நீலம் புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்த ஜே. பேபி திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
கதை என்ன?
மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் என 5 குழந்தைகளைப் பெற்ற தாய் ஊர்வசி. கணவர் மறைவுக்குப் பின்னர் தனி ஒருவராக குழந்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு ஆளாக்கியுள்ளார். ஊர்வசியின் மூத்த மகன் மாறன். கடைசி மகன் தினேஷ். குடும்பப் பிரச்னை காரணமாக அண்ணன் மாறன் குடும்பத்தில் இருந்து தினேஷ் ஒதுக்கி வைக்கப்படுகின்றார். அண்ணன் மாறனைத் தவிர மற்ற அனைவரும் தினேஷுடன் நல்ல உறவிலேயே இருக்கின்றனர். இவர்களின் அம்மா ஊர்வசி வீட்டில் இருந்து வெளியேறி கொல்கத்தாவுக்குச் சென்று விடுகின்றார். அவரை திரும்ப வீட்டிற்கு அழைத்து வர அண்ணன் மாறனும் தம்பி தினேஷும் கொல்கத்தாவுக்குச் செல்கின்றனர். குடும்பப் பிரச்னையால் பேசாமல் இருக்கும் இருவரும் இணைந்து எப்படி தங்களது அம்மாவை மீட்டு வருகின்றனர் என்பது மீது கதை.
எடுபட்டதா திரைக்கதை?
படத்தின் மைய்யமே ஊர்வசியின் கதாப்பாத்திரம்தான். படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே ஓரிரு காட்சிகள் மட்டும் வரும் ஊர்வசி, இரண்டாம் பாதியில்தான் அதிகப்படியான காட்சிகளில் இடம் பெறுகின்றார் ஊர்வசி. முதல் பாதி முழுக்க முழுக்கவே மாறன் மற்றும் தினேஷ் கொல்கத்தாவுக்கு போவதும் அங்கு ஊர்வசி இருக்கும் இடத்தை தேடிச்சென்று அவரை பார்க்க முயற்சிப்பதுமாகவே உள்ளது. இது கதைக்கு தேவை என்றாலும் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை.
இரண்டாம் பாதியில் பெரும்பாலும் ஊர்வசியே வருவதால் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளும் அவரது நடிப்பும் கதாப்பாத்திரத்தை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக கொண்டு வருகின்றது. முதிர்ச்சியான நடிப்பினால் ஊர்வசி தன்னை நடிப்பின் அரசியாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். குறிப்பாக காமெடியான வசனங்களை மிகவும் சீரியஸாக வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளுகின்றார். பல காட்சிகளில் அப்லாஸ்களை அள்ளுகின்றார். எப்போதும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களை நடித்த மாறன் இந்த படத்தில் சீரியஸான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
குடும்ப கதை:
ஒரு சில காட்சிகளில் ஊர்வசி மற்றும் தினேஷின் நடிப்பு ரசிகர்களை எமோஷ்னல் அடையச் செய்கின்றது. படத்துக்கு டோனி பிரிட்டோவின் இசை பெருமளவு கைகொடுத்துள்ளது. அம்மா பாசம், அண்ணன் தம்பி சண்டை என குடும்பக் கதை என்பதால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளியான முழுக்க முழுக்க ஒரு குடும்பக்கதையை மைய்யப்படுத்திய திரைப்படமாக ஜே.பேபி அமைந்துள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் ஜே. பேபியை மீட்க உதவி செய்த மூர்த்தி என்பவர் படத்திலும் நடித்துள்ளார்.
படத்தின் பாதிக்கதை கொல்கத்தாவிலும் மீதிக்கதை சென்னையிலும் நடைபெறுவதைப் போல் உள்ளது. கொல்கத்தாவை கூடுமானவரை தனது கேமராவில் நமக்கு நெருக்கப்படுத்த முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். ஊர்வசிக்கான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் ஜே.பேபி ரசிகர்களின் மனதினை உருக்கி இருக்கக் கூடும்.