அனிமே படங்களின் மாஸ்டராக கருதப்படும் ஹாயாவோ மியாசாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள The Boy and the Heron படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் சிற்ந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற இப்படத்தின் விமர்சனம் இதோ.
தி பாய் அண்ட் தி ஹெரான் (The Boy and the Heron)
1940 களில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் தலைநகரான டோக்யோவில் ஆரம்பிக்கிறது படத்தின் கதை. விமானப் படை தாக்குதலில் ஒரு மருத்துவமனை தீப்பற்றி எரிய அதில் தனது அம்மாவை இழக்கிறான் சிறுவன் மஹிதோ. தன் அம்மாவின் இறப்பிற்கு பிறகு கிராமப்புறத்தில் இருக்கும் தன் அம்மாவின் பூர்வீக வீட்டில் குடிபோகிறான். மஹிதோவின் அம்மாவின் சகோதரி நாட்சுகோவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் அவன் தந்தை. மியாசாகியின் முந்தைய படமான ஸ்பிரிட் அவே படத்தில் வருவது போல் பெரிய உருண்டை தலைகளைக் கொண்ட பாட்டிகள் இந்த படத்திலும் வருகிறார்கள்.
பணிப்பெண்களாக இருக்கும் இந்த பாட்டிகளுக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவையுடன் அமைந்திருக்கின்றன.ஒருபக்கம் இவர்களின் நகைச்சுவை செல்ல மறுபக்கம் தன் அம்மாவின் சாயலில் இருக்கும் நாட்சுகோவை அன்னையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மஹிதோவின் மனம். தனிமை, இழப்பின் வலி , குற்றவுணர்ச்சியில் நாளுக்கு நாள் தனியாக தவிக்கும் மஹிதோ ஒரு நாள் தன்னைத்தானே வறுத்தியும் கொள்கிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்புகள் சூழ மஜிதோ வளர்ந்து வரும் நேரத்தில் அவனுடைய சித்தி நாட்சுகோவும் திடீரென்று காணாமல் போகிறார். மனிதர்கள் எதார்த்தத்தின் குரூரங்களை சந்திக்க முடியாமல் போகையில் அவர்களுக்கு வாழ்க்கை மீதான பற்றை உறுதிசெய்ய ஒரு மேஜிக் தேவையில்லையா? அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தத் தொடங்குகிறார் மியாசாகி.
தனது வீட்டின் அருகில் அடிக்கடி ஒரு சாம்பல் நிற கொக்கை பார்க்கிறான் மஹிதோ. இறந்த அவனது அன்னை காட்டுவதாக பொய் சொல்லி மஹிதோவை அருகில் இருக்கும் பாழடைந்த கோட்டை ஒன்றுக்கு அழைத்து செல்கிறது கொக்கு. இன்னொரு முறை வெளியில் பார்க்க பாழடைந்து கிடக்கும் இந்த கோட்டை பல்வேறு நிகர் உலகங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் பின்னி இருக்கும் இந்த உலகில் மனிதர்களின் உலகத்தில் கடைபிடிக்கப்படும் எந்த நியதிகளும் இல்லை. மாறாக இந்த உலகத்தில் மனிதர்கள் ராட்சச கிளிகளுக்கு பிடித்த உணவாக இருக்கிறார்கள்.
பிறப்பு இறப்பு என்கிற சுழற்சி , ஒன்றை கொன்று மற்றொன்று வாழும் நியதி எல்லா உலகத்திற்கு பொருந்தக் கூடியவை என்பதை இந்த உலகத்தில் மஹிதோ உணர்ந்து கொள்கிறான். ராட்ச்சச கிளிகள் , கொழுக்கட்டைப் போல் குட்டி குட்டி ஆன்மாக்கள், நெருப்பை சக்தியாக கொண்ட சிறுமி என தனது கற்பனையில் பார்வையாளர்களை வியக்கவைக்கிறார் மியாசாகி. இறுதியில் தனக்கு பிடித்த மாதிரியான ஒரு உலகத்தை தானே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு மஹிதோவிற்கு கிடைக்கிறது இந்த வாய்ப்பை ஏற்று அவன் இந்த புது உலகத்தில் இருக்கிறானா அல்லது தனது நிஜ உலகத்திற்கு திரும்புகிறானா என்பதே படத்தின் கதை.
மியாசாகியின் முந்தைய படங்களைக் காட்டிலும் சற்று சிக்கலான கதையமைப்பைக் கொண்ட படம் இது. வழக்கமாக ஹாலிடவுட் ஸ்டுடியோக்களில் உருவாகும் அனிமேஷன் படங்களைப் போல் தொடக்கம் இடைவெளி முடிவு என்று இல்லாமல் ஒவ்வொரு கட்டத்திலும் திருப்பங்களையும் அதில் பல அர்த்தங்களை கற்பனை செய்துகொள்ளும் வகையில் உள்ளது இப்படம்.
இந்த மாதிரியான படங்களில் வெளிப்படையான அர்த்தங்களைக் காட்டிலும் கதை நடக்கும் சூழல் அதில் காட்டப்படும் விந்தையான நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து எந்த மாதிரியான ஒரு தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றன என்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தி பாய் அண்ட் தி ஹெரான் ஒரு பார்வையாளனை வேறு ஒரு உலகத்திற்கே கூட்டிச் செல்கிறது.
பெருந்துன்பத்தில் இருக்கும் மனிதர்கள் தங்களுக்கென ஒரு தனி உலகை உருவாக்கி அதற்குள்ளாகவே தங்களை தொலைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். நீ தொலைந்து போகதான் ஆசைப்படுகிறாய் என்றால் நான் உருவாக்கிய உலகத்தில் தொலைந்து போ' என்பது போல் ஒரு படைப்பை 82. வயது ஜாம்பவான் மியாசாகி படைத்திருக்கிறார்.