வில்லு... உன்னைக் கொடு என்னைத் தருவேன்... இந்த வரிசையில் சர்தாரை சேர்க்கலாமா என்றால், ஒரு பக்கம் சேர்க்கலாம் என்கிறது; இன்னொரு பக்கம் வேண்டாம் என்கிறது. அது ஏன் இரு பக்கம் அப்படி தோன்றுகிறது? ஒரு பக்கம் என்பது இடைவெளிக்கு முன், மற்றொரு பக்கம் இடைவெளிக்கு பின். இடைவெளிக்கு முன் நம் பொறுமை ரொம்பவே சோதிக்கப்படுகிறது. இடைவெளிக்குப் பின் நாற்காலியின் நுனியில் அமர்வதை தவிர்க்கவே முடியவில்லை.


தேசத்துரோகியின் மகன் என்கிற பட்டத்தை மறைக்க சோஷியல் மீடியா மூலம் மக்களின் நன்மதிப்பை பெற பெரும்பாடு படும் இன்ஸ்பெக்டராக கார்த்தி. தன் தந்தையின் தேச துரோக செயலால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள, மற்றொரு போலீஸ்காரரின் வளர்ப்பில் வளர்கிறார். மற்றொரு புறம், ‛ஒரு இந்தியா, ஒரு பைப்’ என்கிற திட்டத்தோடு, இந்திய முழுவதும், ஒரு பைப் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் வில்லன். அதை முறியடிக்க வரும் சமூக போராளி லைலா. போராளிகளை தேசத் துரோகிகளாக மாற்றும் அதிகார வர்கத்தின் நாடகம் தெரியாமல், தேசத் துரோகியாக கூறப்படும் லைலாவை பிடித்து, தன் மீதான கறையை போக்க நினைக்கிறார் கார்த்தி.






லைலா இறந்த பின், அவரது மகன் மூலமாக லைலா சமூக போராளி என தெரிகிறது. தன்னைப் போலவே லைலாவின் மகனும் பாதிக்கப்படுகிறான் என்பதை உணர்கிறார் கார்த்தி. இந்த நேரத்தில், குடிநீர் மூலம் இந்தியாவை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் வில்லனின் முயற்சியை தடுக்க, ஒரு மூத்த ஏஜண்ட் குரூப் செயல்படுகிறது. அதன் படி, 32 ஆண்டுகளாக பங்களாதேஷ் சிறையில் இருக்கும் சர்தாரை இந்தியா அழைக்கிறது, இருவர் கொண்ட அந்த ஏஜண்ட் குழு. 


சர்தார் வந்து விடக்கூடாது என துடிக்கிறார் வில்லன். ஒரு கட்டத்தில் சிறையில் இருக்கும் சர்தார் தான் இன்ஸ்பெக்டர் கார்த்தியின் அப்பா என்பதும், நாட்டு நன்மைக்காக தேசத் துரோக பட்டத்தை சுமந்து வாழ்வதும் தெரியவருகிறது. சிறையில் இருந்து தப்பி வரும் சர்தார் கார்த்தி, ஒரு இந்தியா... ஒரு பைப் திட்டத்தை முறியடித்தாரா, தன் குடும்பம் அழிய காரணமான வில்லனை என்ன செய்தார், ஏன் அவர் தேச துரோகி பட்டத்தை சுமந்தார் என்பது தான் கதை. அது மட்டும் தான் கதை. 


ஆனால், அந்த கதையை இடைவெளிக்கு பிறகு தான் தொடங்குகிறார்கள். முதல் பாதி, முழுக்க முழுக்க நீட்டி முழக்கி தேவையில்லாமல் நேரத்தை வீணடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் இருக்கும் வேகம், முதல் பாதியில் சுத்தமாக இல்லை. முதல்பாதியை சுருக்கி, இரண்டாம் பாதியை கொஞ்சம் முதல் பாதியிலிருந்து தொடங்கியிருந்தால், வேறு விதமாக இருந்திருக்கும். 


உன்னைக் கொடி என்னைத் தருவேன், வில்லு என தேசவிரோத கதைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதுவும் அதுமாதிரியான ஒரு கதை தான்; ஆனால், கொஞ்சம் அப்டேட் வெர்சன். ஆனால் இரண்டாம் பாதியில் வரும் திரைக்கதை பிரமாதம். அது முதல் பாதியில் ஏன் மிஸ் ஆனது என்பது இயக்குனருக்கே வெளிச்சம். லைலா வரும் கதாபாத்திரத்தில் இன்றிருக்கும் பல குணசித்திர நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம். இதற்கு எதற்கு லைலா என்பது தெரியவில்லை. அவர் வருவதும், போவதும் கூட தெரியவில்லை. 


கார்த்திக்கு இரட்டை வேடம். சர்தாராக மிரட்டுகிறார். தஞ்சாவூரிலிருந்து பொசுக்கு பொசுக்குனு பாகிஸ்தான் போவது, சீனா பார்டர் போவது என திருச்சிக்கும், திருநெல்வேலிக்கும் போவது போல, வீட்டுக்குத் தெரியாமல் போய் வருவது பயங்கரமான லாஜிக் கோட்டை. இந்தியா முழுவதும் செல்லும் ஒரு பைக் லைனில், க்ளைமாக்ஸில் 5 டாங்க் சோடியம் குளோரைடு கொட்டி திட்டத்தை அழிப்பதும், அந்த ரகமே. 


சுருக்கமாக, நறுக்குனு சொல்ல வேண்டியதை சுத்தி சுத்தி சுருளை இழுத்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாடல்கள் வேறு. இசையமைப்பாளருக்கு பணம் கொடுத்துவிட்டோம் என்பதற்காக 5 பாடல்களை வாங்கிக் கொண்டு, அதற்கு 30 நிமிடங்களை செலவழிக்கும் பழைய கால டெக்னிக்கை இன்னும் மாற்றாமல் இருப்பது கொடுமையோ கொடுமை. பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். 


இரும்புத் திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், தனது மூன்றாவது படமாக சர்தார் படத்தை இயக்கியுள்ளார். டெக்னிக்கலாக நிறைய விசயங்களை ஆய்வு செய்து படம் எடுத்திருக்கிறார்; அந்த ஆய்வை படத்தின் திரைக்கதையிலும் செய்திருக்கலாம். ராஷி கண்ணா, ரஷிஜா விஜயன் என இரு ஹீரோயின்கள். வருகிறார்கள், போகிறார்கள். ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் குடிநீர் மாஃபியாவாக மாறும் ஜூங்கி பாண்டேவின் மிரட்டல் நடிப்பு சிறப்பு. லைலாவின் மகனாக வரும் ‛வேல்ராஜ்’ புகழ் ரித்வித் நடிப்பு சிறப்பு. க்ளைமாக்ஸ் வரை சிறுவன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்கிறான். இறுதியில் கார்த்தி; இரு வேடங்களில் தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார். அவருக்கு இது பெரிய அனுபவமாக இருக்கும். 


ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் என காட்சிகளில் நம்மை அழைத்துச் செல்கிறது. தரமான சண்டைகள், நேர்த்தியான காட்சிகள் இருந்தும், கொஞ்சம் கத்திரியை இன்னும் இறுக்கிப் பிடித்திருந்தால், சர்தார், இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.