தமிழ் ராக்கர்ஸ். இந்த பெயருக்கு அறிமுகமும் தேவையில்லை, ஆருடமும் தேவையில்லை. மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்த, பரிட்சதமான பெயர். இணையத்தில் இன்பம் தரும் தியேட்டர் என்றும் அதை கூறுவார்கள். சினிமா தயாரிப்பாளர்களுக்கு துண்டு போட்டு, ரிலீஸ் படங்களை அன்றோ அல்லது முதல்நாளோ ரிலீஸ் செய்து, தொழிலை அழிக்கும் அரக்கன். 


அந்த பெயரை வைத்து எடுக்கப்பட்டுள்ள முழுநீள வெப்சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ். தமிழ் சினிமாவில் பல நூறு கோடி கொட்டி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் படங்களை ரிலீசுக்கு முதல்நாளே ரிலீஸ் செய்கிறது தமிழ் ராக்கர்ஸ் என்கிற டீம். 






மதி என்கிற தயாரிப்பாளர் 300 கோடி ரூபாய் செலவில் எடுத்த படத்தை, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார்கள். அதற்கு முதல் நாளே அப்படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்து சவால் விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். கொதித்து போகும் தயாரிப்பாளர், சிறப்பு போலீஸ் டீம் உதவியை நாடுகிறார். அதற்காக பெரிய பணத்தை அவர்களுக்கு வழங்குகிறார்.


க்ரைம் பிராஞ்ச் என்கவுன்டர் போலீசாக இருக்கும் அருண் விஜய்யை, சிறப்பு அதிகாரியாக நியமித்து, விசாரணை வளையத்திற்குள் இறங்குகிறது போலீஸ். கடத்தப்பட்ட தன் மனைவி, இறந்து போன விரக்தியில் வாழ்ந்து வரும் அருண் விஜய், குறிப்பிட்ட 7 நாட்களுக்குள் தமிழ் ராக்கர்ஸ் டீமை பிடிக்க எடுக்கும் முயற்சியும், எதிர் தரப்பு படத்தை ரிலீஸ் செய்ய எடுக்கும் முயற்சியும் தான் கதை.


தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு எப்படி படங்கள் கிடைக்கிறது , எப்படி படங்களை அப்லோடு செய்கிறார்கள், அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்பது பற்றிய விரிவான ஆய்வு நடத்தி, அதன் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். பரபரப்பாக நகரும் வெப்சீரிஸில் அவ்வப்போது வரும் அருண் விஜய்யின் ப்ளாஷ்பேக் வேகத்தை குறைக்கிறது. 


எடுத்த எடுப்பில் என்கவுன்டர் போலீசாக வரும் அருண் விஜய், அடுத்த நொடியே குடிகார போலீசாக மாறுவதும், பின்னர் ‛இவர் தான் அதுக்கு சரியா வருவார்’ என கமிஷனர் , வீடு தேடி வந்து அருண் விஜய்யை அழைப்பதும், பழைய பன்னீர் செல்வம் கதைகளிலேயே பார்த்த காட்சிகள் தான். விசிடி, டிவிடி, ப்ளூரே அப்புறம் தமிழ் ராக்கர்ஸ் என பைரசி மாறி மாறி காலத்திற்கு ஏற்ப எப்படி முன்னறேியது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. 






அதே நேரத்தில் ட்விஸ்டுகளுக்காக காட்சிகளை அடுக்கி, அதன் பின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க நினைத்திருக்கும் இயக்குனர் அறிவழகனின் முயற்சி, வழக்கமான வெப் சீரிஸ் ஃபார்முலா தான். காட்சிகளில் இன்னும் தரம் கொடுக்க முயற்சித்திருக்கலாம். மொபைல் போனில் எடுத்ததைப் போல காட்சிகள் இருப்பது, ஒரு ஹைகுவாலிட்டி திரைப்படம் என்கிற பாதையில் இருந்து நல்ல திரைப்படத்தை பார்க்கலாம் என்கிற மாதிரியான மனநிலையை மட்டும் தருகிறது. பின்னணி இசை, மிக அருமை. 


போலீஸ் அதிகாரியாக அருண் விஜய், சைபர் க்ரைம் அதிகாரியாக வாணி போஜன், திடீரென வந்து திடீரென மரணிக்கும் மனைவியாக ஐஸ்வர்யா மேனன் என நிறைய கதாபாத்திரங்கள். படத்தின் தயாரிப்பாளராக வரும் மதி கதாபாத்திரமும், அதிரடி ஸ்டார் ஆதித்யா அப்பா கதாபாத்திரமும் மாஸ் காட்டுகின்றன. 






சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த வெப்சிரீஸை, தமிழில் புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற நடிகர்களின் படங்களை தயாரித்த பாரம்பரிய ஏவிஎம் நிறுவனம், முதன் முதலில் வெப்சீரிஸ் தயாரிப்பில் இறங்கியிருப்பதும், எவ்வாறெல்லாம் செலவை குறைக்க முடியும் என்கிற அவர்களது அனுபவத்தை படத்திலும் பார்க்க முடிகிறது. தமிழ் சினிமாவுக்கு தேவையான கதையை எடுத்து, தமிழ் சினிமாவாக வெளியிட்டுள்ளனர். சினிமா எடுக்க தயாரிப்பாளர் படும் சிரமம் உள்ளிட்டவற்றை படம் பார்க்கும் போது உணர முடிகிறது. நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பவராக இருந்தால், நிச்சயம் உங்கள் உள்மனதை இந்த படம் பல கேள்விகள் கேட்கலாம்!