விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் இன்று வெளியாகியுள்ள படம் ஷைத்தான்.
ஷைத்தான் படத்தின் கதைக்கரு
அமானுஷ்யங்களை மையமாக வைத்தே இப்படம் உருவாகியுள்ளது என்பது இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிந்திருக்கும். அப்பா, அம்மா, அக்கா, தம்பி என சந்தோஷமாக வாழும் குடும்பம் ரிலாக்ஸ் செய்ய பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு வழிப்போக்கனாக வரும் மாதவன், தாபா ஒன்றில் எதேச்சையாக அக்குடும்பத்துடன் பழகுகிறார். அவர் கொடுக்கும் உணவை உண்ட பின், அஜய் தேவ்கனின் மகள் ஜான்விக்கு ஏதோ மாற்றம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் அந்த ஒரு இரவில் நடக்கும் அமானுஷ்யங்களே முதல் பாதி. இரண்டாம் பாதியில் நல்லவை, தீயதை வென்றதா? இல்லை கேட்பாரற்று கிடந்ததா? என்ற கேள்விக்கு பதில் தெரியும். சைத்தான், 2023ல் குஜராத்தி மொழியில் வெளியான வஷ் எனும் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பு எப்படி?
பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் அஜய் தேவ்கனின் நடிப்பைப் பற்றி விவரிக்க தேவையில்லை. சைலண்டாக மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்திவிட்டார். ஜோதிகா எந்த உதவியும் செய்ய முடியாத பாவமான அம்மாவாக இருந்தாலும் சண்டைக் காட்சி ஒன்றில் பின்னி பெடல் எடுத்துவிட்டார். ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோரிடம் இருந்து இப்படிப்பட்ட நடிப்பு வெளிவருமா? என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மாதவனை பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி?? சாக்லேட் பாயாக, கமர்ஷியல் ஹீரோவாக, இன்னும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்த மேடி, சூனியக்காரரகவும் வித்தை காட்டிவிட்டார்.
படத்தை தியேட்டரில் காணலாமா?
ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் யாவும் முதல் பாதியில் முடிந்துவிட்டதால், இரண்டாம் பாதியில் என்ன நடக்கும் என்பது சற்று ஆர்வத்தைக் கிளப்பியது. இருப்பினும் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வந்ததால், கொஞ்சம் கடுப்பேற்றுகிறது. நாகினி போன்ற ஹிந்தி சீரியல்களில் வரும் பின்னணி இசை முதலில் நன்றாக இருந்தாலும், கேட்க கேட்க ஓவர் ட்ராமாவாக உள்ளது.
பொறுமையாக செல்லும் முதல்பாதியை இன்னும் கொஞ்சம் எடிட் செய்து இருக்கலாம். வில்லனாக வரும் மாதவனின் தீய எண்ணங்களின் பின்னணியைக் காண்பித்து இருக்கலாம். அமானுஷ்ய படங்கள் என்பது, பார்ப்பவர்களை “இதெல்லாம் உண்மையாக இருக்குமோ?” என நம்ப வைக்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் ஷைத்தான் கடந்து செல்லக்கூடிய ஒரு திகில் படமாகவே இருக்கும். சிறப்பான நடிகர்களின் நடிப்பு மட்டும் படத்தைத் தாங்குமா? கதையும் வலுவாக இருக்க வேண்டாமா?
அவ்வப்போது ஷாக் தரும் படங்களையும், திகில் படங்களையும், வித்தியாசமான கதைகளையும் காண நினைப்போர் இந்தப் படத்தை ஒரு முறை தியேட்டரில் காணலாம். பில்லி, சூனியம், அமானுஷ்யம் போன்றவற்றை நம்பாதவர்கள், விரும்பாதவர்களுக்கு இப்படம் வேடிக்கையாகவே இருக்கும்.