Rocky Movie review in tamil: விடுமுறை நாட்களை முன்னிட்டு தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் வரிசையாக படங்கள் வெளியாகி இருக்கின்றன. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ ஓடிடியில் வெளியாவதாக இருந்து ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. டிரெய்லர் வரவேற்பை பெற்றதால், படத்தின்மீது இருந்தது. டிசம்பர் 23-ம் தேதி வெளியான நிலையில், ஒரு நாள் தாமதமாக நேற்று படத்தைப் பார்த்தோம்.
’தரமணி’ பட புகழ் வசந்த் ரவிதான் டைட்டில் கதாப்பாத்திரம் ராக்கி. சிறையில் இருந்து வெளியாகும் ராக்கி, அவரது அம்மா, தங்கையை தேடி செல்கிறார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் வெளியான ராக்கியை பழைய பகை பின் தொடர்கிறது. அது அவரின் குடும்பத்தினரையும் பாதிக்கிறது. ராக்கிக்கும், மணிமாறன் என்கிற கேங்ஸ்டருக்கும் இருக்கும் பகை, அதில் வெல்லப்போவது யார், அவர்கள் இழக்கப்போவது என்ன, காலம் என்ன செய்யும் என்பதுதான் ராக்கியின் கதை. மணிமாறனாக பாரதிராஜா நடித்திருக்கிறார்.
வழக்கமான தமிழ் சினிமாக்களை போல மூன்று அல்லது இரண்டரை மணி நேர படமாக இல்லாமல், கிட்டத்தட்ட 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ரன்-டைமில் ஓடுகிறது ராக்கி. படத்தின் நீளத்தில் தொடங்கி கதை சொல்லலிலும் ராக்கி வழக்கமான தமிழ் சினிமா பாணியை பின்பற்றாமல் தனித்து நிற்கிறது.
இயக்குனர் நினைத்ததை திரையில் கொண்டு வர மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் நாகூரன், இசையமைப்பாளர் டர்புகா சிவா என டெக்னிக்கல் டீமிற்கு கண்டிப்பாக அப்ளாஸ். நடிகர்கள் வசந்த் ரவி, பாரதிராஜா, ரோஹினி, ரவீனா, ரிஷிகாந்த், பேபி அனிஷா, குறிப்பாக ‘தன்ராஜ்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்ரஃப் அலி, மற்ற துணை நடிகர்கள் என அனைவரின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு ப்ளஸ்.
படம் ஸ்லோ, வசனங்கள் குறைவு, இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் என பார்த்தவர்கள் சிலருக்கு தோன்றலாம். ஆனால், பெரும்பாலானோர் ராக்கியை கண்டிப்பாக ரசித்து பார்க்கும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகி இருந்தால் படத்தின் மேஜிக்கை உணர்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. தேவையான இடத்தில் கருப்பு வெள்ளை காட்சிகள், சத்தமில்லா அமைதி, நச்சென்ற வசனங்கள் என காட்சிக்கு காட்சி செதுக்கப்பட்டிருக்கும் ராக்கி தியேட்டரில் வேற லெவல் அனுபவத்தை தரும். சிம்பிளான கதை. அதை தெளிவாக காட்சிப்படுத்திருக்கும் விதத்தில் படக்குழு வெற்றி பெற்றிருக்கிறது.
ரத்தம் தெறிக்க கொலைகள், ஈவு இரக்கமற்ற சண்டைகள், திகட்டாத பாசம், கோவம், விறுவிறுப்பான பழிவாங்கும் படலம் என காட்சிகள் வழியாகவே பார்ப்பவர்களை கட்டிப்போடும் ராக்கியை நிச்சயம் தியேட்டரில் பார்க்கலாம். ’பச்சையான’ வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது. எனவே,18 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி நினைவில் வைத்திருந்து படம் பார்க்க செல்லவும்!