Mahaan Movie Review in Tamil: சியான் விக்ரம் படம்... அவர் மகன் துருவ் விக்ரம் படம்... அதை கடந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படம் என நிறைய எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம் மகான். உண்மையில் இது யார் படம்?




சந்தேகமே வேண்டாம்.... கார்த்திக் சுப்பராஜ் படம் தான். பாபிசின்கா உள்ளிட்ட பலர் இருக்கும் போதே தெரிந்துவிட்டது, இது கார்த்திக் சுப்பராஜ் படம் என்று. 2016ல் தொடங்கி, 1964க்கு பயணிக்கிறது கதை. சாராய வியாபாரி மகன் , காந்தியவாதி மகன், அவர்களோடு இன்னொரு சிறுவன். இந்த 3 பேரும் சீட்டு விளையாடும் போது ஏற்படும் சண்டை தான் கரு. தீவிர காந்தியவாதியின் மகனான விக்ரம், பெயரிலும் மகானாக வளர்க்கப்படுகிறார்.


ஒரு மது ஆசைக்காக குடும்பம் பிரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின், 1964ல் பிரிந்த சிறுவர்கள் மூவரும் வெவ்வேறு சூழலில் இணைகிறார்கள். பிரிந்து சென்ற மகானின் மனைவியின் மகன், தன் தந்தை சாம்ராஜ்யத்தை அழிக்க இளைஞனாக வருகிறான். அது துருவ். மகன் அழித்தானா? தந்தை தப்பித்தானா? கூட்டாளிகள் என்ன ஆனார்கள்? இது தான் கதை!




படத்தோடு பயணித்ததில், அனைவருமே தேறியிருக்கிறார்கள். அவருக்கு இவர் அப்பாவா, இவருக்கு அவர் மகனா, இவருக்கு அவர் மனைவியா, அவருக்கு இவர் நண்பரா என வயது வித்தியாசத்தை ஒப்பிட முடியாத அளவிற்கு கதாபாத்திரங்கள் பொருந்தியிருக்கின்றன. குறிப்பாக முதியவராக பாஃபி சின்கா பளிச்சிடுகிறார். சிம்ரன்... இதற்கு முன்னும் வயதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இம்முறை வயதானால் இப்படி தான இருப்பார் என்பதை பார்க்க முடிகிறது . துல்லியமான மேக்கெப். 


விக்ரம்(Vikram) விளாசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இம்முறை அதை துருவ் அபகரித்து, விக்ரமை வேடிக்கை பார்க்க வைக்கிறார். விக்ரமிற்கு இது இதுவரை இல்லாத பாத்திரம். நூல் பிடித்த மாதிரி அதை பற்றிக் கொண்டு, அதில் வழக்கமான தன் பட்டத்தையும் பறக்கவிட்டுள்ளார். துருவ் வெடித்துக் கொண்டே இருக்கிறார்... இல்லையென்றால் நடித்துக் கொண்டே இருக்கிறார். பாதியில் வந்தாலும் பதிய வைக்கிறார். 




எதார்த்தங்களை எப்போதும் தூக்கி வருவதில் கெட்டிக்காரர் கார்த்திக் சுப்பராஜ். ஜகமே தந்திரத்தில் விட்டதை, மகானில் பிடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. ரொம்ப அழுத்தினால் பாசம் பொங்கியிருக்கும், இன்னும் சீறியிருந்தால் ஆக்ஷன் படமாயிருக்கும். கொஞ்சல் தூக்கலாயிருந்தால் கேங்ஸ்டர் படமாயிருக்கும். ஒரு சிட்டிகை சேர்ந்திருந்தால் அரசியல் படமாயிருக்கும். ஆனால், அதையெல்லாம் அளவோடு கொடுத்து, எதார்த்தமான கமர்ஷியல் படமாக்கிய வகையில் கார்த்திக் சுப்பராஜ் தன் வேலையை சிறப்பாக செய்துவிட்டார். காட்சிக்கு என்ன வேண்டுமோ... அதை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! பாடல்களில் ஈர்ப்பு இல்லை... பின்னணியில் உயிர்ப்பு உள்ளது. டூயட், காதல் காட்சிகளுக்கும் எல்லாம் வேலையில்லை என்றாலும், உதறிய கணவன் வரும் போது, வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மனைவி, மறுவார்த்தை பேசாமல் ஓடி வந்து கட்டி அணைக்கும் அந்த ஒரு காட்சி போதும், மொத்த ரீலில் விடுபட்டு போன காதலை காக்டெயிலுக்குள் கொண்டு வந்ததற்கு! 




விக்ரம் சரிந்து கொண்டே இருக்கிறாரே... என பார்த்துக் கொண்டிருக்கும் போது, ‛என் குட்டி நீ 10 அடி தாண்டினால், நான்...’ என்பதைப் போல, கடைசி நேரத்தில் டாப் கியர் எடுக்கும் விக்ரமின் நடிப்பு, விட்ட குறையை பூர்த்தி செய்கிறது. என்ன... எந்த பழக்கமும் இல்லாத மகான்... ஒரே இரவில் இல்லாத பழக்கம் இல்லை என்பதாக மாறுவது தான் கொஞ்சம் லாஜிக் பிரச்சனை. விக்ரம், துருவ், சிம்ரனை தவிர மற்ற அனைவரும் கார்த்திக் சுப்பராஜ் அன் கோ தான்! அவர்கள் வேலையை அவர்கள் திறன்பட செய்தார்கள். அடுத்த படத்திலும் அவர்கள் வருவார்கள். ஆனாலும், இந்த படத்தில் அவர்கள் வரும் போது, பேட்டை படம் ஓடுகிறதோ என்கிற சந்தேகமும் அவ்வப்போது வராமல் இல்லை. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கதையோடு ஓடிவருகிறது. எடிட்டிங் பணியும் சிறப்பு!


ஓடிடியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் படியான ஒரு படம்.  லாஜிக் கடந்து, ஏதோ ஒரு மேஜிக் இருக்கலாம் என்ற எண்ணத்தில் பார்க்கலாம். மகான் என்று நீங்கள் பார்த்தாலும்... நான் ‛மகான்’ அல்ல... என்கிறார் விக்ரம்!