மலையாள சினிமாக்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்தடுத்த தளங்களுக்கு பயணித்து நம்மை ஆச்சர்யப்படுத்த தவறுவதே இல்லை. அந்த வரிசையில் இன்னுமொரு முத்தாக வெளிவந்திருக்கும் படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’.
இந்தியப் பெண்கள் மீது அன்றாட வாழ்வில் வெகு சாதாரணமாக நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறையை நகைச்சுவையுடன் அனைத்து தரப்பினருக்கும் கலந்துகொடுத்து ஆணித்தரமாக பேச வேண்டியதைப் பேசியிருக்கிறது.
தர்ஷனா ராஜேந்திரன், ’மின்னல் முரளி’ இயக்குநர் பாசில் ஜோசஃப், அஜூ வர்கீஸ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விபின் தாஸ் இயக்கியுள்ளார்.
சிறுவயது முதல் தன் பெற்றோர் தன்னை செல்லமாக பார்த்து பார்த்து வளர்ப்பதாக நம்பும் ஜெயா, ஒரு கட்டத்தில் பெண் என்பதால் தன் மீது நிகழ்த்தப்படும் பாகுபாடுகளை உணரத் தொடங்குகிறார். அதன் பின் கல்லூரி, கணவன் என அனைத்திலும் பெற்றோரின் எண்ணம் திணிக்கப்படுவதோடு, திருமணத்துக்கு பிறகு, அன்பாக சமைத்துக் கொடுப்பதற்கெல்லாம் கணவனிடம் அடி வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
தனக்காக பரிதாபப்பட்டாலும் கணவன் அடிப்பதை சாதாரண நிகழ்வாகக் கையாளும் பெற்றோர், மாமியாருக்கு மத்தியில் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜெயா, அதனை ‘தன்’ பாணியில் எவ்வாறு எதிர்கொண்டு இந்தக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் என்பதை நகைச்சுவையுடன் அழுத்தமாக பதிவு செய்கிறது ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’.
இந்த ஆண்டு அலியா பட் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ’டார்லிங்ஸ்’ படத்தை ஆங்காங்கே நினைவூட்டினாலும் குடும்ப வன்முறையோடு சேர்த்து, டாக்ஸிக் பேரண்டிங், சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆண் மய்யப் பார்வை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கையறு நிலையில் இருக்கும் பெண்கள் இன்றைய டெக்னாலஜியின் வளர்ச்சியை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தி பயன்பெறலாம் என்பவை குறித்தும் அழகாகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.
முதல் காதல் தொடங்கி, கணவனிடம் அடிவாங்கி முடங்குவது, மீண்டெழுந்து உதை விடுவது, நிராசை, கோபம் என நுண்ணிய உணர்வுகளை அவ்வளவு அழகாக பிரதிபலித்து படம் முழுவதும் ஜெயாவாக நம்மை ஆட்கொள்கிறார் தர்ஷனா.
பத்தே நிமிடங்கள் சொச்சம் படத்தில் வந்து அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறது அஜூ வர்கீஸின் பாத்திரம். சமூக வலைதளங்களில் பெண்ணியம் பேசியபடி தனிப்பட்ட வாழ்வில் பிற்போக்கு ஆணாதிக்கவாதியாக வலம் வரும் நபர்களை நினைவூட்டி கிச்சு கிச்சு மூட்டி செல்கிறது.
தினம் காலை இடியாப்பம் - கடலைக்கறி மட்டுமே சாப்பிடுவது, புது டிஷ் செய்து கவர முயற்சிக்கும் ஜெயாவை இடது கையால் டீல் செய்வது, அடி வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என கெத்து காண்பிப்பது என அடிப்படைவாத கணவனை அப்படியே கண் முன் நிறுத்தி கோபம், சிரிப்பு இரண்டையும் வரவழைக்கிறார் பாசில் ஜோசஃப்.
“ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்வில் தேவையானவை சமநீதி, சமத்துவம், சுதந்திரம்” , ”கணவர்களை பிரிந்த மனைவிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனென்றால் அவர்களால் தனியாக வாழ்ந்து விடமுடியும்” போன்ற வசனங்கள் கவனமீர்க்கின்றன.
ஆனால் தர்ஷனா பதிலடி கொடுக்கத் தொடங்கிய பின் படம் முழுக்க நிரம்பி வழியும் நகைச்சுவை எங்கே குடும்ப வன்முறையின் தீவிரத் தன்மையை குறைக்கிறதோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
ஒரு மோசமான குடும்ப உறவில் இருந்து மீண்டு வர ஒரு பெண் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் ராஜேஷ் போன்ற ஆண்கள் இறுதி வரை இதனை உணர முடியாமல் புரையோடிப்போன சமூக கட்டமைப்பிலேயே தான் இருப்பார்கள். பெண்களே தான் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகப் பேசி ஜெயாவாக நம் இதயங்கள வென்றிருக்கிறார் தர்ஷனா.
அக்.28 திரையரங்குகளில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் சென்ற வாரம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.