சோனி லைவ்வில் வெளியாகியுள்ள விக்டிம் அந்தாலஜி படத்தின் இரண்டாம் பாகம் ‛கொட்டை பாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்’ என்கிற கதை. இயக்குனர் சிம்பு தேவன். கொஞ்சம் கூட தனது ஃபார்மட் மாறாமல், அப்படியே தொடங்குகிறது படம். பத்திரிக்கையாளராக தம்பி ராமையா. 


கொரோனா கால ஆட்குறைப்பு பட்டியலில் இருக்கும் பத்திரிக்கையாளராக வீட்டில் இருந்து புலம்புகிறார். ஒவ்வொரு நூற்றாண்டிலும் வரும் மொட்டை மாடி சித்தரை பேட்டி எடுத்தால், வேலையை தக்க வைக்கும் வாய்ப்பு இருக்கும் என எடிட்டர் கூற, அவரை எப்படி வரவழைப்பது என்கிற சிந்தனையில் இறங்குகிறார் தம்பிராமையா. 


அவர் நினைத்தது அப்படியே திட்டமிட்டபடி நடக்கிறது. மொட்டை மாடி சித்தரை எப்படி வரவழைப்பது என்பதற்கான அத்தனை குறிப்புகளும், அடுத்தடுத்து அவருக்கு கிடைக்கிறது. இறுதியில் கொட்டை பாக்கு வத்தலை காய்ச்சியதும், மொட்டை மாடியின் தோன்றுகிறார் சித்தர். சித்தராக நாசர். ‛24 மணி நேரம் , உன்னுடன் இருப்பேன், நினைத்ததை கேட்டுக் கொள்’ என்று கூறும் அவர், சில நிபந்தனைகளையும் விதிக்கிறார். 






அந்த நிபந்தனைகளை கடந்து, மொட்டை மாடி சித்தரை பேட்டி எடுத்தாரா தம்பி ராமையா, அதன் பின் நடந்தது என்ன? வேலை கிடைத்ததா, சித்தரின் விதிகளில் வென்றாரா என்பது தான் கதை. வழக்கமான சிம்பு தேவனின் படமாகத் தான் இருக்கும் என நினைத்திருந்த வேளையில், கடைசியில் வரும் பல க்ளைமாக்ஸ் காட்சிகள், படத்தை ரொம்ப சுவாரஸ்யமாக்குகிறது. ராமையாவை ஏமாற்ற அவரது அலுவலக பணியாளர் போட்ட நாடகமும், எதற்காக அந்த திட்டத்தை போட்டாரோ, அந்த திட்டம் அப்படியே ரிவர்ஸ் ஆகி, கெடுதல் நினைத்தவனை விட, மற்றவர்களுக்கு அது பயனாக மாறும் ட்விஸ்ட், நல்ல சிந்தனை.


சித்தர் வந்துவிட்டார் என கதவு கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஆவலாக கதவை திறக்கும் போது, வெளியே ஸ்விகி டெலிவரி பாய் நிற்பதும், யாரிடம் தன்னிடம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கொரோனா நாடகம் போடும் போதும் தம்பி ராமையா நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். 






நாசருடன் அவர் அடிக்கும் லூட்டிகளும், ராமையாவை ஏமாற்ற நடக்கும் நாடகமும் ஒரே சிரிப்பு தான். சீரியஸ் விசயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல், சொல்லி முடித்திருக்கிறார் சிம்பு தேவன். அதிலும், தருமியும்-புலவரும் பேசும் வசனம் போல, தம்பி ராமையாவும்-நாசரும் பேசும் வசனம் சம கால அரசியல் நெடி.