தலைமைச் செயலகம்


வெயில் , அங்காடித் தெரு, காவியத் தலைவன், அரவான் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ ஃபைவ் ஓடிடி தளத்திற்காக இயக்கியுள்ள இணையத்தொடர் ' தலைமைச் செயலகம்' . கிஷோர் , ஸ்ரியா ரெட்டி , பரத் , ஆதித்யா மேனன் , கனி குஸ்ருதி , நிரூப் நந்தகுமார் , சாரா பிளாக் , ஒய் ஜி மகேந்திரன் , சந்தான பாரதி , கவியா பாரதி , ஷாஜி உள்ளிட்ட பலர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான அரசியல் கதைக்களத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருக்கும் தலைமைச் செயலகம் தொடரின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


தலைமைச் செயலகம் விமர்சனம்


15 வருட காலமாக தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் அருணாச்சலம் (கிஷோர்) மீதான ஊழல் வழக்கின் இறுதி விசாரணையில் இருந்து தொடர்கிறது தலைமைச் செயலகம். அருணாச்சலத்தின் மகளான அமுதவள்ளி( ரம்யா நம்பீசன் ) மற்றும் மருமகனான நிர்மல் ( நிரூப் நந்தகுமார்) ஆகிய இருவரும்  இந்த  தீர்ப்பு அருணாச்சலத்திற்கு எதிராக வராமல் இருக்க போராடுகிறார்கள். ஒருவேளை தீர்ப்பு வந்து அருணாச்சலம் சிறைக்குச் சென்றுவிட்டால் அடுத்த முதல்வர் ஆகும் ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது.  தன்னைச் சுற்றி இருப்பவர்களில் அருணாச்சலம் நம்பும் ஒரே நபர் அவரது கட்சியில் கெளரவ ஆலோசகர் மற்றும் பத்திரிகையாளராக இருக்கும் கொற்றவை( ஸ்ரியா ரெட்டி) மட்டுமே .


அருணாச்சலம் மற்றும் கொற்றவையின் உறவு தொடர்பாக பல வதந்திகள் உலவுகின்றன. இதனால் கொற்றவையின் மகளான மாயா ( சாரா பிளாக்) தனது அம்மாவை வெறுக்கிறாள்.


ஒரு பக்கம் இந்த ஊழல் வழக்கிற்கான கதை தொடர மறுபக்கம் ஜார்கண்ட் மாநிலத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களை கொலை செய்த துர்கா என்கிற பெண்ணை தேடி அலைகிறார் சிபிஐ அதிகாரி நவாஸ் கான் ( ஆதித்யா மேனன்) அதே பெண்ணை சென்னையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் என்பவரும் ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தேடி வருகிறார். 


இந்த இரண்டு கதைகள் ஒரே புள்ளியில் சந்தித்துக்கொள்ளும் விதமாக பல்வேறு கதாபாத்திரங்களை இணைத்து சுவாரஸ்யமான ஒரு அரசியல் கதைக்களத்தை கையாண்டிருக்கிறார் வசந்தபாலன். ஊழல் வழக்கில் தீர்ப்பு முதலமைச்சருக்கு எதிராக வருகிறதா, அவருக்கு அடுத்து முதலமைச்சர் பதவியில் அமர்வதற்காக குடும்பத்தில் நிலவும் அரசியல் போட்டியை சமகால அரசியல் கருத்தாடல்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமாக இந்த தொடரை எடுத்திருக்கிறார்.


உண்மைக் கதையா, கற்பனை கதையா ?


பொதுவாக அரசியல் கதைக்களம் என்றால் அது எந்த கட்சிக்கு சார்பாக , எந்த கட்சிக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வி எழுவது வழக்கமே. ஊழலில் சிக்கிய முதல்வர் என்றால் நம்மால் உடனே ஒரு நிகழ்வை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. முதலமைச்சருக்கும்  பத்திரிகையாளர் கொற்றவைக்கும் இடையில்  சொல்லப்படாத அன்பைப் பார்க்கும் போது மற்றொரு நிகழ்வு. இப்படி பல்வேறு நிகழ்வுகளை நம்மால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தாலும் அவை ஏதோ ஒருபக்க சார்பிற்காக இல்லாமல் கதையை செறிவாக்க பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.


தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட கட்சிகளின் வருகைக்கு  பின்னான அரசியல் வரலாறு என்பது பல்வேறு திருப்பங்களும் சுவாரஸ்யமும் கொண்ட படமாக எடுக்கும் அளவிற்கு விரிவான களம். இந்த அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் மத்தியில் மிக ஆழமாக பதிந்து இருக்கும் பல்வேறு நிகழ்வுகளை சாரமாக எடுத்துக் கொண்டு திராவிட கட்சிகளின் மீது சமகாலத்தில் வைக்கப்படும் விமர்சனங்களின் மீது ஒரு உரையாடலை நடத்த முயல்கிறார் இயக்குநர் வசந்தபாலன். 


ஒருபக்கம் வடமாநிலங்களில் நிலவுடைமை அடிமை விலங்குகளை எதிர்க்க உருவான நக்ஸல்பாரி இயக்கங்களின் வளர்ச்சியும் மற்றுபக்கம் திராவிட கட்சிகளின் முக்கிய கூறுகளான மாநில சுயாட்சி, சமூக நீதி, சுயமரியாதை ஆகியவை தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு வித்திட்டதையும் நிறுவுகிறார் வசந்தபாலன். 


விமர்சனம்


நீதி என்பது என்ன ? ஒவ்வொரு தரப்பினரின் பார்வையில் அது எப்படி மாறுபடுகிறது போன்ற மிக ஆழமான கேள்விகளை முன்வைத்து தொடங்குகிறது தலைமை செயலகம். அதே நேரம் அது எடுத்துக்கொண்ட கதைக்களமும் மிக விரிவானது. ஒரு முறை தவறு செய்து ஊழல் வழக்கில் பிடிபடும் அருணாச்சலம் அந்த குற்றத்தால்தான் ஐம்பது ஆண்டுகளாக உருவாக்கிய கட்சி, அதனால் மக்களுக்கு செய்த சேவைகள் எல்லாமும் அழிந்துவிடக் கூடிய ஆபத்தை உணர்கிறார். 


ஆனால் அவர் உண்மையில் என்ன காரணத்திற்காக இந்த ஊழல் குற்றச்சாட்டு, எப்படி நடந்தது? என்பது கடைசி வரை நமக்கு தெரிவதில்லை. மாநில சுயாட்சி , அம்பேத்கரிய , பெரியாரிய , மார்க்ஸிய அரசியல் என்று வசனங்கள் இடம்பெற்றாலும் உள்ளே நடக்கும் கதையோடு இந்த வசனங்களுக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. பழங்குடி மக்கள் கொல்லப்படுவது , நக்ஸல் இயக்கம் என எல்லாம் பேசப்பட்டாலும் அவற்றை இன்னும் விரிவாக காட்சிப்படுத்தியிருக்கலாம். எபிசோடுகள் குறுகிய கால அளவிலேயே முடிந்துவிடுகிறது. பொலிட்டிக்கல் த்ரில்லர் என்று சொன்னாலும் பரந்து விரிந்த கதைக்களத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பு அம்சத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாடு , ஜார்கண்ட் , வங்காளம் என பல லொக்கேஷன்களுக்கு செல்லும் கதை என்பதால் அவற்றை வெறும் துணுக்குகளாக இல்லாமல் தெளிவாக சொல்வதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்.


நடிப்பைப் பொறுத்தவரை கிஷோர் மற்றும் ஸ்ரியா சரண் மொத்த தொடரை தங்கள் தோள்களில் தாங்குகிறார்கள். பல வருடங்கள் கழித்து திரையில் ஸ்ரியா சரண் தனக்கு ஏற்ற மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.  ரம்யா நம்பீசன் , பரத் , கவிதா பாரதி ஆகியவர்கள் தங்களது பங்கை சிறப்பாக செய்திருந்தாலும்  மேலோட்டமான கதாபாத்திர அமைப்பு அவர்களை தனித்துக் காட்டுவதில்லை. ஸ்ரியா சரணின் மகளாக நடித்துள்ள சாரா பிளாக் கோபக்கார எலைட் இளம் தலைமுறையினரை எதார்த்தமாக பிரதிபலிக்கிறார். ஆரம்பத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இந்த கதாபாத்திரத்தின் மெல் இருந்தாலும் அதையும் அந்தரத்தில் விட்டுவிடுகிறார் இயக்குநர்.


வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு மாறும் நிலத்திற்கேற்ப கேமராவை சிறப்பாக கையாண்டிருக்கிறது. ஆனால் படத்தொகுப்பு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் கதை சொல்வதில் ஏதாவது புதுமையை சேர்க்க விரும்பும் இயக்குநரின் மெனக்கெடலா அல்லது கதையின் வேகத்தோடு ஒன்றாத படத்தொகுப்பாளரின் குழப்பமா எதை சொல்வது என தெரியவில்லை. ஆனால் உடைந்த பீங்கான் தட்டைப் போல் காட்சிகள் அடிக்கடி சிதறலாக வெட்டப்பட்டு நம் பொறுமையை சோதித்து விடுகின்றன.ஜிப்ரானின் இசை தொடக்கம் முதல் முடிவு வரை பெரிய பலமாக துணைக்கு வருகிறது.


நிதானமான நாடகத்தன்மை ஓங்கிய காட்சிகளை மிகையில்லாமல் சொல்வதில் வசந்தபாலனின் படங்களில் ஒரு தனி இடம் இருக்கிறது. சந்தானபாரதியின் ஒரு காட்சியைத் தவிர்த்து மற்ற எந்த இடத்திலும் அந்த தன்மை தலைமை செயலகத்தில் கைகூடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


ஓடிடி தளங்கள் முன்வைக்கும் மிகப்பெரிய நிபந்தனையான விறுவிறுப்பு குறைவுதான் தலைமை செயலகத்தின் கதைக்கு கொஞ்சம் தேக்கத்தைக் கொடுத்திருக்கிறது. மற்றபடி A Must Watch.