Pushpa Movie Review in Tamil: சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, சுனில், ஃபகத் ஃபாசில் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் ‘புஷ்பா’ திரையரங்குகளில் இன்று வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்தை தெலுங்கில் பார்க்காமல், தமிழில் பார்த்தோம்.


படத்தின் தொடக்கம் முதலே இது ஒரு டப்பிங் படம் என்ற ஃபீல் தராமல் இருந்தது ப்ளஸ். ஆந்திரா – தமிழ்நாடு பார்டர் சேசாச்சலம் மலைப்பகுதியை ஒட்டிய கதைக்களம் என்பதால் தமிழ் டப்பிங்கிற்கு ஏற்ற வசனங்களும், கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற சரியான வாய்ஸ் ஆர்டிஸ்களையும் தேர்ந்தெடுத்து தயாரித்திருப்பது சிறப்பு.


புஷ்பராஜாக அல்லு அர்ஜூன், செம்மரம் கடத்துபவர். ஆரம்பத்திலேயே புஷ்பாவை அறிமுகப்படுத்திவிடுவதால், அந்த கதாப்பாத்திரத்தை சுற்றியே கடைசி வரை கதை நகர்கிறது. கூலி ஆளாய் செம்மரம் கடத்த ஆரம்பிக்கும் புஷ்பா, சிண்டிகேட் எனப்படும் செம்மர கடத்தல் செயினின் ‘டான்’ ஆக எப்படி உயர்கிறார் என்பதே கதை.


ஆனால், செம்மர கடத்தலின் நிஜ சம்பவத்தை ஒட்டிய அரசியலோ, தொழிலார்கள் வாழ்வியல், மலைப்பகுதி மக்களின் வாழ்வியலையோ என எதையுமே படத்தில் கொண்டு வராமல், ’புஷ்பாவுக்கு அப்பா இல்லை’ என்பதுதான் கதையின் முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது. அதிகாரப்பூர்வ மனைவிக்கு பிறக்காத புஷ்பா, சிறு வயது முதல் திருமணமாகும் வரை ’நீ உரிமை கொண்டாடும் வாரிசு இல்லை’ என சொல்லி சொல்லி ஒதுக்கப்படுகின்றார்.



இந்த காரணத்திற்காகவே, தன்னை ஒரு அதிகார இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என வேட்கை கொண்டு மாஸ் கடத்தல்களை செய்கிறார் புஷ்பா. வழக்கமான ஒரு பெரிய கடத்தல் பிஸினஸ் செயினில் இருப்பது போன்ற சின்ன முதலாளி, பெரிய முதலாளி, போட்டி, பொறாமை என அனைத்தும் இதிலும் அடங்கும்.


அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, சுனில், அனுசுயா, மைம் கோபி, அஜய் கோஷ், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். குறிப்பாக, புஷ்பாவின் நண்பராக நடித்திருக்கும் புதுமுக நடிகருக்கு அப்ளாஸ்!


எங்கே ஃபகத் ஃபாசிலின் பெயர் இதில் இடம் பெறவில்லையே என நினைப்பது சரிதான். ஏனென்றால், டிரெய்லரில் எப்படி ஃபகத் கடைசியாக வருவாரோ, அதே மாதிரிதான் புஷ்பாவின் முதல் பாகத்திலும் வந்து போகிறார். போலீஸ் பன்வார் சிங் ஷெகாவத் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


புஷ்பாவும் – பன்வார் சிங்கும் சந்தித்து கொண்ட பின் வரும் காட்சிகளை வெட்டி இருக்கலாம். படம் முழுக்க ஆங்காங்கே மாஸ் சண்டை காட்சிகள், பாடல்கள், அம்மா செண்டிமெண்ட், காதல், சமந்தாவின் ஸ்பெஷல் பாடல் என கமெர்ஷியல் மசாலாவாக ஓடிய புஷ்பாவின் இரண்டாம் பாகத்தை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடைசி காட்சிகளை சேர்த்து முடித்திருப்பது போல இருந்தது.


யூகிக்கும்படியான கதைக்களம் இருந்தாலும் ஆங்காங்கே வரும் கமெர்ஷியல் மாஸ் காட்சிகள், மிரோஸ்லாவின் ஒளிப்பதிவு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆகியவற்றோடு, எடிட்டர்கள் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், ரூபன் படத்தை இன்னும் ட்ரிம் செய்திருக்கலாம். படத்தின் முதல் பாகமே நிறைய இடங்களில் யூகிக்கும்படி இருந்ததால், அடுத்த பாகத்தின் கதைக்களம் என்ன என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது. இதில் மிஸ் செய்ததை சரி செய்து இரண்டாம் பாகத்தில் ஓட்டினால், மொத்தமாக புஷ்பா ‘ஓக்கே’ படமாக இருக்கும்!