Pichaikkaran 2 Review: தன் சிறு வயதில் விபத்தில் பெற்றோரை இழந்து பிச்சை எடுத்து வாடும் விஜய் ஆண்டனி, சந்தர்ப்ப சூழலால் தன் தங்கையை இழந்து, ஜெயிலுக்குச் சென்று, திரும்பி தன் தங்கையைத் தேடிவருகிறார். மற்றொரு புறம் சந்தர்ப்ப சூழலால் நாட்டின் ஏழாவது பணக்காரனான கார்ப்பரேட் முதலாளியாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
பெரும் பில்லியனராக உருவெடுக்கும் விஜய் ஆண்டனி அதன் பின் எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? பிரிந்த தங்கையை விஜய் ஆண்டனி சந்தித்தாரா என்பது ’பிச்சைக்காரன் 2’ படத்தின் மீதிக்கதை. நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகக் கலைஞராகக் களமிறங்கியுள்ள விஜய் ஆண்டனி இயக்குநராக தன் முதல் படத்தில் ஜெயித்தாரா எனப் பார்க்கலாம்!
இயக்குநராக விஜய் ஆண்டனி எப்படி?
மூளை தொடர்பான சிறு அறுவை சிகிச்சையும் சிக்கலாக உள்ள மருத்துவக் காலக்கட்டத்தில், மூளை மாற்று அறுவை சிகிச்சை எனும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு சாத்தியமே இல்லாத மருத்துவத் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள்.
பில்லியனர், பிச்சைக்காரன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிகர் விஜய் ஆண்டனி நன்றாக பொருந்திப் போகிறார். தான் இயக்குநராக உருவெடுக்கும் முதல் படத்திலேயே இரட்டை வேடம் ஏற்றுள்ளார். தொலைந்த தங்கையைத் தேடி அலையும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் விஜய் ஆண்டனி க்ளாப்ஸையும் கண்ணீரையும் அள்ளி ஆடியன்ஸை ஈர்க்கிறார்.
படத்தின் ஹீரோயின் காவ்யா தாப்பருக்கு பெரிதாக வேலையில்லை. ஜான் விஜய், தேவ் கில், ஹரீஷ் பரேடி ஆகியோர் வில்லன்களாக முதல் பாதி கதையை ஆக்கிரமிக்கிறார்கள். மன்சூர் அலி கான், ராதா ரவி, ஒய்.ஜி.மஹேந்திரன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையானதை செய்துள்ளனர்.
நிறைகுறைகள்
பில்லியனராக மாறும் பிச்சைக்காரன் எனும் ஒன்லைன் சுவாரஸ்யமூட்டினாலும் அதைக் கதையாக்கிய விதம் சொதப்பல். அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் தமிழ் சினிமா வழக்கமாகப் பார்த்து சலித்தது தான் என்றாலும், அதை சரியாகக் கையாண்டு முதல் பாதியை இயக்குநர் விஜய் ஆண்டனி தொய்வில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.
ஆனால் முதல் பாதியிலிருந்து விலகி, இரண்டாம் பாதி திரைக்கதை, எங்கே பயணிப்பது எனத் தெரியாமல் குழம்பியபடி பயணிக்கிறது. பிச்சைக்காரர்கள், நாட்டின் அடித்தட்டு மக்கள், வறுமையில் வாடுபவர்கள் மீது அக்கறை கொண்டு விஜய் ஆண்டனி கதை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
பணக்காரன் Vs ஏழை கோட்பாடுகள் பற்றிய விளக்கம், அல்லல்படும் சக மனிதனுக்காக பரிவு கொள்ளக் கூறும் வசனங்கள் சிறப்பு. ஆண்டி பிகிலி எனும் ஐடியா சமூக வலைதளங்களில் நிச்சயம் வைரலாகும், ஆனால் படத்தில் இதனை இன்னும் சரிவரக் கையாண்டிருக்கலாம்.
தங்கை செண்டிமெண்ட், ஆள்மாறாட்டம், வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவது என திரைக்கதை அத்தனை பக்கங்களிலும் இரண்டாம் பாதியில் சிதறி ஓடுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பேசும் காட்சிகளுக்கு முன் யோகி பாபு பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்வது குறித்து காமெடி செய்வது உச்சக்கட்ட நகை முரண்!
பின்னணி இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கவனமீர்க்கிறார். இயக்குநராக விஜய் ஆண்டனி பாஸாகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் திண்டாடும் திரைக்கதையை செம்மைப்படுத்தி இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்!