காதல் தி கோர் (Kadhal The Core)


இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காதல் தி கோர். ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் சகாரியா இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும்  காதல் தி கோர் படத்தின் விமர்சனத்தை காணலாம்.


சர்ச்சைக்குரிய கதையா ?



வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற மேத்யூ (மம்மூட்டி) தன்னுடைய மனைவி ஓமனா (ஜோதிகா) மகள் ஃபெமி மற்றும் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். தன்னுடைய ஊரில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு மேத்யூ நிற்க வைக்க முடிவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற்ற மேத்யூ இந்த தேர்தலில் நிற்கும் அதே நேரத்தில் அவரது மனைவி ஓமனா அவரிடம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்வது அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.


தன்னுடைய கணவன் தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர் என்பதை மறைத்து 20 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ஓமனா. தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக வைக்கப்பட்டவை என்று வாதாடுகிறார் மேத்யூ. பல எதிர்ப்புகளையும் கடந்து ஓமனா இந்த விவாகரத்தை பெறுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்? என்பதே காதல் தி கோர் படத்தின் கதை.


 விமர்சனம்



தன் பாலின ஈர்ப்புக் கொண்ட 80 சதவீதம் ஆண்கள், பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதாக ஒரு தகவல் படத்தில் இடம்பெறுவது இப்படியான ஒரு கதையை படமாக்கியதன் அவசியத்தை முழுக்க முழுக்க நியாயப்படுத்துகிறது. தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்களின் மேல் படிந்திருக்கும் சமூகத்தின் தவறான புரிதல் ஒருபக்கம். ஆனால் இந்தப் படம் சித்தரிப்பது இந்த நெருக்கடிகளால் பயந்து தன்னை மறைத்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கும் தன்னுடைய அடையாளத்தை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவர் செல்வதன் உளவியலை அதனை எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் எளிமையான ஒரு குடும்ப பின்னணியில் வைத்து பேசுகிறது.

தன்னுடைய கணவன் எல்லா விதங்களிலும் நல்ல குணம் உடையவனாக இருந்தும் அவனை குற்றவாளியாக ஓமனா நிறுத்துவது தனக்கான நீதியாக மட்டுமில்லாமல் தன்னுடைய கணவனுக்கான நீதியாகவும் கொண்டு சென்றிருப்பது இயக்குநரின் முதிர்ச்சியை காட்டுகிறது.


நடிப்பு எப்படி?



இப்படியான ஒரு கதையில் மம்மூட்டி போன்ற ஒரு ஸ்டார் நடிப்பதில் பார்வையாளர்களாகிய நமக்கு எந்த வித ஆச்சரியமும் ஏற்படுவதில்லை. அதற்கு ஒரு காரணம் மம்மூட்டியின் முந்தைய படங்களில் அவர் நடித்த மாறுபட்ட கதாபாத்திரங்கள். இரண்டாவது காரணம் ஒரு ஸ்டாரின் எந்த விதமான பாவனையையும் சுமந்து திரியாமல் ஒரு சாமானியனாக வெளிப்படும் அவரது நடிப்பு. ஜோதிகா தன்னுடைய நடிப்பை உணர்ச்சிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்து முழுமை சேர்த்திருக்கிறார். மிக நிதானமாக பெரிய திருப்பங்களற்று செல்லும் கதைக்கு இசை உயிரூட்டுவதாக அமைந்திருக்கிறது.

காதல் தி கோர் திரைப்படம் நிச்சயம் ஒரு துணிச்சலான முயற்சி.