இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவில் உருவாகியுள்ளது “கப்ஜா” படம். இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்க, சிவராஜ்குமார், கிச்சா சுதீப் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். 


கதையின் கரு:


கப்ஜா கதையானது 1945 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கி, பின்னர் 1971 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா விமான படையில் பயிற்சி முடித்து விட்டு பணிக்கு செல்வதற்கு முன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வாழும் அமராபுரம் தொடங்கி பல இடங்களிலும் சுதந்திர போராட்டத்திற்கு பின் பகதூர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.


பகதூர் சாம்ராஜ்யத்துக்கு அமராபுரம் தொகுதியில் கலீல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறான். தேர்தலில் கலீல் மகனை களம் இறக்க திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக உபேந்திரா அண்ணனால் (போசனை கிருஷ்ணா முரளி) கலீல் மகன் கொல்லப்பகிறான். இதனால் ஆவேசமடையும் கலீல் பழிக்கு பழியாக உபேந்திரா அண்ணனை கொல்கிறான்.  தன் அண்ணன் மரணத்திற்கு பழி தீர்க்க களம் இறங்கும் சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா எப்படி கேங்ஸ்டர் கிங் ஆக மாறுகிறார் என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள். 


நடிப்பு எப்படி? 


படம் முழுக்க உபேந்திராவின் கீழ் தான் பயணிக்கிறது. தமிழ் டப்பிங்கில் என்ன கதை சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே சற்று சிரமமாக உள்ளது. அவ்வளவு கேரக்டர்களின் பெயர்கள் சொல்லப்படுகிறது. இதுதான் கதை என யூகித்து முடித்து கேஜிஎஃப், புஷ்பா தி ரைஸ் படங்களின் காட்சிகள் போல இருப்பது போல தோன்றினாலும் எடிட்டிங் காட்சிகள் மீதான சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.


ஆனால் படத்தில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதும், ஒவ்வொரு முறையும் தலை துண்டிக்கப்படுவதும் என ஓவர் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது. இதனை குறைத்து இருந்தால் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் கேங்ஸ்டர் படமாகவும் கப்ஜா அமைந்திருக்கும்.


ஸ்ரேயா சரணுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அந்த அழகு இன்னும் குறையாமல் ஸ்க்ரீனில் அழகாக காட்சியளிக்கிறார். இரண்டு காட்சிகள் வரும் கிச்சா சுதீப், இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வண்ணம் வரும் சிவராஜ்குமார் எண்ட்ரீ ஆகியவை ஒருவேளை 2 ஆம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. கன்னட திரையுலகில் கேஜிஎஃப், புஷ்பா பட ஸ்டைலில் படம் எடுத்தால் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என நினைக்க வைக்கிறது. 


மிரட்டலான மியூசிக்


கேஜிஎஃப் படத்திற்கு  இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள பிண்ணனி இசையும், எடிட்டிங்கும் கப்ஜா படத்திற்கு பாசிட்டிவ் ஆக அமைந்துள்ளது. ஆனால் ஓவர் வன்முறை காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகிறது. 


மொத்தத்தில் கப்ஜா படம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு கன்னட திரைப்படம்...!