கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, தமிழ் சினிமாவின் மூலம் நம்பிக்கையை விதைக்கும் விதமாக 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது `புத்தம் புது காலை’ ஆந்தாலஜி தொடர். திரையரங்கங்கள் மூடப்பட்டிருக்கும் போதும், பெரிய பட்ஜெட் எதுவும் இல்லாமலும் தமிழ் சினிமாவால் உயிர்ப்புடன் இயங்க முடியும் என்பதை அந்தத் தொடர் முன்வைத்தாலும், அதனால் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. ஊரடங்கு காலத்தின் மனிதர்களுக்குள் நிகழும் பிரச்னைகளை அந்தத் தொடர் பெரிதாக தொடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் அதன் இரண்டாம் பாகம், இந்த விமர்சனத்தை சற்றே களைய முயன்றிருக்கிறது, `புத்தம் புது காலை விடியாதா’. 


`புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜியின் முதல் குறும்படமாக தொடங்குகிறது இயக்குநர் பாலாஜி மோகனின் `முகக்கவச முத்தம்’. காவல்துறையின் கடைநிலைப் பணியாளர்கள் முருகன், குயிலி ஆகியோருக்கு இடையிலான காதல் கதையும், அவர்கள் நிறைவேற்றும் காதல் கதையும் இதன் கதைக்களம். கொரோனா காலத்தின் முன்களப் பணியாளர்களான காவல்துறையினரைப் பாராட்டுவதோடு, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற கோரும் விளம்பரப் படம் போன்ற அதன் உருவாக்கமும் இதனை ரசிக்க வைக்கின்றன. அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் தமிழக காவல்துறையினரின் மீது அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன; இ-பாஸ் நடைமுறை மக்களின் அத்தியாவசிய நடமாட்டத்திற்கும் தடையாக இருந்தது. இவற்றை அழகான கதையாக பாலாஜி மோகன் பாலிஷ் செய்திருப்பதைப் போன்ற உணர்வையும் இந்தப் படம் அளிக்கத் தவறவில்லை. 



மொத்த ஆந்தாலஜியிலும் மிகச் சிறந்த படமாக, ஹலிதா ஷமீம் இயக்கிய `லோனர்ஸ்’ படத்தைச் சுட்டிக்காட்ட முடியும். ஊரடங்கு காலத்தின் தனிமையைப் பற்றிய இந்தப் படத்தில் அழகான இரண்டு கதாபாத்திரங்களாக லிஜோ மோல் ஜோஸ், அர்ஜூன் தாஸ் ஆகியோர் வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் விழாக்கள் எப்படி மாறிவிட்டன, துக்கம் அனுசரிப்பதன் முக்கியத்துவம் குறைந்தது எனப் பல்வேறு விவகாரங்களை அழகான உரையாடல்களின் வழியாக சேர்த்திருப்பது ஹலிதா டச். ஊரடங்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்திற்கான மருந்து, நம்மைச் சுற்றி நம்மைப் போலவே தனியாக வாழும் மனிதர்கள் தாம் என்று பேசியிருக்கிறது `லோனர்ஸ்’. 


ஹலிதாவின் படம் உரையாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போது, அதற்கு நேரெதிராக மௌனத்தை வைத்து க்யூட்டான காதல் கதை ஒன்றைப் பேச முயன்றிருக்கிறார் மதுமிதா. ஊடலால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கும் நடுத்தர வயது தம்பதியான யஷோதா, முரளி ஆகியோருக்கு இடையில் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் இருமுவதும், போர்டில் எழுதுவதும், மிக்ஸியைத் திருகுவதும் என இருக்கும் சூழலும், யஷோதாவுக்குக் கோவிட் தொற்று ஏற்படுகிறது. வசனங்கள் வருமா என நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் இருவருக்கும் இடையிலான பரிதவிப்பு பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. இறுதியில் ஒரே ஒரு வசனம் என்றாலும், மௌனம் கலைக்கப்படும் அந்த இடம் இந்தப் படத்தையும் ஃபீல் குட் படமாக மாற்றுகிறது. 



இயக்குநர் சூர்யா கிருஷ்ணா இயக்கியுள்ள `தி மாஸ்க்’ திரைப்படம் தன்பாலீர்ப்பாளர்களைப் பற்றிய படைப்பாக உருவாகியுள்ளது. தன்பாலீர்ப்பாளரான அர்ஜூன் தன் உறவு குறித்து தன் வீட்டிற்குத் தெரியப்படுத்தாமல் இருப்பது அவனது இணைக்குப் பிடிக்காமல் போக, தன் பால்ய கால நண்பனைச் சந்திக்கிறார் அர்ஜூன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதைப் பேசுகிறது மீதிப்படம். இறுதிக்காட்சியை எழுதிவிட்டு, பிற காட்சிகளை எழுதிய போன்ற உணர்வை இதன் க்ளைமேக்ஸ் அளித்தாலும், அதன் ஃபீல் குட் தன்மை வலிந்து திணித்ததாக மாறியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனினும், இந்தக் கதைக்களத்தை முன்வைத்ததிற்கே படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்டலாம். 


ரிச்சார்ட் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள `நிழல் தரும் இதம்’ என்ற குறும்படம் இந்தத் தொடரிலேயே சற்றே வித்தியாசமான முயற்சியாக அமைந்திருந்தது. துக்கத்தில் இருந்து மீளுதல் என்ற கதைக்களமாக இருந்தாலும், படத்தின் முன்னணி கதாபாத்திரமான ஷோபி துக்கத்தில் இருக்கிறார் என்பதை அவரது கற்பனையில் தோன்றும் மாஸ்க் அணிந்த கதாபாத்திரங்கள் தோன்றும் போது மட்டுமே பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுவதால், இறுதிக் காட்சியில் அவர் மீளும் நொடிகள் நம்மிடம் பெரிய உணர்ச்சிகளை ஏற்படுத்தாமல் போகிறது. ஐஷ்வர்யா லக்ஷ்மி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.



முந்தைய பாகமான `புத்தம் புது காலை’ ஆந்தாலஜி தொடரோடு ஒப்பிடுகையில், தற்போதைய `புத்தம் புது காலை விடியாதா’ சிறப்பாக வெளிவந்திருந்தாலும், அதன் திரைமொழியும், கதைக்களமும் கொரோனா காலத்தின் சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து, பிரச்னைகளில் இருந்தும் வெகு தொலைவில் இயங்கும் கதைக்களத்தையும், உணர்வுகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் ஃபீல் குட் தன்மையை அடுத்தடுத்த பாகங்கள் கைவிடும் என எதிர்பார்க்கலாம். 


`புத்தம் புது காலை விடியாதா’ அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.