Saba Nayagan Review in Tamil: அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் “சபாநாயகன்”. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள நிலையில் சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்த நிலையில் படம் பற்றிய விமர்சனத்தை காணலாம்.  


படத்தின் கதை 


பள்ளி, கல்லூரி கால காதல் கதைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இடம் பெறும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு கடைசியில் வெளியாகியுள்ளது ‘சபா நாயகன்’. ஒருநாள் இரவில் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார் அசோக் செல்வன். செல்லும் வழியில் தன்னுடைய தோல்வியடைந்த ‘காதல்கள்’ கதையை போலீசாரிடம் சொல்லும் சூழல் உண்டாகிறது.


பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்த்திகா முரளிதரன் மீது உண்டாகும் காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி சௌத்ரி உடன் ஏற்படும் காதல், எம்பிஏ படிக்கும் போது மேகா ஆகாஷ் மீது உண்டாகும் காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடக்கும் காதல் போட்டியில் எந்த காதல் ஜெயித்தது? என்பதையும், காதலி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சபாநாயகனாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன். 


நடிப்பு எப்படி?


திருமணத்துக்கு பின் வெளியாகும் அசோக் செல்வனின் முதல் படம், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தால் ரசிகர்களை கவரலாம் என்ற அவரின் நம்பிக்கை இந்த படத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதனால் தான் பிறருக்கு காதல் இருப்பதை கண்டு தனக்கு ஒரு காதல் இல்லையே என ஏங்கும் பலரின் பிரதிபலிப்பாக ச.பா.அரவிந்த் கேரக்டரில் நடித்துள்ளார். எல்லாம் கூடி வரும் நேரத்தில் நடக்கும் பிரேக் அப்புகள், அதை கடந்து அடுத்த காதலை நோக்கி செல்வது என சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார். 


கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ் என முத்தான 3 ஹீரோயின்கள் ஒவ்வொரு பார்ட் கதையிலும் (பள்ளி/கல்லூரி/ மேற்படிப்பு) தங்களால் முடிந்த அளவுக்கு கேரக்டராகவே மாறியுள்ளார்கள். ஆனால் யாருக்குமே கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது மைனஸ். இவர்களை தவிர மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அக்‌ஷயா ஹரிஹரன், ராம் குமார் ஆகிய கேரக்டர்கள் காட்சிகளை ரசிக்கும்படி கதை நகர உதவியுள்ளார்கள்.


தியேட்டரில் படம் பார்க்கலாமா?


சபாநாயகன் படம் பார்க்கும் ரசிகர்களை முழுக்க முழுக்க ஹேப்பியான மோடில் வைத்திருக்க வேண்டும் என்கிற இயக்குநர் கார்த்திகேயனின் மெனக்கெடல் முக்கால்வாசி வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்பது நீளம் தான். பள்ளி காட்சிகள் தொடர்பான இடங்களில் படத்தொகுப்பாளர் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். அதனைத் தவிர்த்து சில மைனஸ்கள் இருந்தாலும் இப்படம் ரசிகர்களை கவரும்படியே வந்துள்ளது.


மேலும் இந்தா ஒரு காதல் கதை முடிந்துவிட்டது என நினைத்தால் சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதல் வருவது, பெண்கள் சற்று பணம் இருந்தால் தான் பார்ப்பார்கள் என்கிற ரீதியில் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் படம் சொல்லும் வரும் விஷயம் அழுத்தமே இல்லாமல் போகிறது. அதேசமயம் ஆங்காங்கே காமெடி காட்சிகள் வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு இடம் பெற்றுள்ளது.


பாடல்கள் படத்தின் கதையின் நீளத்துக்காகவே தேவைப்பட்டுள்ளதே தவிர  பெரிதாக கவரவில்லை. லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை, பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு ஆகியவை பல இடங்களில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. 


லாஜிக் பார்க்காமல், மைனஸ்களை பற்றி யோசிக்காமல் பொறுமையாக  பள்ளி, கல்லூரி கால ஜாலி காதலுக்காக “சபாநாயகன்” படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.