பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி, ஜிகர்தண்டா, டைரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் “ருத்ரன்”. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸூம், ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், பூர்ணிமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள ருத்ரன் படம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படம் ராகவா லாரன்ஸூக்கு கைக்கொடுத்ததா? இல்லையா? என்பது பற்றி காணலாம். 


கதையின் கரு


நாசர் - பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியினரின் ஒரே மகனான ராகவா லாரன்ஸ். அவர் வேலை தேடி சென்ற இடத்தில் பார்த்தவுடன் பிரியா பவானி ஷங்கர் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் உடன் இருப்பவர் கடனாக வாங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாக சோகத்தில் நாசர் இறக்கிறார். இதனால் வாங்கிய கடனைக் கட்ட பிரியா பவானி சங்கர் திருமணம் செய்த கையோடு லாரன்ஸ் அமெரிக்கா செல்கிறார். பின் சில ஆண்டுகளில் மகளுடன் பிரியாவும் அங்கு செல்கிறார். பின்னர் வெளிநாட்டில் இருந்து முதலில் தனியாக சென்னை திரும்பும் பிரியா காணாமல் போகிறார். தொடர்ந்து பூர்ணிமா மறைவுக்கு ஊர் திரும்பும் லாரன்ஸ் பிரியாவை காணாமல் தேடுகிறார். இதற்கு பின்னால் சரத்குமார் இருப்பது தெரிய வருகிறது.  துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் டான் சரத்குமாரின் தம்பிகள் ராகவா லாரன்ஸால் அடுத்தடுத்து கொலை செய்கிறார். இதற்கு சரத்குமார் பழி வாங்க நினைக்க.. இருவருக்குமிடையே என்ன பிரச்சினை, காணாமல் போன பிரியா பவானி ஷங்கர் கிடைத்தாரா என்பதை சென்டிமென்ட், காதல், காமெடி கலந்து பிளாஷ்பேக் காட்சிகளுடன் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். 


நடிப்பு எப்படி?


காஞ்சனா 3 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்  ராகவா லாரன்ஸ் படம் வெளியாகியுள்ளது.  ஸ்க்ரீனில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிகிறார்.   ஆனால் அவரின் வசன உச்சரிப்பு காஞ்சனா படத்தை நியாபகப் படுத்துகிறது. நடனத்தில் அவரை மிஞ்ச முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இயல்பாகவே லாரன்ஸ் காமெடி சென்டிமென்ட் ஆப்ஷன் ஆகிய களத்தில் புகுந்து விளையாடுவார் என்பதால் ஏற்படும் அவருக்கு எளிதாக கை கொடுக்கிறது. 


ஹீரோயின் ஆக வரும் பிரியா பவானி சங்கருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் கதை நகர்வதற்கு முக்கியமாக காரணமாக  இருக்கிறார்.  ராகவா லாரன்ஸுக்கு பொருத்தமான ஜோடியாகவும் திகழ்கிறார்.  


மேலும் டானாக வரும் சரத்குமாருக்கு முதல் பாதியில் அவ்வளவு தான் காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் தனக்கு கொடுக்கப்பட்ட வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களின் குடும்பத்தினரை கொன்று அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் கொடூர எண்ணம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். 


தியேட்டரில் படம் பார்க்கலாமா?


 புதுமையான களம், இரண்டாம் பாதி விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை கவர முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் கதிரேசன். ஆனால் அடுத்து நடக்கக்கூடிய காட்சி இதுதான் என எளிதாக யோசிக்கும் அளவுக்கு   பலவீனமான காட்சி அமைப்புகள்  இருந்தாலும் அதனை ஆக்ஷ்ன் காட்சிகள் மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் சரி செய்துள்ளார்கள்.


வில்லன்கள் கொடூரமாக கொல்லப்படுவது கதைப்படி நியாயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியத்தை சற்று குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ராகவா லாரன்ஸ் படம் என்றாலே 100% என்டெர்டைன்மென்ட் கேரண்டி என்பதால் இப்படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்.