Vettaiyan Review: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகர் ரஜினிகாந்துடன் தமிழில் முதன்முறையாக அமிதாப் பச்சன் இணைந்தும் பகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, அபிராமி, ரோகிணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவான வேட்டையன் படம் இன்று வெளியானது.


ரஜினி படம் என்பதை காட்டிலும், சமகால சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டிய ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பதே வேட்டையன் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


கதை என்ன?


நேர்மை தவறாத ஐ.பி.எஸ். அதிகாரி அதியன்.(ரஜினிகாந்த்) நேர்மையான இவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெயர் எடுத்தவர். மாணவர்களின் மேல் அக்கறை கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியையாக சரண்யா. (துஷாரா விஜயன்) அரசுப்பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் திடீரென பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அதற்கான விசாரணையின்போது போலீஸ் அதிகாரி ரஜினிகாந்த் மிகப்பெரிய தவறை செய்கிறார்.


ஆசிரியை சரண்யா ஏன் கொலை செய்யப்படுகிறார்? காவல்துறை தன்னுடைய விசாரணையில் செய்யும் தவறு என்ன? விசாரணை அதிகாரியாக வரும் அதியன் செய்த தவறு என்ன? அதை எவ்வாறு அவர் சரி செய்கிறார்? ஆசிரியை சரண்யா கொலையை விசாரிக்கும்போது தெரிய வரும் அதிர்ச்சிகள் என்னென்ன? என்பதை சமூக கருத்துடன் கமர்ஷியல் படமாக தந்துள்ளார் இயக்குநர் ஞானவேல்.


ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்


ஐ.பி.எஸ். அதிகாரி அதியனாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரது என்ட்ரி வழக்கமான அவரது படங்களுக்கான மாஸ் என்ட்ரியாக அமைகிறது. ரஜினி படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கும், அவரது ஸ்டைலுக்கும் பஞ்சம் இருக்காது. இதில் கதைக்கே மிகவும் முக்கியத்துவம் தந்திருப்பதால் தேவைப்பட்ட இடங்களில் தனது ஸ்டைலையும், குறி வைத்தா இரை விழனும் என்ற பஞ்ச் வசனத்தையும் பேசி அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். வயதுக்கு தகுந்தாற்போல தனது உடல்மொழியையும், அதே சமயம் ஒரு இளைஞரைப் போலவும் போலீஸ் அதிகாரியாக ரஜினி தனது நடிப்பால் அசத்தியுள்ளார்.


படத்தில் மற்றொரு ஆளுமை இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன். மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து என்கவுன்டர்களை எதிரக்கும் நேர்மையான நீதிபதியாக நடித்துள்ளார். ரஜினிக்கு அறிவுரை கூறி அவரை வழிநடத்தும் கதாபாத்திரத்தில் அவருக்கு நிகரான அல்லது அவரை விட அனுபவம் வாய்ந்தவர் நடித்திருந்தாலே மிகச்சரியாக இருந்திருக்கும் என்பதற்காகவே அமிதாப் பச்சன் அழைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான காட்சிகள் அனைத்தும் படத்தின் முக்கியமான காட்சிகளாக அமைந்திருப்பது படத்திற்கு பலம். நீதிமன்றத்தில் அமிதாப் பேசும் கல்வி பற்றிய கருத்துகள் அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.


துஷாரா - பகத்:


படத்தின் மையப்புள்ளியே ஆசிரியை சரண்யாவாக நடித்துள்ள துஷாரா விஜயன். சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை அவர் ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்கிறார். வேட்டையனிலும் ஒரு நல்ல பொறுப்புள்ள ஆசிரியையாக தனது நடிப்பால் அசத்தியுள்ளார். பொறுப்புள்ள அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.


இந்த கனமான கதைக்களத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் பேட்ரிக்காக பகத் ஃபாசில் அசத்தியுள்ளார். அவர் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதை மீண்டும் ஒரு  முறை நிரூபித்துள்ளார். திறமை வாய்ந்த தொழில்நுட்பம் அறிந்த திருடனாக வரும் அவரின் நடிப்பும், “மூளை இல்லாம போலீஸ் ஆகலாம். மூளை இருந்தாதான் திருடன் ஆக முடியும்” “நான் திருடன் என்னை முழுசா நம்பலாம்” போன்ற வசனங்கள் ரசிகர்களை திரையரங்கில் சிரிக்க வைக்கிறது. ரித்திகா சிங்கை தனது உதவியாளர் என்று அவர் கூறும் காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கும் விழுந்து விழுந்து சிரித்தது. திறமையுள்ள வெள்ளந்தியான கதாபாத்திரமாக வேட்டையனில் பகத் பாசில் தனி ராஜ்ஜியம் செய்துள்ளார். விக்ரமில் வரும் அமர் கதாபாத்திரம், மாமன்னனில் வரும் ரத்னவேல் கதாபாத்திரம் போல பேட்ரிக் கதாபாத்திரம் என்றும் நம் நினைவில் இருக்கும்.


மஞ்சுவாரியர், ரித்திகா சிங், அசல் கோளாறு:


மனசிலாயோ பாடலுடன் மாஸ் என்ட்ரி தரும் மஞ்சுவாரியருக்கு படத்தில் பெரியளவு காட்சிகள் இல்லை. ரஜினி மனைவியாக வந்தாலும் இவருக்கு பெரியளவு காட்சிகள் இல்லாதது குறையே. ஆனால், இவருக்கான ஒரு காட்சியில் ஒட்டுமொத்த தியேட்டரும் ஆர்ப்பரிக்கிறது. ரித்திகா சிங் படம் முழுக்க வருகிறார். அவருக்கு வசனங்கள் பெரியளவு இல்லாவிட்டாலும் பார்வையாலே நடித்துச் செல்கிறார். அவருக்கும், பகத் பாசிலுக்குமான காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.


அசல் கோளாறு படத்தின் துஷாரா விஜயனைப் போல மற்றொரு முக்கியமான கதாபாத்திரம். நல்ல நடிகராக இந்த படத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் அசல் கோளாறு. அவரும் அவருக்கு தாயாக நடித்துள்ள நடன இயக்குநர் வசந்தியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


ராணா ஒரு படித்த, படிப்பை வியாபாரம் ஆக்கும் கல்வியாளராக உலா வருகிறார். படத்தின் பிற்பாதியில் வந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் ரஜினி – ராணா மோதலாகவே நகர்கிறது. அவருக்கு சண்டை காட்சிகள் கிளைமேக்சில் மட்டும் இருந்தாலும் மற்றபடி உடல்மொழியாலே மிரட்டுகிறார். அபிராமி, கிஷோர், ரோகிணி, விஜே தர்ஷன் தத்தம் காட்சிகளை சிறப்பாக நடித்துள்ளனர்.


தொழில்நுட்பம் எப்படி?


லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத். தனது பின்னணி இசையால் படத்தின் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்க்கிறார். மனசிலாயோ பாடல் ரசிகர்களுக்கு ஆட்டம் போடும் எனர்ஜி டானிக்காக உள்ளது.  


மொத்தத்தில் படம் எப்படி?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த படமாக முழு கமர்ஷியலாக இல்லாமல் போலி என்கவுன்டர், சாமானிய மக்களுக்கு கல்வியை இன்னும் எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்லும் நுழைவுத் தேர்வுகள், அந்த நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி தருகிறோம் என்ற பெயரில் காசு பார்க்கும் வியாபாரிகளையும் தோலுரித்துக் காட்டும் வகையில் படத்தின் முதல் பாதியையும், இரண்டாம் பாதியையும் சரி பாதியாக பிரித்து இதை தன்னுடைய படமாகவே தந்துள்ளார் ஞானவேல். குறிப்பிட்ட சமூக மற்றும் குறிப்பிட்ட பகுதி மக்கள் மீது குத்தப்படும் முத்திரையையும் ஆங்காங்கே வசனங்களால் தோலுரிக்கிறார். மூன்று மணி நேரமான இந்த படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம். ஆனாலும், அந்த காட்சிகள் படத்தை பெரியளவு பாதிக்கவில்லை. 


மொத்தத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வந்துள்ள வேட்டையன் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களுக்கும் நல்ல வேட்டையாகவே அமைந்துள்ளது.