மிக குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டுமே வெளியிடும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான வெப்சீரிஸ், மீம் பாய்ஸ். மீம் இல்லாத நாட்களே இல்லை என்பதை விட, நொடிகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு, காற்றால், நீரால், நிலத்தால் இவ்வுலகம் நிறைந்து இருப்பதைப் போல, மீம்களாலும் நிரம்பியிருக்கிறது.
அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் இது. ஒரு பிரபல பல்கலைகழகத்தில் பயிலும் ஒரு மாணவி உள்ளிட்ட 4 மாணவர்கள், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு விதகட்டாயம் இருக்கிறது. அந்த கட்டாயத்தை முறியடிக்க, ஒரு சாதனை அவர்களுக்கு தேவைப்படுகிறது.
அப்போது மீம் திருவிழா அறிவிப்பு வெளியாகிறது. தேர்வாகும் சிறந்த மீமிற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பின் பேரில் தான், இந்த 4 பேரும் இணைகிறார்கள். அறிவிப்புக்கு பின் இணையும் இவர்கள், ஒரு மீம் பேஜ் உருவாக்கி, அதில் உருவாக்கும் மீம்களை அடுத்தடுத்த போட்டிக்கு அனுப்பி, இறுதிப் போட்டிக்கு சென்றார்களா? வென்றார்களா? என்பது தான், மீம் பாய்ஸ்.
மீம் என்பது பொதுவான விசயம். ஒரு பல்கலையில் நடக்கும் விசயத்தை , அல்லது அலட்சியத்தை மீமாக போட்டு, அதை எப்படி பல்கலைகழகத்தை தாண்டி பேச வைக்க முடியும் என்கிற அடிப்படை ஓட்டை , படத்தின் பெரிய மைனஸ். தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறது; அவை லட்சக்கணக்கான மீம்ஸ்களாக வருகிறது. அப்படியிருக்கும் போது, ஒரு பல்கலை கழகத்தின் டீன் பற்றிய மீம்ஸ், தமிழக அளவில் ஏன் கவனம் பெற வேண்டும்? என்கிற லாஜிக் இடிப்பதால், அந்த வெற்றி மீதான குறைபாட்டை மறைக்கவே முடியவில்லை.
அந்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டும் ரூ.6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. மொத்த பரிசே 10 லட்சம் ரூபாய் தான். ‛6 லட்சம் உனக்கு கிடைக்கும் வா...’ என அவரை அழைக்கும் போது, எஞ்சியிருக்கும் 4 லட்சம் தான், மற்ற மூன்று பேருக்கா? என்கிற கேள்வியும் எழுகிறது. இப்படி நிறைய லாஜிக் பிழைகள் சீரிஸ் முழுக்க நிரம்பியிருக்கிறது.
டீனாக குரு சோமசுந்தரம். வழக்கம் போல, எங்கெல்லாம் ஸ்கோர் செய்ய வேண்டுமோ, அங்கெல்லாம் ஸ்கோர் செய்கிறார். உதவி டீனாக படவா கோபி; அவரையும் சொல்ல வேண்டியதில்லை. நான்கு மாணவர்களாக எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் நம்ரிதா, ஜெயந்த், சித்தார்த். மீம் போட, அதை பப்ளிஷ் செய்ய இவர்கள் எடுக்கும் முயற்சியில் ஒரு பங்கை, படிப்பில் செலுத்தினால் இவர்கள் கோல்டு மெடல் வாங்கியிருக்கலாம். ஆனால், கதை மீம் பற்றியதாச்சே... மீம் பின்னாடியே அவர்கள் ஓடுகின்றனர்.
மீம்களும் பெரிதாக சொல்லும் கொள்ளும் அளவில் இல்லை. ஆனால், அதற்கு விழுந்து விழுந்து சிரிப்பது, மீமை விட மொக்கையாக இருக்கிறது. எபிசோடு எபிசோடாக காட்டும் அளவிற்க கன்டண்ட் இல்லை என்றால், இரண்டரை மணி நேர படமாக முடித்திருக்கலாம். நீட்டி முழக்க வேண்டும் என்பதற்காக எடுத்த மாதிரியே ஒவ்வொரு எபிசோடும் நகர்கிறது.
இன்னும் கூட சிறப்பாக எடுத்திருக்கலாம், எழுதியிருக்கலாம், நடித்திருக்கலாம் என்று பல விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால், அதை கடந்து, விறுவிறு, பரபர, திகில், திடுக் என்று தான் வெப்சீரிஸ் இருக்க வேண்டும் என்பதை மாற்றி, கொஞ்சம் கலகலவாகவும் யோசிக்கலாம் என்று சிந்தித்த வகையில் பாராட்டலாம். ட்விஸ்ட் என்கிற பெயரில், ஏதேதோ முயற்சிகளை எடுத்து, அவற்றிலும் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
ஆஹா... ஓஹோ... என்றெல்லாம் பாராட்டி விட முடியாது; ஓகே என்றும் ஓங்கி சொல்லிவிட முடியாது. சுமார் ரகத்தில் மீம் பாய்ஸ் பயணிக்கிறது. சிரிக்கும் இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், அதை மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருந்தால், லாஜிக்கை கடந்து மீம் பாய்ஸ் ரசிக்கும்படி இருந்திருக்கும்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே எடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. அதை கடந்து சொல்ல பெரியதாக ஒன்றும் இல்லை.