Iraivan Movie Review in Tamil:  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'இறைவன்' படம். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐ.அஹமது இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள  “இறைவன்” படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். 


படத்தின் கதை


இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே சைக்காலஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பது போன்று ட்ரெய்லர் அமைந்திருந்தது. போதாக்குறைக்கு படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் படம் பார்க்க வேண்டாம் என ஜெயம் ரவியே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி என்ன கதை எனப் பார்த்தால், நம்மை அச்சப்படுத்தும் காட்சிகள் தான் இறைவன் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன.


“மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு” என்ற கேப்ஷனுடன் தொடங்கும் படத்தின் முதல் காட்சியே மொத்த கதையையும் சொல்லி விடுகிறது.  தப்பு பண்றவங்களை கடவுள் தண்டிக்கும் வரை காத்திருக்காமல் தன்னை கடவுளாக எண்ணிக்கொண்டு என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவிக்கும், தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு கொலைகள் செய்யும் ராகுல் போஸூக்கும் இடையே நடக்கும் யுத்தமே இப்படத்தின் அடிப்படை கதையாகும். 


சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்கள் மிக மிக மிகக் கொடூரமான முறையில் கண்களை பறித்தும், கால்களை அறுத்தும் கொலை செய்யப்படுகிறார்கள்.  இதனையெல்லாம் பிரம்மா எனும் சைக்கோ கொலைகாரன் செய்யும் நிலையில், அந்நபரைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகளான அர்ஜூன், அவருடைய நண்பர் ஆன்ட்ரூ டீம் முயற்சிக்கிறது.


இதில் பிரம்மா சிக்க, ஆன்ட்ரூ உயிரிழக்கிறார். இதனால் மன அழுத்தம் காரணமாக போலீஸ் வேலையில் இருந்து அர்ஜூன் ஒதுங்குகிறார். ஒரு கட்டத்தில் போலீசில் இருந்து தப்பிக்கும் பிரம்மா மீண்டும் முன்பை விட சீரியல் கொலைகளை கொடூரமாக  செய்கிறார். இதில் ஜெயம் ரவியை சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.


இதனால் போலீஸ் துறை விழி பிதுங்கி நிற்கிறது.  இறுதியாக பிரம்மா சிக்கினாரா.. அவரின் நோக்கம் தான் என்ன... என்பதை பதைபதைக்க வைக்கும் அளவுக்கு எதிர்பாராத திரைக்கதையோடு த்ரில்லர் விருந்து படைத்துள்ளார் ஐ.அஹமது. 


நடிப்பு எப்படி?


இந்தப் படத்தில் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். அர்ஜூனாக வரும் ஜெயம் ரவி ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்குகிறார். மேலும் ஆக்ரோஷம், இயலாமை, இழப்பு, வெளிப்படுத்த முடியாத அன்பு என அனைத்தையும் கலந்து கட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ்  வாங்குகிறார்.


இரண்டாவதாக வில்லனாக நடித்திருக்கும் ராகுல் போஸ் பார்வையிலேயே பயத்தை வரவழைக்கிறார். ஸ்மைலி கில்லர் பிரம்மா என்ற அந்த  சைக்கோ கேரக்டரை அச்சு அசலாக கண்முன்னே நடத்துகிறார்.  இவர்களைத் தவிர நயன்தாரா, சார்லி, நரேன், அழகம் பெருமாள், பகவதி பெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி என அனைவரும் நடிப்பில் மிளிர்கிறார்கள். 


நிறை, குறை


இந்தப் படத்தின் கதை வழக்கமான சைக்கோ திரில்லர் படங்களில் வரும் அதே கதைதான் என்றாலும், ஹார்ட் பீட்டை எகிற செய்யும் அளவுக்கு இயக்குநர் ஐ.அஹமதுவின் திரைக்கதை இருக்கிறது. அதுதான் இருக்கை நுனியில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. மேலும் இடைவேளை ட்விஸ்ட்டும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது.


இறைவன் படத்துக்கு மற்றொரு மிகப்பெரிய பலம், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை தான்.  முதல் பாதி முழுக்க மிரள வைக்கும் அளவுக்கு அசத்தியுள்ளார். மேலும் ஹரி கே.வெங்கடத்தின்  ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது. இப்படி படத்தில் பாராட்ட நிறைய விஷயங்கள் இருந்தாலும் சில விஷயங்கள் மிகவும் உறுத்தலாக அமைந்துள்ளது. 


படத்தின் முதல் மைனஸ் நீண்ட நேரம் படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு உண்டாக்கி சலிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக பல இடங்களில் லாஜிக் இல்லாமல் இழுத்த பக்கமெல்லாம் கதை செல்கிறது. அதனை எடிட்டில் கட் செய்திருக்கலாம். அதேபோல் சைக்கோ த்ரில்லர் படங்களுக்கு பெண்கள் தான் பலியாடாக கிடைத்தார்களா என தெரியவில்லை. இதிலும் மரணத்தைப் பார்த்து மகிழும் சைக்கோ கேரக்டரின் டார்கெட் இளம்பெண்கள் தான். உண்மையில் படம் பார்க்கும் பெண்கள் தனியாக செல்ல மிரளும் அளவுக்கு பயத்தைக் காட்டியுள்ளார்கள்.


மொத்தத்தில் படம் எப்படி?


கொடூரமான கொலைகள் ஒரு புறம் இருக்க, அதை வெளிப்படையாக காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றை நிறையவே குறைத்திருக்கலாம்.  ரசிகர்களுக்கு த்ரில்லரான எக்ஸ்பீரியன்ஸை தர வேண்டும் என்ற இயக்குநரின் மெனக்கெடல் எல்லாம் சரி தான். ஆனால் உணர்வுகளில் ஊறிப்போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு வித அதிர்ச்சியை தான் உண்டாகும். அதனால் குழந்தைகள் மட்டுமல்ல சற்று மனம் பலவீனமாக இருப்பவர்கள் கூட இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது...!