பட்டன் இல்லாத சட்டையுமாய் இருப்பது தான் கொஞ்சம் நெருடல். மற்றபடி அவரது கதாபாத்திரம், ரொம்ப கச்சிதமாக உள்ளது.
இரவில், இல்லாத நபர்களுடன் விருந்து உண்ணும் காட்சி, பார்ப்பகவே கொஞ்சம் பயங்கரம் தான். அவர்களோடு ப்ரியா அறிமுகம் ஆகும் காட்சி, நடுக்கத்திற்கு நடுவே கொஞ்சம் கலகலப்பு. எதை எடுக்க நினைத்தார்களோ, அதை எடுத்து முடித்திருக்கிறார்கள். நல்ல திட்டமிடல். அந்தாலஜியில் இப்படியும் கூட த்ரில்லர் படம் எடுக்கலாம் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம்.
தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி அதில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள் ப்ரியா பவானி சங்கரும், நடராஜனும். விக்டிம் வெப்சீரிஸில் மூன்றாவது எபிசோடாக, அடுத்த பக்கத்தை புறப்பட்ட, மிகவும் உதவி செய்திருக்கிறது மிர்ரேஜ்.