வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‛பேட்டைக்காளி’. சிவகங்கை மாவட்டத்தை மையமாக வைத்து அங்குள்ள கிராமத்தில், மணியக்காரருக்கும், விவசாய கூலிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் தான் பேட்டைக்காளி. காலம் காலமாக அடங்கியிருக்கும் விவசாய கூலிகளில் ஒரு இளைஞன், ஜல்லிக்கட்டு போட்டியில் மணியக்காரர் காளையை அடக்கி அதிகார வர்கத்திற்கு சவால் விடுகிறான். அத்தோடு முதல் எபிசோட் முடிந்திருந்தது. நேற்று இரண்டாவது எபிசோடு வெளியான நிலையில் அதில் நடந்தவற்றை பார்க்கலாம்.
பேட்டைக்காளி முதல் எபிசோட் விமர்சனத்தை இந்த லிங் க்ளிக் செய்து படிக்கலாம்!
ஜல்லிக்கட்டு காளையை பிடித்த ஆத்திரத்தில் மணியக்காரரான வேல.ராமமூர்த்தி கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சம்மந்தப்பட்ட காளை உயிரை விடுகிறது. இதனால், மணியக்காரர் வீடே சோகத்தில் ஆழ்கிறது. காளையின் இறப்பு, மணியக்காரருக்கும் அவரது ஆட்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. காளையில் உயிருக்கு பதிலாக, அதை அடிக்கிய கலையரசன் உயிரை வாங்க வேண்டும் என முடிவு செய்கிறது மணியக்காரர் தரப்பு.
பஸ்ஸில் செல்லும் விவசாய கூலிகள் பகுதியைச் சேர்ந்தவர்களை வழிமறித்து தாக்குகிறார்கள். இதனால், விவசாய கூலிகள் தரப்பில் வந்து, மணியக்காரரிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஜல்லிக்கட்டு காளையின் கழுத்தில் இருந்து அபூர்வவிழ்த்து எடுத்துச் செல்லப்பட்ட மணியை திருப்பித்தர கேட்கிறார் மணியக்காரர். அதன் படி ஊர் கூடி, கலையரசனை மன்னிப்பு கேட்க சொல்கிறது. இதைத் தொடர்ந்து தனியாளாக மன்னிப்பு கேட்ட செல்லும் கலையரசனை மணியக்காரர் ஆட்கள் தாக்க முயற்சிக்க, பதிலுக்கு கலையரசன் அவர்களை தாக்கி விடுகிறார். இதனால் மணியக்காரர் கோபம் உச்சத்திற்கு செல்கிறது.
முடிக்க நினைத்த பிரச்னையை மீண்டும் துவக்கியதாக கலையரசனை கண்டிக்கிறார், அவரது தாய் மாமன் கிஷோர். தன் ஆட்கள் மீது கை வைத்த கலையரசன் இருக்க கூடாது என தன் மகனிடம் கூறுகிறார் ராமமூர்த்தி. அதன் படி கலையரசன் மாயமாகிறார். மேய்ச்சலுக்கு சென்றவர்கள், அவரின் சடலத்தை காண்கிறார்கள். கலையரசனின் கொலை, அந்த கிராமத்தை கொதிக்க வைக்கிறது. குறிப்பாக, கிஷோர் இச்சம்பவத்திற்கு காரணமான மணியக்காரரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இதற்கிடையில், காளை இறந்த களத்தில் வேறு காளைகள் நிற்க மறுக்கின்றன. இதனால் மணியக்காரர் வருத்தமடைகிறார். பூர்வ பாவங்கள் சூழ்ந்திருப்பதாகவும், காளையால் உயிருக்கு ஆபத்து என்றும் மணியக்காரருக்கு குறி சொல்கிறார் கோடாங்கி. இதற்கிடையில், காரில் வரும் மணியக்காரரை மறைந்திருந்து தாக்குகிறார் கிஷோர். அதில் படுகாயம் அடைந்த, கண்களின் காயத்துடன் மணியக்காரர் வீடு திரும்ப, இரண்டாவது எபிசோட் நிறைவு பெற்றிருக்கிறது.
முதல் எபிசோடில் தொடங்கிய விரோதம், இரண்டாவது எபிசோடில் குரோதமாக நிமிர்ந்து நிற்கிறது. சூழ்ச்சி, சதி என பல கோணங்களில் கதை நகர்வதை உணர முடிகிறது. அதற்கு மூன்றாவது எபிசோட் எடுத்த வாரம் வெளியாகும் போது, விடை கிடைக்கலாம்.