Vattam Movie Review in Tamil: ‛வாழ்க்கை ஒரு வட்டம்..’னு தளபதி ஒரு டயலாக் சொல்வாரு... உண்மையிலேயே அந்த வட்டத்திற்கு அர்த்தம், வட்டம் திரைப்படத்தில் தான் தெரிகிறது. ஒரு ரவுண்ட் போலாம் என்பார்களே, அதில் ரவுண்ட் என்பதை, வட்டம் என்கிறோம். அப்படி ஒரு வட்டம் தான், இது.
கொஞ்சம் குழப்புதுல? உண்மையை சொன்னா, ரொம்ப குழப்பும். சரி வாங்க, படத்துக்குள் போய் ஒரு வட்டம் போடுவோம். ஒரே சமயத்தில் இரு தரப்பு கடத்தல் திட்டம் போடுகிறது. ஒரு குரூப், தங்களை வேலையை விட்டு தூக்கிய ஐடி கம்பெனி மேலாளருக்கு பாடம் புகட்டி, பணம் கறக்க அவரது குழந்தையை தூக்குகிறது. இன்னொன்று சிபிராஜ், தனக்கு லிப்ட் கொடுத்த காரில் வரும் கோடீஸ்வரனை பணையம் வைத்து, பணம் கேட்கிறார். இப்படி இரு தரப்பு, கடத்தலில் பயணிக்கிறது வட்டம்.
துவக்கம் தான் அப்படி இருக்கிறது, கொஞ்ச நேரத்தில் குழந்தையை கடத்தும் கும்பல் எங்கு போகிறது என்று தெரியவில்லை. சிபியும், அவர் கடத்துபவரின் மனைவியுமான ஆண்ட்ரியாவும் பயணிக்கும் கதை தான் படம் முழுக்க வருகிறது. குழந்தையை கடத்தும் கும்பலை நாம் மறந்தே விடுகிறோம். க்ளைமாக்ஸில் அவர்கள் வரும் போது, ‛ஓ... இவங்க வேறு இருக்கிறார்களோ...’ என்று நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.
கடைசியில் என்னவென்று பார்த்தால், குழந்தையை கடத்த திட்டம் போடும் ஐடி கும்பல், ஹீரோ சிபிராஜூவுக்கு ராங்கால் போட, அவர்களின் திட்டத்தை முறியடிக்க, தான் ஒரு கடத்தல் நாடகம் போட்டு, குழந்தையை காப்பாற்றுவது தான் கதை தான்.
இதை சொல்லும் போது, எவ்வளவு தெளிவாக புரிகிறது? இப்படி சொல்லாமல், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற ஃபார்மட்டில் போய், கடைசியில், த்ரில்லரும் இல்லாமல், க்ரைமும் இல்லாமல், எல்லாம் சுபமே என்கிற மாதரி முடிப்பதெல்லாம், அவர்களுக்கே தெரிந்த ட்விஸ்ட்.
காதல், பெண், ஏமாற்றம், அதுக்கு ஒரு அறிவுரை என கடத்தலை விட கொடூரமாக போகிறது காட்சிகள். எவ்வளவு நேரம் தான் பேசுவார்கள் என்று இல்லை; போதாக்குறைக்கு அவ்வப்போது சிபியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை காட்டி கடுப்பேத்துகிறார்கள். ஒரு பிஎம்டபிள்யூ காரை வைத்துக் கொண்டு, படத்தை பிரம்மாண்டமாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்டம், காட்சிகளில் இருப்பதை விட, கதையில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு, வட்டமடிக்கும் போது கொஞ்சம் தலை சுற்றிவதை தவிர்க்க முடியாது. கொஞ்சமல்ல, ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார்கள். பெரிய ட்விஸ்ட் தருவதாக நினைத்து, க்ளைமாக்ஸில் அவர்களுக்கே உரிய ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கோவையை சுற்றிக்காட்டிய வரையில் கொஞ்சம் ஆறுதல். பீப் கொத்து புரோட்டா, வாத்து முட்டை ஆம்லெட் என, இரவு நேர சிற்றுண்டியை காட்டி, ஒரு இரவில் படத்தை முடித்ததாக அவர்கள் கூற நினைத்தால், ப்ளாஷ்பேக்கில் வரும் பகல்களை எந்த கணக்கில் சேர்ப்பது. உண்மையில், சிபிராஜ் ப்ளாஷ்பேக், தேவையில்லாத காதல் அறிவுரைகளை தவிர்த்திருந்தால், வட்டம் இன்னும் ஒரு ரவுண்ட் போயிருக்கும்.
பால சரவணன் மாதிரியான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, காமெடிக்கு அவரை பயன்படுத்தாமல், ஓரிரு காட்சிகளில் மட்டும் தலையை காட்ட வைத்தது ஏனோ? காமெடி பெரிய அளவில் எடுபடாமல் போனதும், காதல் தூக்கலாக இருந்ததும், படத்திற்கு பெரிய மைனஸ்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி ஓகே. கமலக்கண்ணனின் இயக்கம், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஹாட்ஸ்டார் ஓடிடி.,யில் நேரடியாக களமிறங்கியிருக்கும் வட்டம், தியேட்டரில் வராதவரை பிழைத்தது.