Mission Chapter 1 Review: அருண் விஜய்யின் மிஷன் சக்ஸசா? பெயிலியரா? முழு திரைப்பட விமர்சனம்!

Mission Chapter 1 Review: நடிகர் அருண் விஜய் நடிப்பில் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1 படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

Continues below advertisement

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள படங்களில் அதிக புரோமோசன் இல்லாமல் வெளியாகியுள்ள படம் என்றால் அது நடிகர் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது. 

Continues below advertisement

படத்தின் கதை

மிஷன் படத்தின் கதையை பார்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி விடுகிறார்கள் . இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும் என்பது தான். இது இந்திய அரசு அறிந்து விட்டதை தெரிந்த தீவிரவாதிகள் உடனடியாக தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் செல்கின்றனர்.

லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார். அதே சமயம் அருண் விஜய் தனது குழந்தையின் மருத்துவ தேவைக்காக லண்டன் செல்கின்றார். அங்கு அவரின் பர்ஸை திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்கின்றது. அப்போது காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகின்றது.  அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டனரா இல்லையா? அருண் விஜய் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதா இல்லையா என்பது மீதி கதை. 

படம் எப்படி?

பொதுவாக சண்டைக்காட்சிகள் என்றாலே இறங்கி அடிக்கும் அருண் விஜய்யின் பசிக்கு தீனிபோடும் விதமாக ஸ்டண்ட் சில்வாவின் ஆக்‌ஷன் காட்சிகள் இபடத்தில் உள்ளது. ஆனால் அந்த ஆக்‌ஷனுக்கு எல்லாம் பொருந்திப் போகும் வில்லன் கதாப்பாத்திரத்தை இன்னும் பவர் ஃபுல்லாக காட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் முழுக்க வில்லன் கேமரா முன்பு நின்று கொண்டு பேசிக்கொண்டு இருப்பதால் இறுதியாக வரும் சண்டை காட்சி சற்று ஏமாற்றமாக உள்ளது. மேலும் மீண்டும் திரையில் நடிக்க தொடங்கியுள்ள எமி ஜாக்சன் இதில் பெரிய அளவு கேரக்டர் இல்லை என்றாலும் ஒரு காட்சியில் மட்டும் எமி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றார். அதேசமயம்  படத்தில் இருக்கும் மிக சிறப்பான காட்சி என்றால் அது மிளகாய்ப்பொடி காட்சிதான். தன்னுடைய படங்களில் சென்டிமென்ட் காட்சிகளில் புகுந்து விளையாடும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்த படத்திலும் அதனை கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார். அருண் விஜய்யின் குழந்தை பேசும் சென்டிமெண்ட் வசனங்கள் கொஞ்சம் உருகவைக்கின்றது. படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நிற்கிறார் அருண் விஜய். அவரின் முதல் பண்டிகை வெளியீடு படமான மிஷன் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். 

தியேட்டரில் படம் பார்க்கலாமா?

பொதுவாக ஒரு படத்தின் திரைக்கதை தரமாக இருக்கும்போது அதற்கு நியாயம் கற்பிக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்க்கும். ஆனால் மிஷன்  படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே காணப்படும் லாஜிக் மிஸ்டேக்குகள் சண்டைக்காட்சிகளும் பரபரப்பை சற்றே குறைத்துள்ளது . மேலும் படத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் நம்மை லண்டனுக்கே அழைத்துச் செல்கின்றன. பாராட்டுக்கள். படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னனி இசையில் கவனம் ஈர்க்கிறார் ஜி.வி. பிரகாஷ்.  ஒருபடத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பாக பணியாற்றும் அருண் விஜய்யும் சரி, இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சரி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தினால் பெயருக்கு ஏற்ற மாதிரி மிஷனின் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த பொங்கலுக்கு குடும்பத்தோடு காண மிஷன் சூப்பரான படம் தான்..!

Continues below advertisement