தன் ஆசை தங்கை வீட்டிலிருந்து ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன் ஒரே மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார் நடிகர் ஆனந்த் ராஜ். ஆனால் ஜாதகத்தில் இவர் மகளுக்கு காதல் திருமணம் தான் நடக்கும், அதுவும் தந்தையான ஆனந்த் ராஜ் சம்மதத்துடன் தான் நடக்கும் என ஜோசியர் கூறுகிறார்.
மற்றொருபுறம் ஹீரோ கிருஷ்ணா இவர்களது ஊருக்கு புதிதாக வந்து, காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்ந்து காதலர்களுக்கு எதிராக ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார். இவற்றுக்கு மத்தியில் ஜோசியர் கூறியது பலித்ததா, கிருஷ்ணாவின் பின்னணி என்ன, ஆனந்த் ராஜ் தன் மகளைப் ‘பாதுகாத்து’ திருமணம் செய்து வைத்தாரா ஆகியவற்றுக்கான விடையை காமெடி (?!) கலந்து கொடுத்துள்ள படமே ‘ராயர் பரம்பரை’.
‘சின்ன தம்பி’ தொடங்கி நாம் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகிய ஒன்லைன், அதை காமெடி பாணியில் கொடுத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்க முயற்சித்திருக்கும் படக்குழுவின் தீவிர முயற்சி வெற்றி பெற்றதா?
நடிப்பு
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நாயகனாக நடிகர் கிருஷ்ணா. நன்றாக ஆடி, பாடி, காதலித்து, சண்டை போட்டு தமிழ் கமர்ஷியல் சினிமாவின் நாயகனுக்கான அத்தனை தகுதிகளிலும் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்கிறார். ஆனால் இவை அனைத்துக்கும் ஆதாரமான கதைத்தேர்வில் கவனம் செலுத்தினால் நன்மை!
அறிமுக நாயகி சரண்யா. கதை இவர் கதாபாத்திரத்தை சுற்றி நகர்ந்தாலும் நடிக்க வாய்ப்பிருந்தும் ம்ஹூம்... பொம்மை போல் வெறுமனே வந்து செல்கிறார். நாயகியின் அப்பாவாக, கோபம் - காமெடி கலந்து பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவீசி, லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அப்பாவாக ஆனந்த் ராஜ் ரசிக்க வைக்கிறார். படத்தில் நம்மைக் காப்பாற்றி, பெரும்பாலும் சிரிக்க வைத்து கரைசேர்ப்பதில் இவர் பங்கு முக்கியமானது.
ஜோசியராக வரும் மனோபாலா. தன் உடல்வாகாலும் ஜாலி பேச்சாலும் மறைந்தும் நம்மை சிரிக்க வைத்து அவரை மிஸ் பண்ண வைக்கிறார். இவர்கள் தவிர காதலிப்போரை பிரித்து வைக்கும் சங்கம் நடத்தும் மொட்டை ராஜேந்திரன், காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கடுப்பேற்றி கண்ணீர் வரவழைத்தும், சில இடங்களில் சிரிக்க வைத்தும் தன் வழக்கமான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிக்கிறார்.
கதை
மஜா உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்து ரசித்த ராயர்/ ட்ராயர் ஜோக்கை படம் முழுவதும் கொண்டு செல்வது சலிப்பு! படத்தில் செண்டிமெண்ட் இல்லாத குறையை கே.ஆர்.விஜயா தீர்த்துவைக்கிறார். கஸ்தூரி மிகை நடிப்பை வழங்கி அதைக் குலைக்கிறார்!
ஒன்லைனை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு அதற்குள் வர முதல் பாதி முழுவதும் முயன்று எங்கெங்கோ தறிகெட்டு திரைக்கதை பயணிக்கிறது. கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் இசைப் பள்ளி நடத்துவதாக சொல்லி படம் முழுவதும் வெறும் ‘சரிகம’ என்னும் நான்கு ஸ்வரங்களை மட்டுமே திரும்ப திரும்ப பாடவிடுவது... இதுக்கு ‘இல்லையா பா ஒரு எண்டு’ என கவலைப்பட வைக்கிறது.
ஹீரோவுக்காக அடித்துக் கொள்ளும் பெண்கள், இரட்டை அர்த்த வசனங்கள், வயதுக்கு மீறி பேசும் குழந்தைகள், 17 வயது பெண்ணை பாதுகாக்க ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் சொந்த செலவில் ஃபாரினுக்கும் அனுப்பி ஊர் மக்களுக்கு உதவும் ராயர் என பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று அயற்சியைத் தருகிறது கதை.
சோதித்த காமெடி!
முதல் பாதியைக் காட்டிலும் கொஞ்சம் சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்தும் இரண்டாம் பாதி ஓகே. ஆனால் காதலர்களுக்கு அட்வைஸ், பெற்றோரை வேதனைப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாட்டு என நாம் எந்த நூற்றாண்டு சினிமா பார்க்கிறோம் என வேதனைப் பட வைக்கிறார்கள்!
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் ‘அரபுநாடு ஈச்சமரம்’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மொத்தத்தில் ஆனந்த்பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என ரசிக்க வைக்கும் காமெடியன்களுடன் களமிறங்கி சிரிக்க வைக்காமல் நம்மை சோதித்திருக்கிறார்கள்!